Published:Updated:

`ஓட்டு போடல... வாங்கிய பணத்தைக் கொடு!' -14 லட்சத்தைக் கேட்டு மிரட்டுகிறாரா அ.தி.மு.க பெண் எம்.எல்.ஏ?

எம்.எல்.ஏ பரமேஸ்வரி
எம்.எல்.ஏ பரமேஸ்வரி

அ.தி.மு.க பெண் எம்.எல்.ஏ குடும்பம் மிரட்டுவதாக வெளியான வீடியோவால் திருச்சியில் பரபரப்பு நிலவுகிறது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்துள்ளது, வலையூர் கிராமம். அந்தக் கிராம முக்கியஸ்தர்கள், ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட எல்லாப் பதவிகளும் ஏலம்விடப்பட்டதாகப் புகார் எழுந்தது.

குறிப்பாக, மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் உள்ள வலையூர், கரியமாணிக்கம், பாலையூர் உள்ளிட்ட ஊராட்சிகள் உள்ளடக்கிய ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகனுக்கு வாக்களிப்பதற்காக கருப்பன் என்பவர் மூலம் 14 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்ததாக எழுந்த புகார் காவல்நிலையம் வரை சென்றது.

கணவருடன் எம்.எல்.ஏ  பரமேஸ்வரி
கணவருடன் எம்.எல்.ஏ பரமேஸ்வரி

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் தேர்தல் அலுவலரிடம் புகார் கொடுக்க, தேர்தல் அலுவலரும் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருமான ராஜேந்திரன் என்பவர், சிறுகனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, தேர்தலில் லஞ்சம் கொடுத்தது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நடந்துமுடிந்த வாக்கு எண்ணிக்கையில், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு முருகனை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் ஶ்ரீதர் வெற்றிபெற்றுள்ளார். தி.மு.க வேட்பாளர் ஸ்ரீதர் 2,511 ஓட்டுகள் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ-வின் கணவர் முருகனை 1,307 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

தனது கணவரை ஒன்றிய சேர்மன் ஆக்க நினைத்த அ.தி.மு.க பெண் எம்.எல்.ஏ தரப்பினர், இந்தத் தோல்வியால் துவண்டுபோய்விட்டனர் எனக் கட்சிக்காரர்கள் பேசத் தொடங்கினர்.

இந்நிலையில், மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் உள்ள 23 ஒன்றிய கவுன்சிலர்களில், 15 வார்டில் தி.மு.க வெற்றிபெற்றது. இதனால் ஒன்றிய சேர்மன் பதவி தி.மு.க வசம் வந்துள்ளது. மேலும், அ.தி.மு.க எம்.எல்.ஏ-வின் கணவரைத் தோற்கடித்த தி.மு.க வேட்பாளர் ஸ்ரீதரை சேர்மன் ஆக்குவதற்கு தி.மு.க கவுன்சிலர்கள் முடிவுசெய்துள்ளனர். இதற்கிடையில், அ.தி.மு.க எம்.எல்.ஏ பரமேஸ்வரியின் கணவர் தோற்றுவிட்டதால், தான் கொடுத்த 14 லட்ச ரூபாய் பணத்தைத் திருப்பிக் கேட்பதாக வீடியோ ஒன்று வைரலாகப் பரவிவருகிறது.

`கிராமத்தினர் வாக்குகளை ஏலம் எடுத்தாரா அ.தி.மு.க பெண் எம்.எல்.ஏ-வின் கணவர்?' - திருச்சி சர்ச்சை

`வலையூர் பகுதியில் கொடுத்த 14 லட்சம் பணத்தை அந்த கிராமத்தில் ஒரு சிலர் அப்படியே வைத்துக்கொண்டதாகவும் இதனாலேயே மக்கள் வாக்களிக்கவில்லை' என்றும் நினைக்கும் எம்.எல்.ஏ பரமேஸ்வரி, அவரது கணவர் முருகன் மற்றும் அவரின் ஆதரவாளர்களின் ஓட்டுக்காகக் கொடுத்த 14 லட்சம் ரூபாயை திருப்பிக் கேட்டு பிரச்னை செய்துவருகிறார்கள். இதுதொடர்பாக கிராம இளைஞர் ஒருவர் ஊர்மக்களிடம் விளக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாகப் பேசும் எம்.எல்.ஏ-வின் கணவர் முருகன், ``இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. யாரிடமும் பணம் கேட்டு மிரட்டவில்லை" என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு