Published:Updated:

நெல்லை: `நீதிமன்றம் தராத தீர்ப்பை மக்கள் தந்திருக்கிறார்கள்!’ - அப்பாவு நெகிழ்ச்சி

ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க வேட்பாளரான அப்பாவு வெற்றிபெற்றுள்ளார். கடந்த தேர்தல் தொடர்பாக, தான் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இதுவரை வெளியாகாத நிலையில், தற்போது மக்கள் தீர்ப்பு வந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நெல்லை மாவட்டம், ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் 1996-ல் முதன்முறையாக வெற்றிபெற்ற அப்பாவு, அதன் பின்னர் அடுத்தடுத்து இருமுறை வெற்றியைக் கைப்பற்றினார். 2016-ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க-வின் ஐ.எஸ்.இன்பதுரையை எதிர்த்து தி.மு.க சார்பில் போட்டியிட்ட அப்பாவு, 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டது.

'சென்ற முறை வழக்கு, இந்த முறை வெற்றி!' - சவாலில் வென்ற 'ராதாபுரம்' அப்பாவு #TNelections2021

தனக்கு விழுந்த தபால் வாக்குகளை நிராகரித்து, தன்னை தோல்வியடையச் செய்ததாக அவர் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். அதனால் கடைசி சில சுற்று வாக்குகளை மறுபடியும் எண்ணுவதுடன், தபால் வாக்குகளையும் மீண்டும் எண்ணுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றம் வாக்குகளை எண்ணி முடித்தபோதிலும், அதன் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என ஐ.எஸ்.இன்பதுரை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த முறையீட்டின் காரணமாக இதுவரை அப்பாவு வழக்கில் தீர்ப்பு வெளியாகாமல் இருக்கிறது.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை
representational image

இந்தநிலையில், இந்தத் தேர்தலில் மீண்டும் இருவரும் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே இழுபறியாக நீடித்த இந்தத் தொகுதியில், அப்பாவு 80,241 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க-வின் ஐ.எஸ்.இன்பதுரைக்கு 75,749 வாக்குகள் கிடைத்தன. அதனால் அப்பாவு 4,492 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராதாபுரம் தொகுதியில் ஐந்தாவது முறையாகப் போட்டியிட்டு வென்றுள்ள அப்பாவு நம்மிடம் பேசுகையில், ``கடந்த தேர்தலில் என்னை 49 வாக்குகளில் தோற்றதாக அறிவித்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, அதை சீலிட்ட கவரில்வைத்துவிட்டது.

வெற்றிச் சான்றிதழ் பெற்ற அப்பாவு
வெற்றிச் சான்றிதழ் பெற்ற அப்பாவு

ஐந்து வருடங்களுக்கு மேலாகியும் அந்த வழக்கில் எனது வெற்றியை நீதிமன்றம் அறிவிக்கவில்லை. இப்போது மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறேன். நீதிமன்றம் இதுவரை கொடுக்காத தீர்ப்பை மக்கள் எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். இதைத் தலைவணங்கி ஏற்றுக்கொண்டு, இந்தத் தொகுதி மக்களுக்கு நன்மைகள் கிடைக்க, தொடர்ந்து பாடுபடுவேன்” என்றார் நெகிழ்ச்சியாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு