``உதயநிதி போட்டியிடத் தடைவிதிக்க வேண்டும்'' - டெல்லியில் பாஜக தலைமை கொடுத்த புகாரின் பின்னணி என்ன?

``மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீதும், தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீதும் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்திருக்கிறோம்'' - பிரகாஷ் ஜவடேகர், மத்திய அமைச்சர்.
கடந்த புதன்கிழமை (மார்ச் 31) அன்று தாராபுரம் பிரசாரக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ``அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகிய தலைவர்கள், மோடியின் சித்ரவதை காரணமாகத்தான் உயிரிழந்தனர்'' என்று கூறினார். முன்னாள் மத்திய அமைச்சர்களின் மரணம் குறித்து உதயநிதி பேசியது இந்திய அளவில் சர்ச்சையானது.
இதையடுத்து உதயநிதியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ், அருண் ஜெட்லியின் மகள் சோனாலி ஜெட்லி ஆகியோர் ட்விட்டரில் கருத்து பதிவிட்டனர்.

இது தொடர்பாக தமிழக பா.ஜ.க சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்தநிலையில், நேற்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ``மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீதும், தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீதும் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்திருக்கிறோம். அவரும் பரிசீலனைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்திருக்கிறார்'' என்று கூறினார்.
உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி பா.ஜ.க தலைமை சார்பில் கொடுக்கப்பட்ட புகார் மனுவில், ``மார்ச் 31 அன்று தாராபுரத்தில் பரப்புரை செய்த திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், `மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்களான சுஷ்மா ஸ்வராஜும், அருண் ஜெட்லியும் பிரதமர் மோடி கொடுத்த அழுத்தம் காரணமாகவும் சித்ரவதை காரணமாகவும்தான் உயிரிழந்தனர்' என்று பேசியிருக்கிறார். இது முற்றிலும் பொய்யான தகவல்'' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும், இவ்வாறு அவதூறு பரப்பிய உதயநிதி ஸ்டாலின், பரப்புரை செய்யத் தடை விதிக்க வேண்டும் என்றும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி போட்டியிடும் வாய்ப்பையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்தப் புகார் மனுவில் சொல்லப்பட்டிருக்கிறது.
அந்த மனுவில் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், முக்தர் அப்பாஸ் நக்வி, தேசிய பொதுச் செயலாளர் புபேந்திர யாதவ் உள்ளிட்ட பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்கள் கையெழுத்திட்டிருக்கின்றனர்.

இது குறித்து பா.ஜ.க நிர்வாகிகள் சிலர், ``அரசியல் அனுபவம் பெரிதாக இல்லாத உதயநிதி மத்திய அரசு மீதும், பிரதமர், அமைச்சர்கள் மீதும் தொடர்ந்து பொய்க் குற்றச்சாட்டுகளை அடுக்கிவந்தார். தற்போது மறைந்த முன்னாள் அமைச்சர்கள் குறித்து போலியான கருத்துகளை முன்வைத்திருக்கிறார். இது தொடரக் கூடாது என்பதற்காகத்தான் தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க தலைமை புகார் அளித்திருக்கிறது. அந்தப் புகாரில் உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடத் தடைவிதிக்க வேண்டுமெனக் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், தற்போது இந்த விவகாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்றும் தலைமை முடிவெடுத்திருக்கிறது. ஒருவேளை அழுத்தம் கொடுத்து உதயநிதிக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டால், அது தி.மு.க-வுக்கு மிகப்பெரிய ப்ளஸ்ஸாக அமையும் என்பதுதான் இந்த முடிவுக்குக் காரணம்'' என்கிறார்கள்.