Published:Updated:

பீகார்: வெளியாகின தேர்தல் முடிவுகள்... மீண்டும் ஆட்சியமைக்கிறது பா.ஜ.க - ஐக்கிய ஜனதா தள கூட்டணி! #LiveUpdates

மீண்டும் ஆட்சியமைக்கிறது பா.ஜ.க - ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி
மீண்டும் ஆட்சியமைக்கிறது பா.ஜ.க - ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி

பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள், பிற மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் ஆகிய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!

10 Nov 2020 6 PM

பீகார் தேர்தல் முடிவுகள்!

ஜே.டி.யு + பா.ஜ.க கூட்டணி - 125

ஆர்.ஜே.டி + காங்கிரஸ் (மகா கூட்டணி) -110

மற்றவை - 08

11 Nov 2020 5 AM

பீகாரில் மீண்டும் ஆட்சியமைக்கிறது பா.ஜ.க - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி

பீகார் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நள்ளிரவைக் கடந்து அதிகாலை வரை இந்த முறை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைக்கிறது.

பீகார்
பீகார்

காங்கிரஸ் ஆர்.ஜே.டி கூட்டணி கடும் சவால் அளித்தபோதும் 110 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. ஐந்து இடங்களில் ஓவைசியின் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. பீகாரின் வெற்றி குறித்து ட்வீட் செய்திருக்கும் பிரதமர் மோடி, ஜனநாயகத்தின் முதல் பாடத்தை பீகார் உலகுக்குக் கற்றுத் தந்திருக்கிறது, என்றவர், பா.ஜ.க கூட்டணி வெற்றிபெற வாக்களித்த பெண்களுக்கு நன்றி தெரிவித்தார்.

10 Nov 2020 10 PM

பா.ஜ.க முன்னிலை!

தற்போதைய நிலவரப்படி பீகார் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி 123 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 113 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன.

10 Nov 2020 7 PM

பெரும்பான்மைக்கும் குறைவான இடங்களில் முன்னிலை...!

பிகார் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. கொரோனா பரவல் காரணமாக அதிகப்படியான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதால், தேர்தல் முடிவுகளில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. பா.ஜ.க தொடர்ந்து முன்னிலை வகித்துவந்தாலும், தற்போது பெரும்பான்மைக்குத் தேவையான 122 இடங்களுக்கும் குறைவான இடங்களிலேயே அந்தக் கூட்டணி முன்னிலையில் இருக்கிறது. பா.ஜ.க கூட்டணி 120 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 115 இடங்களிலும் முன்னிலை பெற்றிருக்கின்றன.

தனிக் கட்சிகளின் அடிப்படையில் ஆர்.ஜே.டி 77 இடங்களிலும், பா.ஜ.க 73 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன. ஆர்.ஜே.டி கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 20 இடங்களிலும் பா.ஜ.க கூட்டணி கட்சியான ஜே.டி.யு 39 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன.

10 Nov 2020 6 PM

தெலங்கானா இடைத்தேர்தல்: பா.ஜ.க வெற்றி!

தெலங்கானா மாநிலத்தில் துபாகா தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் டி.ஆர்.எஸ் கட்சியைத் தோற்கடித்து பா.ஜ.க வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார். பா.ஜ.க வேட்பாளர் ரகுநந்தன் ராவ் 1,079 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும்கட்சி வேட்பாளரை வீழ்த்தினார்.

10 Nov 2020 5 PM

முன்னேறும் காங்கிரஸ் கூட்டணி!

பீகார் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டுவருகின்றன. தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி, மாலை 4:30 மணி வரையில் 50% வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. தொடர்ந்து பா.ஜ.க கூட்டணி முன்னிலையில் இருந்துவரும் நிலையில் தற்போது அதில் சில தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் இருக்கிறது. ஒருகட்டத்தில் 100-க்கும் குறைவான இடங்களில் மட்டுமே காங்கிரஸ், ஆர்.ஜே.டி கூட்டணி முன்னிலை வகித்துவந்த நிலையில், தற்போது 110 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. மேலும் 130 + இடங்களில் முன்னிலையில் இருந்துவந்த பா.ஜ.க கூட்டணி தற்போது 124 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

பீகார் தேர்தல் களம்
பீகார் தேர்தல் களம்

பல்வேறு தொகுதிகளில் வேட்பாளர்களின் வெற்றி வித்தியாசம் என்பது மிகக் குறைவாக இருப்பதால், முன்னணி நிலவரங்கள் தொடர்ந்து மாறிவருகின்றன.

10 Nov 2020 4 PM

`42% வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன!’

பீகார் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்துவருகிறது. இந்தநிலையில் மாலை 4 மணி வரையில் 42% வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக, தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் பலர் தபால் வாக்குகளைப் பயன்படுத்தியிருப்பதாலும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தாமதமாகியிருக்கின்றன.

பீகார் தேர்தல் களம்
பீகார் தேர்தல் களம்

இதற்கிடையே, கள நிலவரம் தங்கள் கட்சிக்குச் சாதகமாக இருப்பதாக ஆர்.ஜே.டி கட்சி தெரிவித்திருக்கிறது. தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகும்போது அது தங்களுக்குச் சாதகமாக வரும் என்கிறாகள். முழுமையான முடிவுகள் இன்று நள்ளிரவுக்கு மேல்தான் வெளிவரும் என்கிறார்கள்!

10 Nov 2020 12 PM

இடைத்தேர்தல் முன்னணி நிலவரங்கள்..!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி தொடர்ந்து முன்னிலையில் இருந்துவருகிறது. அதேநேரத்தில் மேலும் சில மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முன்னணி நிலவரங்களும் தற்போது வெளியாகியுள்ளன.

கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடைபெற்ற இரண்டு தொகுதிகளிலும் பா.ஜ.க முன்னிலையில் இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் ஏழு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் ஐந்து தொகுதிகளில் பா.ஜ.க முன்னிலைவகிக்கிறது.

பா.ஜ.க - காங்கிரஸ்
பா.ஜ.க - காங்கிரஸ்

மத்தியப்பிரதேசத்தில் ஆட்சியைத் தீர்மானிக்கும் இடைத்தேர்தலில் 28 தொகுதிகளில், 16 தொகுதிகளில் பா.ஜ.க முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் 10 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.

குஜராத் மாநிலத்தில் எட்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஏழு இடங்களில் பா.ஜ.க-வும், ஓரிடத்தில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலையில் இருக்கின்றன. ஹரியானா மாநிலத்தில் பா.ஜ.க ஓரிடத்திலும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் தலா ஓரிடத்திலும் முன்னிலையில் இருக்கின்றன.

10 Nov 2020 10 AM

பீகாரில் பா.ஜ.க முன்னிலை!

நிதிஷ் குமார் - மோடி
நிதிஷ் குமார் - மோடி

பீகார் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. என்றாலும் தொடக்கம் முதலே காங்கிரஸ் கூட்டணிதான் சிறிய அளவில் முன்னிலையில் இருந்துவந்தது. இந்தநிலையில் பா.ஜ.க கூட்டணி தற்போது முன்னிலை பெற்றிருக்கிறது. தற்போதைய நிலையில், பா.ஜ.க கூட்டணி 125 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 101 இடங்களிலும் முன்னிலைவகிக்கின்றன. எல்.ஜே.பி ஏழு இடங்களிலும், மற்றவை 10 இடங்களிலும் முன்னிலைவகிக்கின்றன.

10 Nov 2020 10 AM

முக்கியத்துவம் பெறும் `மற்றவை’..!

பீகாரில் ஆட்சியைப் பிடிப்பது யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்துவருகிறது. ஆட்சியமைக்கத் தேவையான 122 என்னும் மேஜிக் நம்பரை இதுவரை எந்தக் கூட்டணியும் பெறவில்லை. முன்னணி நிலவரங்கள் இரண்டு கூட்டணிக்கும் மிக நெருக்கமாக இருப்பதால், போட்டி தொடர்ந்து கடுமையாகிவருகிறது. பா.ஜ.க கூட்டணி 110 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டண் 114 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன. பஸ்வானின் எல்.ஜே.பி ஒன்பது இடங்களிலும் மற்ற கட்சிகள் 10 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இதேநிலை நீடித்தால், பீகாரில் ஆட்சி அமைக்கும் சக்தி மற்ற கட்சிகளின் முடிவைப் பொறுத்து இருக்கும். இதனால், மற்ற `மற்றவை’ என்னும் எண் தற்போது முக்கியத்துவம் பெறுகிறது பீகாரில்..!

10 Nov 2020 9 AM

பீகாரில் கடும் இழுபறி......!

பீகாரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் - ஆர்.ஜே.டி கூட்டணி 113 இடங்களிலும், பா.ஜ.க - ஜே.டி.யு கூட்டணி 112 இடங்களிலும் முன்னணியில் இருக்கின்றன. பாஸ்வானின் எல்.ஜே.பி கட்சி ஒன்பது இடங்களிலும், மற்ற கட்சிகள் ஒன்பது இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன.

அனைத்துத் தொகுதிகளின் முன்னணி நிலவரமும் தற்போது வெளியாகியிருக்கிறது. முன்னணி நிலவரங்கள் மாறி மாறி வருகின்றன. பீகாரில் ஆட்சியைப் பிடிக்கக் கடும் போட்டி நிலவுகிறது.

10 Nov 2020 9 AM

மத்தியப்பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைக்கிறது பா.ஜ.க?!

சிவராஜ் சிங் சௌகான்!
சிவராஜ் சிங் சௌகான்!

பீகார் தேர்தல் ஒருபுறம் பரபரப்பைப் பற்றவைத்திருக்கும் நிலையில், மத்தியப்பிரதேச இடைத்தேர்தல் முடிவுகளும் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. 28 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் பா.ஜ.க கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க 17 இடங்களிலும், காங்கிரஸ் ஒன்பது இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன. வாக்கு எண்ணிக்கையில் இதேநிலை நீடித்தால் பா.ஜ.க அங்கு தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் என்று கூறப்படுகிறது.

10 Nov 2020 9 AM

முன்னணியில் காங்கிரஸ் கூட்டணி!

பீகாரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே இரு கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் - ஆர்.ஜே.டி கூட்டணி 100 இடங்களிலும், பா.ஜ.க - ஜே.டி.யு கூட்டணி 92 இடங்களிலும் முன்னணியில் இருக்கின்றன.

இன்னும் 40 இடங்களில் முன்னணி நிலவரம் வெளியாகவிருப்பதால், இரு அணிகளுக்கு இடையே கடும் போட்டு நிலவும் என்பதை தற்போதைய முன்னணி நிலவரங்கள் நமக்குக் காட்டுகின்றன.

10 Nov 2020 8 AM

தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. பீகாரில் ஆட்சி அமைக்க 122 இடங்களை வெல்வது அவசியம்.

10 Nov 2020 7 AM

பீகாரில் வெல்லப்போவது யார்....?

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜ.க இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணியும் முக்கிய கட்சியாக களத்தில் உள்ளன.

ராஷ்டிரீய லோக் சமதா கட்சி தலைமையில் ஒரு அணியும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்த ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி தனியாகவும் போட்டியிட்டன. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. பீகாரின் வால்மிகி நகர் நாடாளுமன்ற தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தல் முடிவும் இன்று வெளியாகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்த முறை தேர்தலில் அதிகபடியான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. கூடுதல் எந்திரங்கள் காரணமாக தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஆகும் எனவும் கூறப்படுகிறது. இதனால் தேர்தல் முடிவுகள் வெளியாகை மாலை வர ஆகலாம் என்று கூறப்படுகிறது.

பீகார் தேர்தல் களம்
பீகார் தேர்தல் களம்

கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி, தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று நிதிஷ்குமார் மீண்டும் முதல்வர் ஆவார் என்று ஆளும் கூட்டணி நம்பிக்கையாக உள்ளது. எனினும் மெகா கூட்டணி வெற்றி பெற்றால் ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் முதல்வர் ஆவார். அவ்வாறு அக்கூட்டணி ஆட்சி அமைத்தால், இந்தியாவிலேயே மிக இள வயதில் முதல்வர் ஆனவர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பீகார்: `மேஜிக் நம்பர் 122; வெல்லப்போவது யார்?’ - தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்
10 Nov 2020 7 AM

மத்தியபிரதேச இடைத்தேர்தலும் முக்கியம்!

தவிர பீகார் சட்டசபை தேர்தலுடன் நாட்டின் 10 மாநிலங்களில் 58 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற்று இருந்தது. இந்த தேர்தல் முடிவுகளும் இன்று வெளியாகின்றன. மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முக்கியமானது. ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் காங்கிரஸில் இருந்து விலகியதால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு நடந்த இடைத்தேர்தலாகும். அவர்கள் விலகியதால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பா.ஜ.க அரசு பதவியேற்றது.

சிவராஜ் சிங் சௌகான்
சிவராஜ் சிங் சௌகான்
ANI

இந்த தேர்தலில் குறைந்தபட்சம் 8 இடங்களில் வெற்றி பெற்றால்தான் மாநிலத்தில் சிவராஜ் சிங் சௌகான் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி தொடரும். இதனால் பீகார் தேர்தலை போலவே மத்திய பிரதேச இடைத்தேர்தல் முடிவுகளும், நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தவிர உத்தரபிரதேசம், அரியானா, மணிப்பூர், கர்நாடகா, ஜார்கண்ட், நாகலாந்து, ஒடிசா மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் இன்று நடக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு