Published:Updated:

நாங்குநேரி தேர்தல் பிரசாரத்தில் கோஷ்டி சண்டை! - அ.தி.மு.க நிர்வாகி ஆஸ்பத்திரியில் அனுமதி

நாங்குநேரி இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க நிர்வாகிகளுக்கிடையே நடந்த கோஷ்டி சண்டை காரணமாகக் கட்சி நிர்வாகி ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சைபெற்று வருகிறார்.

கோஷ்டி சண்டை - சிகிச்சை பெறும் நிர்வாகி
கோஷ்டி சண்டை - சிகிச்சை பெறும் நிர்வாகி

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 21-ம் தேதி நடக்கிறது. அதில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் நாராயணனை ஆதரித்து 15 அமைச்சர்கள், எம்.பி-கள், எம்.எல்.ஏ-கள், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்குக் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பூத்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கட்சி நிர்வாகிகள் அங்கு தங்கியிருந்து பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இடைத்தேர்தல் கள நிலவரம்... உற்சாக அ.தி.மு.க... உறக்கத்தில் தி.மு.க!

அ.தி.மு.க குமரி கிழக்கு மாவட்டச் செயலாளரான எஸ்.ஏ.அசோகன் தலைமையிலான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏர்வாடி நகரில் தங்கியிருந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏர்வாடி நகரில் உள்ள ஏழு பூத்கள் குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க-வினர் இன்று வழக்கம் போல, தேர்தல் பணிகளை முடித்துவிட்டு தாங்கள் தங்கியிருந்த மண்டபத்துக்குத் திரும்பியிருக்கிறார்கள். காலை 11.30 மணியளவில் அங்கு வந்த கிழக்கு மாவட்டச் செயலாளரான எஸ்.ஏ.அசோகன், திடீரென தேரூர் கழகச் செயலாளரான வீரபத்திரன் என்பவரையும் அவருடன் இருந்த மூத்த தொண்டர்கள் சிலரையும் அவதூறாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிகிச்சைபெறும் 
அ.தி.மு.க நிர்வாகி
சிகிச்சைபெறும் அ.தி.மு.க நிர்வாகி

அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான வீரபத்திரன், மன அழுத்தம் காரணமாக மயக்கமடைந்ததாகத் தெரிகிறது. உடன் இருந்தவர்கள் அவரை அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு ரத்த அழுத்தம் தொடர்பான பரிசோதனைகள் நடத்தப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கட்சியினரிடையே ஏற்பட்ட கோஷ்டி சண்டை காரணமாகக் கட்சி நிர்வாகி ஒருவர் மருத்துவமனையில் சேரும் அளவுக்குச் சென்றதால் குமரி மாவட்ட அ.தி.மு.க தொண்டர்கள் அதிருப்தியடைந்தனர். இது பற்றிப் பேசிய தொண்டர்கள், ``கிழக்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் ஏ.எஸ்.அசோகன் எப்போதுமே எல்லோரையும் ஒருமையில் பேசுவது, அவதூறாகவும் அருவருக்கத் தக்க வகையிலும் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

மாவட்டச் செயலாளர் ஏ.எஸ்.அசோகன்
மாவட்டச் செயலாளர் ஏ.எஸ்.அசோகன்
ராம்குமார்

அவருடைய நடவடிக்கை பிடிக்காமல் ஏற்கெனவே மகளிரணியைச் சேர்ந்த சிலர் மாற்றுக் கட்சிகளுக்குச் சென்றுவிட்டார். அரசு ஒப்பந்ததாரராக இருக்கும் ஏ.எஸ்.அசோகன், தேரூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட குளத்தைத் தூர்வாரும் பணியைச் செய்து வருகிறார். அதில் சரியாக வேலை செய்யாததால் விவசாயிகள் அதிருப்தியில் இருப்பதை வீரபத்திரன் ஏற்கெனவே எடுத்துச் சொன்னார். அதை மனதில் வைத்து இன்று அவதூறாகப் பேசியதால் வீரபத்திரன் உடல்நலம் பாதிக்கப்பட்டுவிட்டது’’ என்கிறார்.

`நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு  ஆதரவு கேட்ட ஏழு அமைச்சர்கள்!’ - கைவிரித்த ஜான் பாண்டியன்

கட்சியினரிடம் கடுமை காட்டும் அசோகன் குறித்தும் வீரபத்திரனிடம் அவர் நடந்துகொண்ட விதம் பற்றியும் குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவருமே அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். கட்சியினரை அரவணைத்துச் செல்லாமல் அடாவடித்தனமாக மாவட்டச் செயலாளர் செயல்படுவதாக அவர்கள் குமுறுகின்றனர்.

ஓ.பி.எஸ் தேர்தல் பிரசாரம்
ஓ.பி.எஸ் தேர்தல் பிரசாரம்
எல்.ராஜேந்திரன்

நாங்குநேரி தொகுதியில் இன்று ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்கிறார். பிரசாரம் முடிந்து அவர் ஓய்வெடுக்கச் செல்வதற்கு முன்பாக தேர்தல் அலுவலகம் வரும்போது இந்த விவகாரத்தை அவரது கவனத்துக்கு எடுத்துச் சென்று புகார் அளிக்கக் கட்சியினர் முடிவு செய்திருக்கிறார்கள். அதனால் ஏ.எஸ்.அசோகன் மீது நடவடிக்கை பாயக்கூடும் என்கிறார்கள், கட்சியினர்.