Published:Updated:

”90 சதவிகிதம் கார்ப்பரேட் தந்த பணம்!” - இது இந்தியத் தேர்தல் ஸ்டைல்!

ஐஷ்வர்யா

புரூடெண்ட் தேர்தல் டிரஸ்ட் நிறுவனம் பாரதிய ஜனதாவுக்குக் கொடுத்த நன்கொடை ரூ.154.3 கோடி. காங்கிரஸுக்குக் கொடுத்த நன்கொடை ரூ.10 கோடி.

தேர்தல் நன்கொடை
தேர்தல் நன்கொடை

தேர்தல் வாக்கு இயந்திரங்களின் சர்ச்சைக்கு நிகரானது தேர்தல் பத்திரச் சர்ச்சை (Electoral bonds). ஒரே நாடு ஒரே தேர்தல் களேபரங்களுக்கிடையே வாக்கு இயந்திர சர்ச்சை முற்றிலுமாக மறக்கப்பட்டிருந்தது. தேர்தல் பத்திரச் சர்ச்சை குறித்துப் பேசப்படவே இல்லை. ஆனால் 2017 - 2018-ம் ஆண்டில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தேசியக் கட்சிகளுக்கு அளித்த நன்கொடைகள் குறித்த விவரம் அண்மையில் வெளியிடப்பட்டதையடுத்து தேர்தல் நிதிப் பத்திரச் சர்ச்சையும் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது.

”90 சதவிகிதம் கார்ப்பரேட் தந்த பணம்!” - இது இந்தியத் தேர்தல் ஸ்டைல்!
தெரியுமா??
புரூடெண்ட் தேர்தல் டிரஸ்ட் (Prudent electoral trust) நிறுவனம் தனது வருமானத்தில் 85 சதவிகிதத்தை பாரதிய ஜனதா கட்சிக்குக் கொடுத்து முதலிடத்தில் இருக்கிறது. அவர்கள் காங்கிரஸுக்குக் கொடுத்த நன்கொடை 10 கோடி ரூபாய்.

அண்மையில் ஜனநாயகச் சீர்திருத்தத்துக்கான கூட்டமைப்பு (Association for Democratic Reforms), 2017- 2018-ம் ஆண்டில் கட்சிகள் கார்ப்பரேட்டுகளிடமிருந்து பெற்ற நன்கொடை (Donations) குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அறிக்கையின்படி, தனது 91.58 சதவிகித நிதியை கார்ப்பரேட்டுகளிடமிருந்து பெற்று பட்டியலில் முதலிடம் பெற்றிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. காங்கிரஸ் இரண்டாம் இடத்தில் இருந்தாலும் பெற்றுள்ள நன்கொடையும் தேர்தல் வெற்றியைப் போலவே பெரும் இடைவெளியுடையதாக இருக்கிறது. தேசிய அளவில் மற்ற கட்சிகளுக்கு கார்ப்பரேட்டுகள் ஒட்டுமொத்தமாகக் கொடுத்த நன்கொடையைவிட பாரதிய ஜனதா பெற்ற நன்கொடை 12 மடங்கு அதிகம். குறிப்பாக, இதில் புரூடெண்ட் தேர்தல் டிரஸ்ட் (Prudent electoral trust) நிறுவனம் தனது வருமானத்தில் 85 சதவிகிதத்தை பாரதிய ஜனதா கட்சிக்குக் கொடுத்து முதலிடத்தில் இருக்கிறது. அந்த நிறுவனம் பாரதிய ஜனதாவுக்குக் கொடுத்த நன்கொடை ரூ.154.3 கோடி. காங்கிரஸுக்குக் கொடுத்த நன்கொடை ரூ.10 கோடி.

20,000 ரூபாய்க்கு மேல் நன்கொடை தருபவர்களின் விவரங்களைக் கட்சிகள் குறிப்பிட வேண்டும் என்று தேர்தல் ஆணைய விதியின்படி, இந்த விவரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. Prudent போன்ற தேர்தல் அறக்கட்டளை நிறுவனங்கள் பிரிவு 25-ன்கீழ் தங்களை லாபநோக்கற்ற அமைப்பாகப் பதிவு செய்துகொள்பவை. புரூடெண்ட் போன்று 2,977 நிறுவனங்களிடமிருந்து சுமார் 437.77 கோடி ரூபாய் வரை பாரதிய ஜனதா கட்சி பெற்றுள்ளது. அதேபோல காங்கிரஸ் கட்சி 777 பேரிடமிருந்து 26.7 கோடி ரூபாய் வரை பெற்றுள்ளது. இது இரண்டுமே 20,000 ரூபாய்க்கும் மேலாகக் கொடுத்தவர்கள் எண்ணிக்கை மட்டுமே. மூன்றாமிடத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 196 பேரிடமிருந்து இரண்டு கோடி ரூபாய் வரை நிதியைப் பெற்றிருக்கிறது.

இதுகுறித்து ஜனநாயகச் சீர்திருத்தத்துக்கான கூட்டமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பத்மநாபன் கூறுகையில், ``காங்கிரஸ் செய்த தவறுகளைத் திருத்தும் வகையில் ஊழலற்ற ஆட்சி, வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட அம்சங்களை முன்னிறுத்தித்தான் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. ஆனால், அவர்கள்தான் 90 சதவிகிதத்துக்கும் மேலாக நன்கொடை பெற்றிருக்கிறார்கள்.

இதில் நன்கொடைப் பணத்தின் வகுப்பீடு (Denominations) என்ன என்கிற விவரம் எதுவும் தெரியவில்லை. இது சரியான ஜனநாயக நடைமுறையில்லை. 20,000 ரூபாய்க்கும் மேல் பணம் தரும் நன்கொடையாளர்களின் விவரம் தரப்படவேண்டுமென்கிற நிலையிருக்கும்போதே இவ்வளவு பணம் புரளுகிறது. தேர்தல் பத்திரமுறை செயலாக்கப்படும் நிலையில் இந்த விவரமும் தரத் தேவையில்லை. அதனால் இதைவிட அதிகமாகவே பணப்புழக்கம் இருக்கும்.

தேர்தல்  நன்கொடை
தேர்தல் நன்கொடை

ஆனால், நன்கொடையாளர்கள் விவரம் தரப்பட்டால்தான், எந்தெந்த நிறுவனம் யாருக்கு எவ்வளவு நன்கொடை அளிக்கிறது. அதனால் அந்த நிறுவனம் என்ன பயனடைகிறது என்கிற விவரமும் தெரியவரும். கார்ப்பரேட்களின் நன்கொடை நோக்கமும் அதுதான். இப்போது தேர்தல் நன்கொடைப் பத்திரம் அமலாக்கப்படும் நிலையில் நமக்கு அந்த விவரங்கள் தெரியவராமலேயே போகும்” என்றார்.

பலனை எதிர்பார்க்காமல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி கொடுக்கத் தேவையேயில்லை என்பதுதான் எல்லோருடைய கருத்தாகவும் இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு அள்ளிக்கொடுத்த நிறுவனங்கள் என்ன பலன் அடைந்தன என்று குற்றச்சாட்டுக்களை குவித்தவர்கள், பா.ஜ.க-வுக்கு வாரிவாரிக் கொடுத்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் அடைந்துள்ள பலன் என்ன என்பதை விவரிக்கும் சூழல் நிச்சயம் ஒரு நாள் வரலாம்.