Published:Updated:

‘ஸ்டாலின் - கதிர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு!’ - வேலூரில் மீண்டும் தேர்தலை நிறுத்த திட்டமா?

லோகேஸ்வரன்.கோ
பிரபாகரன் செ

ஆம்பூரில் இஸ்லாமிய அமைப்பு தலைவர்களுடன் ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டம் நடத்திய திருமண மண்டபத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இந்த நிலையில் ஸ்டாலின், தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாக்கு சேகரித்த ஸ்டாலின்
வாக்கு சேகரித்த ஸ்டாலின்

வேலூர் மக்களவைத் தொகுதி தி.மு.க வேட்பாளரான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தை ஆதரித்து, தி.மு.க தலைவர் ஸ்டாலின் இரண்டாம் கட்ட பிரசாரத்தை நேற்று தொடங்கினார். ஆம்பூரை அடுத்த மேட்டுக்கொல்லையில் 7 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைசெய்யும் பரிதா ஷூ கம்பெனிக்குள் வாக்கு சேகரித்தார். 

ஸ்டாலின் நடத்திய ஆலோசனை கூட்டம்
ஸ்டாலின் நடத்திய ஆலோசனை கூட்டம்

அதைத் தொடர்ந்து, அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதில், தி.மு.க பொருளாளர் துரைமுருகன், வேட்பாளர் கதிர் ஆனந்த், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், ``37 தொகுதிகளைப் போன்றே வேலூர் தொகுதியிலும் லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வெற்றிபெறும் என்று உளவுத்துறை மத்திய அரசிடம் அறிக்கை கொடுத்திருக்கிறது. எப்படியும் நாங்கள்தான் ஜெயிக்கப் போகிறோம்’’ என்று ஸ்டாலின் பேசியதாகக் கூறப்படுகிறது.

மண்டபத்துக்கு ‘சீல்’ வைத்த அதிகாரிகள்
மண்டபத்துக்கு ‘சீல்’ வைத்த அதிகாரிகள்

அனுமதி பெறாமல் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதைத் தெரிந்துகொண்ட தேர்தல் பறக்கும் படையினர், உடனடியாக ஆம்பூர் தாசில்தார் சுஜாதாவிடம் புகார் அளித்தனர். அங்கு வந்த தாசில்தார், அனுமதி பெறாமல் நடைபெற்ற கூட்டத்துக்கு இடம் அளித்த காரணத்துக்காக மண்டபத்தைப் பூட்டி ‘சீல்’ வைத்தார்.

இந்த நிலையில், தாசில்தார் கொடுத்த புகாரின் பேரில் தி.மு.க தலைவர் ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்த், ஆம்பூர் பரிதா ஷூ கம்பெனி உரிமையாளர் பரிதா பாபு, ஜமாத் நிர்வாகி வி.எம்.ஜக்ரியா உள்பட, 4 பேர் மீது அனுமதியின்றி கூட்டம் நடத்தியது, மண்டபத்துக்கு இடம் அளித்தது (171 எஃப், 171 சி, 188 ஐ.பி.சி)  போன்ற மூன்று பிரிவுகளின் கீழ் ஆம்பூர் டவுன் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.

ஸ்டாலின் - கதிர் ஆனந்த்
ஸ்டாலின் - கதிர் ஆனந்த்

ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது, பணப் பட்டுவாடா புகாரில் வேலூர் தேர்தல் மட்டும் நிறுத்திவைக்கப்பட்டது. அப்போதே, வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது காட்பாடி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். மீண்டும் தேர்தல் நடைபெறும் நிலையில், வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது இன்னொரு வழக்கு பாய்ந்திருக்கிறது. இதன்மூலம், ‘‘மீண்டும் தேர்தலை நிறுத்திவைக்க சதித் திட்டம் நடக்கிறதா?’’ என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசிக்கொள்கிறார்கள்.