Published:Updated:

அதிரவைக்கும் கூட்டுறவுச் சங்க தேர்தல் முறைகேடுகள்!

நடேசன்
பிரீமியம் ஸ்டோரி
நடேசன்

வேட்புமனு நிராகரிப்பு... எம்.எல்.ஏ மிரட்டல்... கள்ள ஓட்டு...

அதிரவைக்கும் கூட்டுறவுச் சங்க தேர்தல் முறைகேடுகள்!

வேட்புமனு நிராகரிப்பு... எம்.எல்.ஏ மிரட்டல்... கள்ள ஓட்டு...

Published:Updated:
நடேசன்
பிரீமியம் ஸ்டோரி
நடேசன்

‘‘உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தாமல் இழுத்தடிக்கும் அ.தி.மு.க அரசு, கூட்டுறவுச் சங்கங்களுக்கும் தேர்தலை நடத்தாமல் அ.தி.மு.க-வினரை பதவியில் நியமிக்கிறது” என்ற குமுறல்கள், கூட்டுறவுச் சங்கங்களில் தற்போது அதிகமாகக் கேட்கின்றன.

 வரகூராம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம்
வரகூராம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம்

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. கிராமப்புறப் பொருளாதாரத்தைத் தக்கவைப்பதிலும், அதைத் தூக்கி நிறுத்துவதிலும் கூட்டுறவுச் சங்கங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அப்படிப்பட்ட `கூட்டுறவுச் சங்கங்களில் முறையாக தேர்தல் நடத்தாமல், ஆளுங்கட்சியினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர்’ என்ற புலம்பல்கள் மாவட்டம்தோறும் கேட்கின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருச்செங்கோட்டை அடுத்துள்ள வரகூராம் பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்தின் உறுப்பினர் நடேசன். இவர், வரகூராம் பட்டி கூட்டுறவுச் சங்கத்தில் முறையாக தேர்தல் நடத்தாதது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, மீண்டும் தேர்தல் நடத்த வைத்திருக்கிறார். ஆனாலும், அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

என்ன பிரச்னை? நடேசனிடம் பேசினோம்.

பொன்.சரஸ்வதி
பொன்.சரஸ்வதி

‘‘கூட்டுறவுச் சங்கங்களின் இயக்குநர்கள், தலைவர், உபதலைவர் போன்ற நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்த வேண்டும் என்பது சட்டம். ஆனால், தேர்தலே நடத்தாமல் கட்சிப் பிரமுகர்களையே நிர்வாகிகளாக நியமிப்பது வாடிக்கையாகிவிட்டது. தி.மு.க ஆட்சியில் தொடங்கிய இந்த அத்துமீறல், இப்போது விஸ்வரூபமெடுத்துள்ளது.

திருச்செங்கோடு, வரகூராம்பட்டி கூட்டுறவுச் சங்கத்துக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, வேட்புமனு தாக்கல் செய்தேன். என்னை மேலும் கீழும் பார்த்த தேர்தல் அலுவலர், ‘எம்.எல்.ஏ-விடம் கேட்டுவிட்டுத்தான் வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்’ என்றார். அவரிடம் வாக்குவாதம் செய்ய விரும்பாமல், திருச்செங்கோடு எம்.எல்.ஏ-வான பொன்.சரஸ்வதியிடம் பேசி அனுமதி வாங்கினேன். அதன் பிறகே என் வேட்புமனுவைப் பெற்றனர். ஆனால், அதற்கான ஒப்புகைச்சீட்டு தரவில்லை.

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

பத்து நாள்கள் கழித்து, எல்லா பதவிகளுக்கும் ஆளுங்கட்சிப் பிரமுகர்களைப் போட்டியின்றி நியமித்துவிட்டனர். காரணமே சொல்லாமல் என் வேட்புமனுவை நிராகரித்ததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். என் வழக்கைப்போலவே தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கத் தேர்தல் தொடர் பான பல வழக்குகள் நிலுவையில் இருந்தன. அதனால், தமிழகத்தை நான்கு மண்டலமாகப் பிரித்து, ஓய்வுபெற்ற நீதிபதிகள்மூலம் அந்த வழக்குகளை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

என்னுடைய வழக்கு கோவை மண்டலத்தில் விசாரிக்கப்பட்டது. நான் தாக்கல்செய்திருந்த வேட்புமனுவில் தேர்தல் நடத்தும் அலுவலர் திருத்தம் செய்திருப் பதை நீதிபதி கண்டறிந்து, கண்டித்தார்; தேர்தலை முறையாக நடத்த உத்தரவிட்டார்.

அதன் பிறகாவது தேர்தல் முறையாக நடக்கும் என நினைத்தேன். ஆனால், எம்.எல்.ஏ பொன்.சரஸ்வதி என்னை அழைத்து ‘இந்த முறை விலகிக்கொள்ளுங்கள். அடுத்த முறை உங்களைத் தேர்ந்தெடுக்கிறோம்’ என்றார். நான் மறுத்துவிட்டதால், தேர்தல் நடந்தது. அதிலும் ஏதேதோ கோல்மால்கள் செய்து கள்ள ஓட்டுகள் போட்டு, ஏற்கெனவே நியமித்தவர்களையே வெற்றி பெறவைத்தனர். இந்த நிலை தொடர்ந்தால், கூட்டுறவுச் சங்கங்கள்மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையே போய்விடும்’’ என்றார்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளர் பாலமுருகனிடம் பேசினோம். ‘‘ஓய்வுபெற்ற நீதிபதி உத்தரவுப்படி வரகூராம்பட்டி கூட்டுறவுச் சங்கத்துக்கு முறையாக வாக்குப்பதிவு நடத்தியே பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தோம். இதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை’’ என்றார்.

நடேசன்
நடேசன்

திருச்செங்கோடு எம்.எல்.ஏ-வான பொன்.சரஸ்வதியிடம் பேசினோம். ‘‘போட்டியிடக் கூடாது என்றெல்லாம் அவரிடம் சொல்லவில்லை. அது அவரது உரிமை. அவர்தான் தேவையில்லாமல் கோர்ட்டுக்கெல்லாம் சென்றார். நான் அந்த விஷயத்தில் தலையிடவே இல்லை’’ என்றார்.

இதுபற்றி தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் கேட்டதற்கு, ‘‘தமிழகத்தில் பல்வேறு துறைகளின்கீழ் 18,500 கூட்டுறவுச் சங்கங்கள் இருக்கின்றன. இவை அனைத்திலும் உறுப்பினர்களிடம் முறையாக வாக்கெடுப்பு நடத்தி இயக்குநர்கள், தலைவர்கள் தேர்தெடுக்கப்படுகிறார்கள். சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் அனைவரும் போட்டியிடலாம். வாய்ப்புகள் மறுக்கப்படும்பட்சத்தில், நீதிமன்றத்துக்குப் போகலாம். தி.மு.க ஆட்சியில்தான் ஜனநாயகம் இல்லாமல் கூட்டுறவுச் சங்கங்களில் தேர்தல் நடத்தாமல் தி.மு.க-வினரை நியமித்தனர். ஆனால், எங்கள் ஆட்சியில் அப்படியில்லை. ஜனநாயகம் மேலோங்கி இருக்கிறது’’ என்றார்.

வாழ்க ஜனநாயகம்!