Published:Updated:

போட்டியில் 39 பேர்!- முத்தமிழ்ச் செல்வன் விக்கிரவாண்டி அ.தி.மு.க வேட்பாளரானது எப்படி?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான தங்கள் கட்சி வேட்பாளரை அறிவித்திருக்கிறது அ.தி.மு.க தலைமை.

Muthamizhselvan
Muthamizhselvan ( T.Silambarasan )

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏ-வான தி.மு.க-வைச் சேர்ந்த ராதாமணி கடந்த ஜூன் மாதம் உயிரிழந்ததையடுத்து அந்தத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது நாங்குநேரி, புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தலை அறிவித்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

OPS - EPS
OPS - EPS

அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் நேரடியாக மோதும் இந்தத் தொகுதியில், தங்கள் கட்சியின் விழுப்புரம் மத்திய மாவட்டப் பொருளாளர் நா.புகழேந்தியை வேட்பாளராக நேற்று அறிவித்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.

அதேபோல அ.தி.மு.க-வில் கடந்த 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாள்களும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. விக்கிரவாண்டியின் ஒன்றியச் செயலாளர் வேலு, காணை ஒன்றியச் செயலாளர் முத்தமிழ்ச் செல்வன், முன்னாள் எம்.பி லட்சுமணன், வழக்கறிஞர் தம்பிதுரை, பொதுக்குழு உறுப்பினர் பன்னீர் உட்பட 39 பேர் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். இந்தநிலையில், இன்று காணை ஒன்றியச் செயலாளர் முத்தமிழ்ச் செல்வனை வேட்பாளராக அறிவித்திருக்கிறது அ.தி.மு.க தலைமை. சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தீவிர ஆதரவாளரான முத்தமிழ்ச் செல்வன், காணை ஒன்றியத்தின் அ.தி.மு.க செயலாளராக இருக்கிறார். கடந்த 1985 முதல் 1991 வரை கல்பட்டு ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பு வகித்த இவர்,

C.V.Shanmugam
C.V.Shanmugam

அம்மா பேரவை ஒன்றியச் செயலாளர், ஒன்றிய துணைத் தலைவர், ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்திருக்கிறார். 2015-ம் ஆண்டு முத்தமிழ்ச் செல்வன் வகித்த ஒன்றியச் செயலாளர் பதவியை இவருக்குப் பெற்றுத் தந்தது முன்னாள் எம்.பி லட்சுமணன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் என இரு அணிகளாகப் பிரிந்தபோது ஓ.பி.எஸ் அணிக்கு வருமாறு முத்தமிழ்ச்செல்வனை அழைத்துப் பார்த்தார் முன்னாள் எம்.பி லட்சுமணன். ஆனால், அதை ஏற்க மறுத்த முத்தமிழ்ச்செல்வன் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தீவிர ஆதரவாளராக மாறி அவரிடம் தஞ்சமடைந்தார். அதுதான் தற்போது அவரை வேட்பாளராக்கியிருக்கிறது.