Election bannerElection banner
Published:Updated:

புதுச்சேரி: `வேட்பாளர்கள் செலவுத் தொகை எவ்வளவு?!’-சட்டப்பேரவை தேர்தல் குறித்து தலைமை தேர்தல் ஆணையர்

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

2021 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவுத் தொகைக்கான வரையறை குறித்து இந்திய தேர்தல் தலைமை ஆணையர் சுனில் அரோரா தெரிவித்திருக்கிறார்.

2021 சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக புதுச்சேரிக்கு வந்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``ஜனவரி 12-ம் தேதி மாலை அங்கீகரிக்கப்பட்ட 10 அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். அதைத் தொடர்ந்து தலைமைச் செயலர், டி.ஜி.பி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினோம். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் புதுச்சேரியில் 84.08% வாக்குப்பதிவும், மக்களவைத் தேர்தலில் 81% வாக்குப்பதிவும் பதிவாகின.

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

எழுத்தறிவு சதவிகிதமும், விழிப்புணர்வும் புதுச்சேரியில் அதிகம் என்பதால் வாக்குப்பதிவின் விகிதமும் அதிகமாக இருக்கும். எந்தவித பாரபட்சமும் இல்லாமல் வெளிப்படைத்தன்மையுடன் தேர்தலை நடத்துவோம். புதுச்சேரியின் நியமன எம்.எல்.ஏ-க்கள் விவகாரம், தமிழகம்-புதுச்சேரிக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது, வெளிநாட்டு இந்தியர்களுக்கு ஆன்லைனில் வாக்குரிமை தருவது, வாக்காளர் பட்டியலிலிருக்கும் குளறுபடிகளைச் சரிசெய்வது போன்ற கோரிக்கைகளை அரசியல் கட்சித் தலைவர்கள் முன்வைத்தனர். நியமன எம்.எல்.ஏ-க்களைப் பொறுத்தவரை அரசியலமைப்புச் சட்டம் 239-A(1)-ன்படி புதுச்சேரி சட்டப்பேரவை அமைக்கப்பட்டிருக்கிறது.

மக்களால் தேர்வுசெய்யப்பட்ட 30 எம்.எல்.ஏ-க்கள் தவிர, மத்திய அரசு மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களை நியமிக்கலாம் என்ற விதிமுறை இருக்கிறது. நியமன எம்.எல்.ஏ-க்களை நியமிப்பது, வாக்களிக்கும் விவகாரம் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றமும், டெல்லி உச்ச நீதிமன்றமும் நியமன எம்.எல்.ஏ-க்களை மத்திய அரசு நியமிக்கலாம் என்று உறுதி செய்திருக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு, பட்ஜெட் ஆகியவற்றில் வாக்களிக்க மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களுக்கும் உரிமை இருக்கிறது என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் தொடர்பாக ஏழு நாள்கள் அவகாசம் அளித்து சரிசெய்ய வேண்டும். உள்ளூர் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்ட பிறகே சரிசெய்ய வேண்டும்.

2021 சட்டப்பேரவை தேர்தல்
2021 சட்டப்பேரவை தேர்தல்

தமிழகம் மற்றும் புதுச்சேரி ஒருங்கிணைந்து இருப்பதால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பொருத்தமாக இருக்கும். அதனால் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையை 952-ல் இருந்து 1,564-ஆக உயர்த்தியிருக்கிறோம். தேர்தல் பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை தந்து அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதைச் செயல்படுத்த தலைமைச் செயலருக்கு அறிவுறுத்தியிருக்கிறோம். புதுச்சேரியிலும் தமிழகத்திலும் மது விலையில் தற்போது மாற்றமில்லை. அண்டை மாவட்டங்களுக்கு புதுச்சேரியிலிருந்து மது மற்றும் சாராயம் கடத்தப்படுவதைத் தடுக்க கிடங்குகளில் மது வகைகள், இலவசப் பொருள்கள், வேட்டி, சேலை உள்ளிட்ட பரிசுப் பொருல்கள் பதுக்கப்பட்டிருக்கின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். அதற்காக கலால்துறை, மத்திய அமலாக்கத்துறை மற்றும் இது தொடர்பான துறை அதிகாரிகளிடம் தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.

பணம் மற்றும் பரிசுப் பொருள்களைத் தந்ததற்காக தமிழகத்தில் ஏற்கெனவே தேர்தல் நிறுத்தப்பட்டிருக்கிறது. கேரளப் பயணத்தை முடித்துவிட்டு, டெல்லிக்குச் சென்ற பிறகு பிப்ரவரி 16-ம் தேதி மத்திய வருமான வரித்துறை, சுங்கத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஐந்து மாநிலத் தேர்தல்கள் குறித்து முடிவுகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

அதையடுத்து செய்தியாளர்களிள் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு:

செய்தியாளர்: தேர்தல் முடிந்ததும் தொங்கு சட்டப்பேரவை ஏற்படும் நிலையில் நியமன எம்.எல்.ஏ-க்களுக்கு வாக்குரிமை தந்தால் ஒரு கட்சிக்கு சாதகமான நிலை ஏற்படாதா ?

தலைமை தேர்தல் ஆணையர்: நியமன எம்.எல்.ஏ-க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தைத்தான் மீண்டும் நாடி முறையிட முடியும்.

Vikatan

செய்தியாளர்: சிறிய மாநிலமான புதுச்சேரியில் ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 30,000 வாக்காளர்கள் மட்டுமே இருக்கின்றனர். அவர்களில் 15,000 வாக்காளர்களை விலை கொடுத்து வாங்கிவிட்டால் தேர்தல் முடிவு ஒருதலைபட்சமாகிவிடுமே ?

தலைமை தேர்தல் ஆணையர்: வடகிழக்கு மாநிலங்களில் இதைவிடக் குறைவான வாக்காளர்களைகொண்ட தொகுதிகள்கூட இருக்கின்றன. அங்கும் பாரபட்சமில்லாமல், அதேசமயம் நேர்மையாகவும் தேர்தலை நடத்தியிருக்கிறோம். அதனால் புதுச்சேரியில் இது பெரிய விஷயமில்லை.

செய்தியாளர்: வேட்பாளர் செலவுத் தொகை அதிகரிக்கப்படுமா?

தலைமை தேர்தல் ஆணையர்: வேட்பாளர் செலவுத் தொகை ரூ.20 லட்சத்திலிருந்து ரூ. 22 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு