நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடந்துவரும் நிலையில், தேர்தலில் கட்சிகளின் பூத் கமிட்டி ஏஜென்ட்டுகள் கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளுடன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் இன்று ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ககன்தீப் சிங்,``தேர்தல் பிரசார நேரம் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்துக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் அரசு மற்றும் தனியார் இடங்களில் ஒட்டியிருக்கும் சுவரொட்டிகள் மற்றும் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும். நேற்றுவரை பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த 3,688 சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், இது போன்று தனியார் இடங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய ககன்தீப் சிங், ``காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பிரசாரம் செய்ய தடைவிதிப்பதாக அரசியல் கட்சிகளுக்கு அறிவுரை கூறியிருக்கிறேன். கட்சிக் கூட்டங்களும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே நடைபெற வேண்டும். குறிப்பாக வேட்புமனுத் தாக்கலின்போது வேட்பாளர்களுடன் யாரும் கூட்டமாக வர வேண்டாம். இந்தக் கட்டுப்பாடுகளுடன், அரசு ஏற்கெனவே அறிவித்திருக்கும் கொரோனா கட்டுப்பாடுகளையும் அரசியல் கட்சிகள் பின்பற்றி, வரும் 31-ம் தேதி வரை பேரணிகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது" என்றார்.