கட்டுரைகள்
Published:Updated:

உறங்கும் சென்னை அ.தி.மு.க... வாக்காளர் சரிபார்ப்புப் பணி என்ன ஆனது?

வாக்காளர் சரிபார்ப்புப் 
பணி
பிரீமியம் ஸ்டோரி
News
வாக்காளர் சரிபார்ப்புப் பணி

சென்னையில் அமைப்புரீதியாக அ.தி.மு.க-வுக்கு ஒன்பது மாவட்ட அமைப்புகள் இருக்கின்றன. அங்கெல்லாம் வாக்காளர் சரிபார்ப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை.

தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை, மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சமீபத்தில் வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இரட்டைப் பதிவு, இறந்தவர்கள் எனக் கடந்த ஓராண்டில் 17.69 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. வழக்கமாக வரைவுப் பட்டியல் வெளியானதும், பட்டியல் சரிபார்ப்பு மற்றும் வாக்காளர் சேர்ப்புப் பணிகளை அரசியல் கட்சிகளின் ஏஜென்ட்டுகள் மேற்கொள்வார்கள். இந்தப் பணிகளில் பிற கட்சிகளைவிட, அ.தி.மு.க எப்போதுமே முன்னிலையில் இருக்கும். ஆனால், இந்த முறை அ.தி.மு.க நிர்வாகிகள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக, சென்னை அ.தி.மு.க உறக்கநிலைக்குப் போய்விட்டது. இது குறித்து சென்னை அ.தி.மு.க-வின் சீனியர் நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “தேர்தல் நேரத்தில் பூத் ஏஜென்ட்டுகளை நியமிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே போலவே வரைவுப் பட்டியல் வெளியானதும் வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் சேர்ப்புப் பணிகளும் மிக அவசியம். சென்னை போன்ற பெருநகரங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், சேர்ப்புப் பணிகளைப் பொதுமக்களே நேரடியாகச் செய்ய முன்வர மாட்டார்கள். அப்போது கட்சியின் செயல்வீரர்கள் அந்த மக்களை அணுகினால், அவர்களைக் கவர முடியும். கூடவே தேர்தல் வியூகம் வகுக்கவும் இந்தப் புள்ளிவிவரங்கள் கைகொடுக்கும்.

உறங்கும் சென்னை அ.தி.மு.க... வாக்காளர் சரிபார்ப்புப் 
பணி என்ன ஆனது?

சென்னையில் அமைப்புரீதியாக அ.தி.மு.க-வுக்கு ஒன்பது மாவட்ட அமைப்புகள் இருக்கின்றன. அங்கெல்லாம் வாக்காளர் சரிபார்ப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாக, சென்னை அ.தி.மு.க-வில் செயல்வீரர்கள் கூட்டம்கூட சரியாக நடத்தப்படவில்லை. இதனால்தான், சட்டமன்றத் தேர்தலில் சென்னைக்கான தேர்தல் வியூகத்தை எங்களால் வகுக்க முடியவில்லை. தற்போதும் அதேநிலை நீடிப்பதால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் பாதிப்பு இருக்கும். இதையெல்லாம் சீனியர் நிர்வாகிகள் எடுத்துச் சொன்னபோதும், பாலகங்கா, வெங்கடேஷ் பாபு, ராஜேஷ், வேளச்சேரி அசோக், தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ், ஆதி ராஜாராம், விருகை ரவி, கந்தன் ஆகிய மாவட்டச் செயலாளர்கள் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை” என்று நொந்துகொண்டனர்.

இது குறித்து முன்னாள் அமைச்சரும், வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டச் செயலாளருமான ஜெயக்குமாரிடம் பேசினோம். “மழை பாதிப்பு காரணமாகத்தான் சென்னையில் வாக்காளர் சரிபார்ப்புப் பணிகளை முறையாகச் செய்ய முடியவில்லை. மழை இருக்கும் என்று முன்பே தெரிந்தும், வாக்காளர் சரிபார்ப்புப் பணியைத் தள்ளிவைக்காமல் அரசு அலட்சியமாக இருந்துவிட்டது. இருப்பினும், கொட்டும் மழையிலும் அந்தப் பணியை எங்களால் முடிந்த அளவு சிறப்பாகத்தான் செய்தோம்” என்றார் சுருக்கமாக.

ஜெயக்குமார் - ஆர்.எஸ்.ராஜேஷ்
ஜெயக்குமார் - ஆர்.எஸ்.ராஜேஷ்

வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், “எனது மாவட்டத்துக்கு உட்பட்ட ஆர்.கே.நகரில் 2,000 வாக்காளர்களையும், பெரம்பூரில் 10,000 வாக்காளர்களையும் நீக்கியிருக்கிறார்கள். ஆனால், முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில், ஒரு வாக்காளர்கூட நீக்கப்படவில்லை. எங்கள் பூத் ஏஜென்ட்டுகள் ஆங்காங்கே டேபிள் போட்டு அமர்ந்து பணியாற்றுபவர்கள் இல்லை. வீடு வீடாகச் சென்று பணி செய்பவர்கள். ஆனால், மழை காரணமாகப் பணியை விரைவாக மேற்கொள்ள முடியவில்லை. சிறப்பு முகாம்களுக்கு அரசுப் பணியாளர்கள் வராததால், விண்ணப்பமே முறையாகக் கிடைக்கவில்லை” என்றார்.

வாக்காளர் சரிபார்ப்புப் பணியில் தி.மு.க., அ.தி.மு.க இரண்டுமே கவனம் செலுத்தியதால்தான், மாநிலம் தழுவிய கட்டமைப்பை அவர்களால் வளர்த்தெடுக்க முடிந்தது. இன்று, அந்த அடிப்படைப் பணியில் கவனம் செலுத்தத் தவற ஆரம்பித்திருக்கிறது அ.தி.மு.க. அது தேர்தல் நேரத்தில் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.