Published:Updated:

நாங்குநேரி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் யார்? - அறிவிப்புக்கு முன்பாகக் கிளம்பிய எதிர்ப்பு!

நாங்குநேரி தொகுதிக்கான இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளராக வெளியூர் நபர்களை மேலிடம் நிறுத்தினால், அந்த வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடுவோம் என உள்ளூர் நிர்வாகிகள் அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேட்புமனு வாங்குவதற்கு தாலுகா அலுவலகம் வந்த தமிழ்ச்செல்வன்
வேட்புமனு வாங்குவதற்கு தாலுகா அலுவலகம் வந்த தமிழ்ச்செல்வன்

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெற உள்ளது. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் சார்பாக வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு நேர்காணல் முடிந்துள்ளது.

60 பேர் போட்டி;ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு ஜாக்பாட்!-நாங்குநேரி அ.தி.மு.க வேட்பாளர் தேர்வான பின்னணி

நேர்காணலுக்கு உள்ளூர் நிர்வாகிகள் சிலரை கட்சி மேலிடம் அழைக்கவில்லை என்கிற புகார் எழுந்திருக்கிறது. இந்த நிலையில், நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட களக்காடு பகுதியைச் சேர்ந்தவரும் காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவருமான தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கட்சித் தலைமையைக் கடுமையாக விமர்சித்தார்.

நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு வாங்க வந்திருந்த தமிழ்ச்செல்வனிடம் பேசியபோது, ``இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம், கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் நேர்காணல் நடத்தினார்கள். நாங்குநேரி தொகுதியில் விருப்பம் தெரிவித்து, உள்ளூர் நிர்வாகிகள் 8 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தோம்.

முன்னாள் மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன்
முன்னாள் மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன்

நேர்காணல் நடந்தபோது,`தொகுதியைச் சேர்ந்த 8 பேரில் யாருக்கு வேண்டுமானாலும் சீட் கொடுங்கள். நாங்கள் அவர்களின் வெற்றிக்காகப் பாடுபடுவோம். ஆனால், பணம் படைத்த வெளியூர் வாசிகளுக்கு சீட் கொடுக்காதீர்கள். வெளியாட்களின் வெற்றிக்காக நாங்கள் இனியும் பணியாற்ற மாட்டோம்' எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தோம்.

மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, `இன்றைய சூழலில் எதிர்த்துப் போட்டியிடுவோரைச் சமாளிக்க வேண்டுமானால் பணவசதி தேவை. அவர்கள், பணத்தைத் தண்ணீர்போல் இறைக்கும் நிலையில், நாமும் ஓரளவுக்காவது செலவழிக்க வேண்டும். அதனால் பணத்தைச் செலவு செய்யத் தகுதியுள்ளவருக்கு வாய்ப்பு கொடுப்போம்' என்று தெரிவித்து விட்டார்.

தொண்டர்களின் கோரிக்கையை மீறி வெளியாட்களை வேட்பாளராக்கினால், கட்சியின் தன்னிச்சையான முடிவை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிடுவோம்.
தமிழ்ச்செல்வன்
`2,56,414 வாக்காளர்கள்; 36 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை!' - நாங்குநேரி இடைத்தேர்தல் அப்டேட்

நாங்குநேரி தொகுதியில், தொண்டர்களின் கருத்தை மீறி தன்னிச்சையாக வெளி மாவட்ட நபர்களை நிறுத்த காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யாது என நம்புகிறோம். அதையும் மீறி வெளியாட்களை நிறுத்தினால், கட்சியின் முடிவை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிடுவோம்’’ என்றார். அவரது இந்த அறிவிப்பு, கட்சியினரிடம் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.