Published:Updated:

பாமக வேட்பாளர் கடத்தல்? ராமதாஸ் ட்வீட்டால் கொதிக்கும் திமுக! - என்ன நடக்கிறது வேலூரில்?

புகாரளித்த பா.ம.க-வினர்

எதிர்க்கட்சி வேட்பாளர்களை தேர்தலிலிருந்து விலகக்கோரி தி.மு.க-வினர் மிரட்டுவதாக எழுந்துள்ள புகார், வேலூரில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

பாமக வேட்பாளர் கடத்தல்? ராமதாஸ் ட்வீட்டால் கொதிக்கும் திமுக! - என்ன நடக்கிறது வேலூரில்?

எதிர்க்கட்சி வேட்பாளர்களை தேர்தலிலிருந்து விலகக்கோரி தி.மு.க-வினர் மிரட்டுவதாக எழுந்துள்ள புகார், வேலூரில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

Published:Updated:
புகாரளித்த பா.ம.க-வினர்

மூலக்கொல்லைப் பகுதியை உள்ளடக்கிய வேலூர் மாநகராட்சி 24-வது வார்டில் வன்னியர் சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். இங்கு அ.தி.மு.க, பா.ம.க-வுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. தி.மு.க மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருந்தது. இந்த நிலையில், வேட்புமனு பரிசீலனையின்போது, அ.தி.மு.க வேட்பாளர் சி.கே.எஸ்.வினோத்குமாரின் மனு நிராகரிக்கப்பட்டது. ‘காரணம் கேட்டாலும் அதிகாரிகள் பதிலளிக்கவில்லை’ என்று அ.தி.மு.க-வினர் குற்றஞ்சாட்டுகிறார்கள். நீண்ட நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க-வினரை போலீஸைக்கொண்டு விரட்டியடித்தார்களாம் அதிகாரிகள். பா.ம.க வேட்பாளர் பரசுராமனின் மனு ஏற்கப்பட்டதால், அவரை 5-ம் தேதி இரவு வேட்புமனுவை வாபஸ் பெறக்கோரி தி.மு.க-வினர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

மருத்துவர் ராமதாஸ்
மருத்துவர் ராமதாஸ்

இது குறித்து, பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நேற்றிரவு தனது ட்விட்டர் பக்கத்தில், ``தோல்வி பயம் காரணமாக, பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் பரசுராமனை தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கடத்திச் சென்று... ‘போட்டியிலிருந்து விலக வேண்டும்; இல்லையேல் தொழில் செய்ய முடியாது’ என்று மிரட்டியிருக்கிறார்கள். இது, கண்டிக்கத்தக்கது. மக்கள் செல்வாக்குள்ளவர்கள் வெற்றி பெறுவதுதான் ஜனநாயகம். செல்வாக்கு இல்லாதவர்கள் அதை வளர்த்துக் கொள்ளவேண்டும். மாறாக மிரட்டக் கூடாது. பா.ம.க வேட்பாளரை மிரட்டிய தி.மு.க-வினர் மீது மாநிலத் தேர்தல் ஆணையம், காவல்துறை, தி.மு.க தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.

ராமதாஸின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக, வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளரும், அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ-வுமான ஏ.பி.நந்தகுமார் ரீ-ட்விட் செய்திருந்தார். அதில், ``ராமதாஸ் அவர்களே... பா.ம.க வேட்பாளர் பரசுராமனை யாரும் மிரட்டவில்லை; கடத்தவுமில்லை. மாறாக 24-வது வார்டில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டால், அவருக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்பதால், எங்களை நேரில் சந்தித்தார். எங்களுக்குச் சால்வை அணிவித்து, தி.மு.க-வில் போட்டியிட்டால் மட்டுமே வெற்றி வாய்ப்பிருக்கிறது. எனவே, தனக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் நந்தகுமார்
வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் நந்தகுமார்

அந்த வார்டை தி.மு.க நிர்வாகிக்கு ஏற்கெனவே ஒதுக்கிவிட்ட காரணத்தை அவரிடம் கூறிவிட்டோம். இதற்கான ஆதாரமும் எங்களிடம் இருக்கிறது. பா.ம.க வேட்பாளரை மிரட்ட வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. இந்த உண்மையை நன்கு விசாரிக்காமல் எங்கள்மீது பொய்யான, ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைப்பது ஏற்புடையதல்ல. பா.ம.க வேட்பாளரை மிரட்டி வெற்றிபெற வேண்டிய நிலையில் தி.மு.க எப்போதும் இருந்ததில்லை என்பதை தாங்களும் அறிவீர்கள் என்று நம்புகிறோம்’’ என்று கூறியிருந்தார்.

அதோடு, தி.மு.க மாவட்டச் செயலாளர் நந்தகுமாரின் ‘அனுகுலா’ ஹோட்டலுக்கு பா.ம.க வேட்பாளர் பரசுராமன் வந்துச்சென்ற சி.சி.டி.வி காட்சிகளும் வெளியாகி பரபரப்பைக் கூட்டியிருக்கின்றன.

அந்தக் காட்சியில், ஹோட்டலுக்குள் செல்லும் பரசுராமனை காங்கிரஸ் மாநகர மாவட்டத் தலைவர் டீக்காராமன் அழைத்துச் செல்கிறார். ஓர் அறையில் வேலூர் தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திகேயன் உட்கார்ந்திருக்கிறார். அவருக்கு நேர் எதிராக இருந்த நாற்காலியில் பரசுராமனை உட்காரச் சொல்கிறார் காங்கிரஸ் கட்சியின் டீக்காராமன். சில நிமிடங்கள் கழித்து, வேலூர் மத்திய மாவட்டச் செயலாளர் நந்தகுமார் அங்கு வருகிறார். மூவருக்கும் பா.ம.க வேட்பாளர் பரசுராமன் சால்வை அணிவிக்கிறார். பின்னர், ஏதோ ஒரு விவகாரம் தொடர்பாக அனைவரும் கலந்துரையாடுகிறார்கள்.

மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்த பா.ம.க-வினர்
மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்த பா.ம.க-வினர்

இந்த விவகாரம் சூடுபிடித்ததையடுத்து, பா.ம.க சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், எஸ்.பி ராஜேஸ்கண்ணன் ஆகியோரைச் சந்தித்து புகாரளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ம.க வேட்பாளர் பரசுராமன், ``நேற்று முன் தினம் (சனிக்கிழமை) மாலை 6.18 மணிக்கு, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் டீக்காராமன் எனக்கு போன் செய்தார். ‘உங்களது ஆம்புலன்ஸ் அலுவலகத்தில்தான் இருக்கிறேன். சந்திக்க வேண்டும்’ என்றார். நானும் எனது அலுவலகத்துக்கு சென்று, அவரிடம் பேசினேன். ‘உங்களை தி.மு.க மாவட்டச் செயலாளர் நந்தகுமார் சந்திக்க வேண்டும் என்கிறார். இரவு போன் செய்கிறேன்’ என்று கூறிவிட்டு டீக்காராமன் சென்றுவிட்டார்.

அதையடுத்து, அன்று இரவு 9.45 மணிக்கு போன் செய்த டீக்காராமன் ‘அனுகுலா’ ஹோட்டலுக்குத் தனியாக வரச்சொன்னார். நான் எனது மைத்துனருடன் சென்றேன். மரியாதை நிமித்தமாக அவர்களுக்கு சால்வை அணிவித்தேன். என்னிடம் அவர்கள் வாபஸ் வாங்கச் சொல்லி பேசினார்கள். நான் மறுத்ததற்கு, ‘தொழில் செய்ய முடியாது. உனக்கு இரண்டு நாள்கள்தான் டைம். திங்கட்கிழமை, அதாவது இன்றைய தினத்துக்குள் வாபஸ் பெறவில்லையென்றால் நடப்பதே வேறு’ என்று மிரட்டினார்கள்.

ஹோட்டலில் சந்தித்த சி.சி.டி.வி காட்சி
ஹோட்டலில் சந்தித்த சி.சி.டி.வி காட்சி

மேலும், ‘நாங்கள்தான் மேயரையே தேர்வுசெய்கிறோம். எங்கள் கட்சிக்கு வந்துவிடு. இல்லையெனில், உன் வேட்பு மனு திங்கட்கிழமை நிராகரிக்கப்படும். தேர்தலில் நீ போட்டியிட்டாலும் ரிசல்ட் உனக்குத் தோல்வி என்றுதான் வரும்’’ என்று மிரட்டியும்... நள்ளிரவு 12 மணிக்குத்தான் என்னை வெளியிலேயே அனுப்பினார்கள். தி.மு.க மாவட்டச் செயலாளர் நந்தகுமார் சொல்வதுபோல நான் கட்சி மாறுவதற்காக ஹோட்டலுக்குள் செல்லவில்லை. என்னை வரவழைத்து மிரட்டிவிட்டு, இப்போது அவர்கள் நாடகமாடுகிறார்கள்’’ என்றார்.

பா.ம.க வேட்பாளர் பரசுராமனின் குற்றச்சாட்டுக் குறித்து தி.மு.க மாவட்டச் செயலாளர் நந்தகுமாரிடம் கேட்டபோது, ‘‘பா.ம.க வேட்பாளர் பொய் சொல்கிறார். அவரை நாங்கள் கடத்திவிட்டதாக டாக்டர் ராமதாஸ் ட்வீட் போட்டுள்ளார். இப்போது, அவர்கள் கொடுத்த புகார் மனுவில், ‘என்னை அழைத்து மிரட்டினார்கள்’ என்று கூறியுள்ளனர். இருவேறு கருத்துகளைச் சொல்லும்போதே தெரியவில்லையா? பா.ம.க-வினர் நாடகமாடுகிறார்கள் என்று. உண்மைக்குக் புறம்பாக செய்தி வெளியிட்டு எங்களுக்கு களங்கம் கற்பிப்பவர்களை இனம்கண்டு மக்கள் தோற்கடிப்பார்கள்’’ என்றார் ஆவேசமாக!

இதனிடையே, சத்துவாச்சாரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கருணாகரன் மீதும் எஸ்.பி ராஜேஸ்கண்ணனிடம் புகார் வாசித்திருக்கிறார்கள் பா.ம.க-வினர். பிரச்னைக்குரிய 24-வது வார்டு, சத்துவாச்சாரி காவல் நிலைய கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. ``24-வது வார்டில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் சுதாகரும் இன்ஸ்பெக்டர் கருணாகரனும் ‘மாமன், மைத்துனர்’ உறவுமுறையில் நண்பர்களாக பழகுவதால், பா.ம.க வேட்பாளர் பரசுராமனைக் குறிவைத்திருக்கிறார்கள். பொய் வழக்கில் சிக்கவைக்க இன்ஸ்பெக்டர் கருணாகரன் திட்டமிடுகிறார்" என எஸ்.பி அலுவலகத்தில் புகார் வாசித்திருக்கிறார்கள் பா.ம.க-வினர். இது குறித்து இன்று புகார் கொடுப்பதற்காக எஸ்.பி அலுவலகம் வந்த பா.ம.க-வினரை தடுத்து கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டிருக்கிறார் இன்ஸ்பெக்டர் கருணாகரன்.