Published:Updated:

`25 ஆண்டுகளாகத் தொடரும் சோகம்!' - கோவை மாவட்டத்தில் தி.மு.க படுதோல்விக்குக் காரணம் என்ன?

1996 சட்டமன்றத் தேர்தலில், கோவையை முழுவதுமாகக் கைப்பற்றிய தி.மு.க-வால் அதன் பிறகு நடந்த ஐந்து தேர்தல்களில் பாதித் தொகுதிகளைக்கூட வெல்ல முடியவில்லை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. தமிழகத்தில் பெரும்பாலும் தி.மு.க வெற்றிபெற்றிருந்தாலும், கொங்கு மண்டலத்தை மீண்டும் கைப்பற்றி அ.தி.மு.க வலுவான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் அ.தி.மு.க இங்கு வலிமையுடன் இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறது.

கோவை அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்
கோவை அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்
வேலுமணி ஸ்கெட்ச்.. கோவை மீண்டும் அதிமுக வசமானது எப்படி?

முக்கியமாக கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணி வென்று ஸ்வீப் அடித்துள்ளனர். கோவையை முழுவதுமாக இழப்பது இது தி.மு.க-வுக்கு முதன்முறை இல்லை. கடந்த ஐந்து சட்டமன்றத் தேர்தல்களாகவே தி.மு.க கோவை மாவட்டத்தை இழந்துதான்வருகிறது.

1996 சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் தி.மு.க பிரமாண்ட வெற்றிபெற்றது. அப்போது, கோவை மாவட்டம் முழுவதையும் கைப்பற்றியது. ஆனால், அதற்குப் பிறகு நடந்த 2001 சட்டமன்றத் தேர்தலில் அதில் ஒரு தொகுதியைக்கூட தி.மு.க தக்கவைத்துக்கொள்ளவில்லை. 2001-ல் கோவை மாவட்டத்தை அப்படியே தூக்கியது அ.தி.மு.க.

கோவை
கோவை

2006 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைத்தாலும், கோவை மாவட்டத்தில் இரண்டு தொகுதிகளை மட்டுமே தி.மு.க கைப்பற்றியது. 2011 சட்டமன்றத் தேர்தலில் கோவையை மீண்டும் ஸ்வீப் அடித்தது அ.தி.மு.க. 2016 சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியை மட்டும் தி.மு.க கைப்பற்றியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கோவை மாவட்டத்தை மீண்டும் ஸ்வீப் அடித்துள்ளது. இதனால் பலரும் சமூக வலைதளங்களில் கோவையை விமர்சித்துவருகின்றனர். ஆனால், கோவை மக்கள் அ.தி.மு.க-வினரைத் தவிர வேறு யாருக்கும் வாக்களிக்கவே மாட்டார்களா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

பி.ஆர். நடராஜன்
பி.ஆர். நடராஜன்

2019 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலம் முழுவதும் தி.மு.க ஸ்வீப் அடித்தது. அ.தி.மு.க அமைச்சர்களின் தொகுதிகளிலேயே தி.மு.க-தான் முன்னிலை வகித்தது. நாட்டிலேயே பி.ஜே.பி-யை வீழ்த்திய ஒரே கம்யூனிஸ்ட் என்ற பெருமையுடன் கோவை எம்.பி-யாக இருக்கிறார் பி.ஆர்.நடராஜன்.

தற்போதைய தேர்தலில்கூட கோவை தெற்கு, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையம், கோவை வடக்கு போன்ற தொகுதிகளில் 5,000 வாக்குகளுக்குள்தான் வித்தியாசம். கோவை வடக்குத் தொகுதியைத் தவிர மற்ற நான்கு தொகுதிகளில் 1,000 – 2,000 வாக்குகள்தான் வித்தியாசம். இங்கு இன்னும் இறங்கி அடித்திருந்தால் முடிவுகள் மாறியிருக்கும்.

கோவை
கோவை

1996 சட்டமன்றத் தேர்தலில் கோவை முழுவதுமாகக் கைப்பற்றிய தி.மு.க-வால் அதன் பிறகு நடந்த ஐந்து தேர்தல்களில் பாதி தொகுதிகளைக்கூட வெல்ல முடியவில்லை. அ.தி.மு.க-வைப்போல வலுவான தலைவர்கள் இல்லாமல் இருப்பதே தி.மு.க-வுக்கு இங்கு பெரிய மைனஸ்.

கோவையில் இரண்டு தசாப்தங்கள் மாவட்டச் செயலாளர், அமைச்சர் என பவர்ஃபுல்லாக இருந்த பொங்கலூர் பழனிசாமி செய்த சாதிய அரசியலை தி.மு.க-வினரே விரும்பவில்லை. அவரது சாதிய பாசம் அ.தி.மு.க வரை நீண்டது. அந்தப் பாசத்தில் வளர்க்கப்பட்டவர்தான் இப்போதைய அ,தி.மு.க-வின் முக்கிய அடையாளமாக இருக்கும் வேலுமணி.

பொங்கலூர் பழனிசாமி
பொங்கலூர் பழனிசாமி

2006 சட்டமன்ற தேர்தலில்தான் வேலுமணி முதன்முறையாக போட்டியிட்டு வென்றார். அவருக்கு பல கான்ட்ராட்க்களை கொடுத்து பொருளாதாரரீதியாக வலுப்படுத்தியது பொங்கலூர் பழனிசாமி காலகட்டத்தில்தான். அதன் பிறகு வேலுமணி அதே ஃபார்முலாவைக் கையில் எடுத்தார்.

பல தி.மு.க-வினர் வேலுமணியால் பயனடைந்துள்ளனர். வேலுமணியின் வளர்ச்சி இங்கு அ.தி.மு.க-வை மட்டுமல்லாமல், தி,மு.க-வையும் இழுத்தது. தி.மு.க-வில் தனது ஏராளமான ஸ்லீப்பர் செல்களைப் பரவவிட்டார். பொங்கலூர் பழனிசாமியின் ஆதிக்கம் முடிந்தாலும், அதன் பிறகு இங்கு வந்த நிர்வாகிகளும் அதே சாதிய அரசியலில் சிக்கினர்.

வேலுமணி
வேலுமணி

உட்கட்சிப் பூசலும் பூகம்பமாக வெடித்துகொண்டேதான் இருக்கும். மற்ற கட்சிகளிலும் உட்கட்சிப் பூசல்கள் இருக்கத்தான் செய்யும். அதைக் கட்டுப்படுத்தத்தான் தலைவர்கள் இருப்பர். ஆனால், கோவை தி.மு.க-வில் உட்கட்சிப் பூசலுக்கு காரணமே அந்தத் தலைவர்கள்தான்.

கவுண்டர்கள் இருந்தால், நாயுடுக்களை எதிப்பார்கள். நாயுடுக்கள் வந்தால், கவுண்டர்களை எதிர்ப்பார்கள். கடைசிவரை மக்களிடம் இறங்கி அரசியல் செய்ய எந்த நிர்வாகியும் இல்லை. அதை அ.தி.மு.க சரியாகப் பயன்படுத்திக்கொண்டது. ஒவ்வொரு தெருவிலும் அ.தி.மு.க-வினர் மக்களிடம் இறங்கிப் பழகினர். ஆனால், தி.மு.க-வினருக்கு உட்கட்சி அரசியலை பார்க்கவே நேரம் போதவில்லை.

தி.மு.க
தி.மு.க

பணத்தைக் கொடுத்து சரிகட்டும் அரசியலிலும் அ.தி.மு.க கைதேர்ந்துவிட்டது. தி.மு.க-வில் அ.தி.மு.க கொடுக்கும் கமிஷன்களைப் பலர் நம்பியிருந்தனர். இதனால் எந்தவிதத்திலும் தி.மு.க-வால், அ.தி.மு.க-வை வீழ்த்த முடியவில்லை.

சில தொகுதிகளில் மட்டுமே தி.மு.க வேட்பாளர்கள் கடந்த சில ஆண்டுகளாகக் களப்பணி செய்துள்ளனர். பெரும்பாலான இடங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன்தான் அவர்கள் களத்துக்கே வந்தனர். பல பகுதிகளில் உட்கட்சிப் பூசலையும், பணப் பிரச்னையையும் தி.மு.க சரிகட்டுவதற்குள் தேர்தல் முடிந்துவிட்டது. மற்ற பகுதிகளைப்போல இங்கும் சாதியும் பணமும் குறிப்பிட்ட பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும்.

மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

ஆனால், சாதிய மனப்பான்மையைக் கடந்து களத்தில் நிற்க வேண்டியது தி.மு.க-தான். இதையெல்லாம் சரிசெய்து மக்களடு மக்களாக நின்றால் மட்டுமே அடுத்த தேர்தல்களில் இங்கு தி.மு.க கௌரவமான வெற்றிகளைப் பெற முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு