நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்த நிலையில், மாநிலத் தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், `நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், 2,062 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
மேலும்,14,324 வேட்பாளர்கள் தங்களது மனுக்களைத் திரும்பப் பெற்றனர். 218 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இறுதியாக 12,607 பதவியிடங்களுக்கு 57,778 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்' என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
