Published:Updated:

தனித்து நிற்கும் பா.ஜ.க, கூட்டணியாக எதிர்க்கட்சிகள்... ஜார்க்கண்ட்டில் யாருக்கு வெற்றி வாய்ப்பு?

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு, தேசியப் பிரச்னைகளை விடுத்து உள்ளூர் விவகாரங்களை முதன்மைப்படுத்தி, பா.ஜ.க தேர்தலை எதிர்கொள்கிறது.

பா.ஜ.க - காங்கிரஸ்
பா.ஜ.க - காங்கிரஸ்

அக்டோபர் மாதமே தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகும், கடந்த ஒரு மாத காலமாக மகாராஷ்டிராவில் யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்பதே அரசியல் அரங்கில் விவாதப்பொருளாக இருந்துவந்தது. தற்போது அந்த சர்ச்சைகள் எல்லாம் ஒய்ந்து, உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றுவிட்டார். இத்தனை சச்சரவுகளுக்கு மத்தியிலும் இந்தியாவில் ஒரு சிறிய மாநிலம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அமைதியாகத் தயாராகிவருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தின் பரபரப்பு ஓய்ந்த பிறகு, ஊடகங்களின் கவனமும் தற்போது ஜார்க்கண்ட் பக்கம் திரும்பியுள்ளது.

ஜார்க்கண்ட்
ஜார்க்கண்ட்

பொதுத் தேர்தலில் பா.ஜ.க பெற்ற இமாலய வெற்றிக்குப் பிறகு நடைபெற்ற மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்றத் தேர்தல்கள் முக்கியமானவையாக பார்க்கப்பட்டன. இந்த இரண்டிலும் பா.ஜ.க பெரும் சரிவுகளைச் சந்திக்கவில்லை என்றாலும், இரண்டு மாநிலங்களிலும் தனிப்பெரும்பான்மை பெறும் எனச் சொல்லப்பட்ட யூகங்களிலிருந்து சிறிது பின்னடைவைச் சந்தித்துள்ளது.

``அந்த 100 பேருக்கு நன்றி... அந்த 20 பேருக்கு தேங்க்ஸ்!’’ - பா.ஜ.க-வில் இணைந்த ராதாரவி

ஹரியானாவில் எதிர்க்கட்சியான ஜே.ஜே.பி உடன் கூட்டணி வைத்து பா.ஜ.க ஆட்சி அமைத்தது. மகாராஷ்டிராவில் 105 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக வந்தபோதிலும் ஆட்சி அமைக்க முடியாமல்போனது. பொதுத் தேர்தலில் தேசியப் பிரச்னைகள், தேசப் பாதுகாப்பு, தீவிரவாதம் போன்ற விஷயங்களைக் கையிலெடுத்த பா.ஜ.க, சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைப் பிரதானமாக முன்வைத்தது. ஆனால், தேர்தலில் விவசாயிகள் பிரச்னை, பஞ்சம், வேலைவாய்ப்பு போன்ற மாநிலப் பிரச்னைகள் அதிக கவனம் பெற்றதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர். தேசியப் பிரச்னைகளையே மிகத் தீவிரமாக முன்னெடுத்துவரும் பா.ஜ.க-வுக்கு இது பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.

பாபர் மசூதி மற்றும் உச்சநீதிமன்றம்
பாபர் மசூதி மற்றும் உச்சநீதிமன்றம்

அதைத் தொடர்ந்து, பாபர் மசூதி நில வழக்கில் வந்த தீர்ப்பும் தேர்தல் களத்தில் பா.ஜ.க-வுக்கு சாதகமாக அமையும் என்று பார்க்கப்பட்டது. இத்தகைய நிலையில், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு, தேசியப் பிரச்னைகளை விடுத்து உள்ளூர் விவகாரங்களை முதன்மைப்படுத்தி, பா.ஜ.க தேர்தலை எதிர்கொள்கிறது.

கடந்த 2000-ம் ஆண்டு, பீகாரிலிருந்து பிரித்து உருவாக்கப்பட்ட ஜார்க்கண்ட் மாநிலம், 81 சட்டமன்ற இடங்களைக் கொண்டது. 2014 சட்டப்பேரவைத் தேர்தலில், பா.ஜ.க 43 இடங்களை வென்று முதல் தனிப்பெரும்பான்மை பெற்ற அரசாக அமைந்தது. ரகுபார் தாஸ் முதல்வராக இருந்துவருகிறார். இந்தியாவையே தற்போது உலுக்கிவரும் கும்பல் கொலைகள் (Mob Lynching) அதிகம் நிகழும் மாநிலமாக இருப்பது ஜார்க்கண்ட்தான். நவம்பர் 30 தொடங்கி டிசம்பர் 20 வரை ஐந்து கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 23-ம் தேதி அறிவிக்கப்பட இருக்கின்றன.

Mob Lynching
Mob Lynching

நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஜார்க்கண்ட் மாநிலம் பா.ஜ.க-வுக்கு சாதகமாக இருந்தாலும், சட்டமன்றத் தேர்தல் சவாலாகவே பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியும் - அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் அமைப்பும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டன. தற்போது, பா.ஜ.க தனித்துப் போட்டியிடுகிறது. மறுபுறம் ஜார்கண்ட் முக்தி மோர்சா (ஜே.எம்.எம்), காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கின்றன. ஜார்க்கண்ட் முக்தி மோர்சாவின் ஹேமந்த் சோரென், முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பீகாரிலும் மத்தியிலும் பா.ஜ.க கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யூ) ஜார்க்கண்ட்டில் தனித்துப் போட்டியிடுகிறது.

ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்ட 19 ஆண்டுகளில், பத்து முதல்வர்களைச் சந்தித்துள்ளது. ஐந்து ஆண்டுகள் ஆட்சிக் காலத்தை முழுமையாக நிறைவுசெய்த முதல் முதல்வர், ரகுபார் தாஸ்தான். இதை பா.ஜ.க தேர்தலில் சாதகமாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. எதிர்க்கட்சிகள் சொந்த நலனுடன் இணைவதால் பா.ஜ.க-வால் மட்டுமே நிலையான ஆட்சி தரமுடியும் என பா.ஜ.க பிரசாரத்தை முன்னெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரகுபார் தாஸ் - ஹேமந்த் சோரென்
ரகுபார் தாஸ் - ஹேமந்த் சோரென்

காங்கிரஸ் கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையில், விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும், கும்பல் படுகொலைக்கு எதிராக கடுமையான சட்டம் இயற்றப்படும் எனத் தெரிவித்துள்ளது. மறுபுறம், பாரதிய ஜனதா கட்சி வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். பிற்படுத்தப்பட்ட மற்றும் பின்தங்கிய நிலையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும், பழங்குடிப் பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 5 லட்சம் வரை நிதியுதவி அளிக்கப்படும் என்பன போன்ற திட்டங்களை முன்வைத்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில், பழங்குடியினர் 26 சதவிகிதம் உள்ளனர். அவர்களின் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிப்பதில் முக்கியமானவையாக இருக்கும். அதனால், பழங்குடி வாக்குகளை கவர்வதில் அனைத்துக் கட்சிகளும் பெரும் முனைப்பு காட்டுகின்றன. மறுபுறம், பழங்குடிகளின் வாக்குகளைப் பெரும்பாலும் நம்பியுள்ள ஜே.எம்.எம், அதைத் தக்கவைத்துக்கொள்ள போராடிக்கொண்டிருக்கிறது. பழங்குடிகளின் நிலத்தின் மீதான உரிமையை பா.ஜ.க அரசு குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதால், பழங்குடிகளின் வாக்கு அவர்களுக்கு எதிராக மாறக்கூடிய வாய்ப்புள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில்தான், சமீபத்தில் 10,000 பழங்குடி மக்கள்மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பழங்குடியினர் போராட்டம்
பழங்குடியினர் போராட்டம்
`பதல்காடி’ இயக்கத்தின் 10,000 பேர்மீது தேசத்துரோக வழக்கு..! காரணம் என்ன?

சிறுபான்மையினருக்கு எதிரான கும்பல் கொலைகள் அதிகம் நடைபெறுவதால், அவர்களின் வாக்கும் பா.ஜ.க-வுக்கு எதிராக மாறக்கூடிய வாய்ப்புள்ளது. மாநிலம் முழுமைக்குமான கட்சியின் முகமாக முன்னிறுத்தக்கூடிய தலைமை இல்லாமல் காங்கிரஸ் கட்சி தவித்துவருகிறது. காங்கிரஸ் - ஜே.எம்.எம் - ஆர்.ஜே.டி அவர்களுடைய பிரதான வாக்கு வங்கியான பழங்குடிகள், சிறுபான்மையினர், குர்மி சமூகம் ஆகியவற்றின் வாக்குகளைப் பெற முடிந்தால், தேர்தல் முடிவுகள் பா.ஜ.க-வுக்கு எதிராக மாறக்கூடிய வாய்ப்புள்ளது. ஆனால் அசாசுதீன் ஒவைசி, தன்னுடைய கட்சி மகாராஷ்டிரா போல் ஜார்க்கண்ட்டிலும் தனித்துப் போட்டியிடும் என அறிவித்துள்ளதால், சிறுபான்மையினரின் வாக்குகளும் பிரியக்கூடிய சூழ்நிலை உள்ளது. இது, காங்கிரஸ் கூட்டணிக்கு நெருக்கடியாக இருக்கும்.

தனித்துப் போட்டியிடும் பா.ஜ.க-வின் பிரச்சார உத்தி எந்த அளவிற்கு பயனளிக்கும், மகாராஷ்டிராவைத் தொடர்ந்து ஜார்க்கண்ட்டில் பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது எந்த அளவிற்கு சாத்தியப்படும் என்பதைத் தீர்மானிக்கக்கூடியதாக ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் அமையும். அடுத்து நடைபெறவிருக்கும் பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாகவும் ஜார்க்கண்ட் தேர்தல் பார்க்கப்படுகிறது.