Published:Updated:

`தோற்றுப்போன விஜயலட்சுமிக்கு வெற்றிச் சான்றிதழ்!' -கடலூர் தேர்தல் அதிகாரியைத் தண்டித்த கலெக்டர்

தேர்தல் அதிகாரி சுப்பிரமணியன்
தேர்தல் அதிகாரி சுப்பிரமணியன்

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளரையும் சின்னத்தையும் மாற்றி அறிவித்த தேர்தல் அதிகாரியைப் பணியிடை நீக்கம் செய்திருக்கிறார், கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன்.

கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜபாஸ்கரன் என்பவரின் மனைவி, ஜெயலட்சுமி. இவர், குமளங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு, 'ஆட்டோ ரிக்‌ஷா' சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, அதே ஊரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் 'பூட்டு சாவி' சின்னத்தில் போட்டியிட்டார்.

கடந்த 2-ம் தேதி நள்ளிரவு வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், 1,710 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலட்சுமி ராஜபாஸ்கரன் வெற்றிபெற்றிருந்தார். ஆனால், தேர்தல் நடத்தும் அதிகாரியும் வட்டார வளர்ச்சி அலுவலருமான சுப்பிரமணியன், விஜயலட்சுமி (பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்டவர்) வெற்றிபெற்றதாக அறிவித்தார். இதனால், ஜெயலட்சுமி மட்டுமல்ல அங்கிருந்த பத்திரிகையாளர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஜெயபட்சுமி ராஜபாஸ்கரன்
ஆர்ப்பாட்டத்தில் ஜெயபட்சுமி ராஜபாஸ்கரன்

இதையடுத்து ஜெயலட்சுமி ராஜபாஸ்கரன், அதிகாரி சுப்பிரமணியத்திடம் முறையிட்டார். ஆனால், அவரின் புகாரை ஏற்றுகொள்ளாத அதிகாரி, ” வெற்றிபெற்றது விஜயலட்சுமிதான். உங்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. உங்களால் முடிந்ததைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றார் கொதிப்புடன்.

`வென்றது ஜெயலட்சுமியா.. விஜயலட்சுமியா..?!' -சின்னத்தையே மாற்றிய கடலூர் தேர்தல் அதிகாரி

அதிகாரியின் பதிலால் ஆவேசமடைந்த ஜெயலட்சுமி, வாக்கு எண்ணும் மையத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தார். அப்போது நம்மிடம் பேசிய ஜெயலட்சுமி ராஜபாஸ்கரன், “எனக்குத்தான் ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கப்பட்டது (ஒப்புகைச் சீட்டு ஆதாரத்தைக் காட்டுகிறார்). காவல் நிலையத்திலும் அந்த சின்னத்தைப் பதிவுசெய்துதான் வாக்கு சேகரித்தேன். என்னை எதிர்த்துப் போட்டியிட்ட விஜயலட்சுமி, பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்டார். எங்கள் ஊரில்கூட நீங்கள் கேட்டுப் பாருங்கள்.

வெற்றிச் சான்றிதழுடன் விஜயலட்சுமி
வெற்றிச் சான்றிதழுடன் விஜயலட்சுமி

1,710 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றிபெற்றேன். ஆனால், ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தில் விஜயலட்சுமி வெற்றிபெற்றதாக அறிவித்துவிட்டார்கள். அதுகுறித்து நாங்கள் கூறிய புகாரைக் கூடக் கேட்காமல், விஜயலட்சுமிக்கு வெற்றிபெற்றதாகச் சான்றிதழும் கொடுத்துவிட்டார்கள். இந்த விவகாரத்தில், தேர்தல் அதிகாரியாக இருக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் பணம் வாங்கியிருக்கிறார்” என்று கண்ணீருடன் பகிரங்கமாகக் குற்றச்சாட்டியதுடன், உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுத்திருந்தார்.

இதுகுறித்து அதிகாரி சுப்பிரமணியத்திடம், `குமளங்குளத்தில் வெற்றிபெற்றது யார்... அவர் எந்தச் சின்னத்தில் வெற்றிபெற்றார்?' எனக் கேட்டோம். “அங்கு வெற்றிபெற்றது ஆட்டோ ரிக்‌ஷாதான். வேட்பாளர் விஜயலட்சுமி” என்று கூறிவிட்டு மௌனமாகிவிட்டார்.

அதேசமயம், அங்கிருந்த உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி கவிதை என்பவர், “ஜெயலட்சுமி ராஜபாஸ்கரன் என்பவர்தான் வெற்றிபெற்றார். ஜெயலட்சுமி என்பதற்கு பதிலாக விஜயலட்சுமி என எழுத்துப்பிழை ஏற்பட்டுவிட்டது. மற்றபடி விஜயலட்சுமியை வெற்றிபெற்றதாக அறிவித்ததற்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்று உண்மையை ஒப்புக்கொண்டு ஒதுங்கிவிட்டார். ஆனால், அதற்குப் பிறகும் சுப்பிரமணியன் எதையும் பேச மறுத்துவிட்டார்.

ஜெயலட்சுமி ராஜபாஸ்கரன்
ஜெயலட்சுமி ராஜபாஸ்கரன்

சின்னம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தின் அனுமதிக் கடிதம், கையெழுத்திட்ட ஒப்புகைச் சீட்டு என ஜெயலட்சுமி ராஜபாஸ்கரன் கொடுக்கும் ஆதாரங்கள் எதுவும், வெற்றிபெற்றவராக அறிவிக்கப்பட்ட விஜயலட்சுமியிடம் இல்லை என்ற நிலையிலும், வெற்றிபெற்ற வேட்பாளரை மாற்றி அறிவித்த தேர்தல் அதிகாரி சுப்பிரமணியனுக்கு, அங்கிருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்புகள் கிளம்பின.

இந்த விவகாரம் தொடர்பாக நம்மிடம் பேசிய கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், “உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியின் முடிவுதான் இறுதியானது. இருந்தாலும், இதுதொடர்பாகப் புகார் வந்திருப்பதால் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்த செய்தியை, கடந்த 3-ம் தேதி ’வென்றது ஜெயலட்சுமியா… விஜயலட்சுமியா... சின்னத்தையே மாற்றிய தேர்தல் அதிகாரி’ என்ற தலைப்பில் விகடன் இணையதளத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதம்
தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதம்

அதன்பின்னர், அதிகாரிகளின் உத்தரவுப்படி பதவியேற்கச் சென்ற விஜயலட்சுமியைத் தடுத்து நிறுத்திய ஜெயலட்சுமியின் ஆதரவாளர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், ஜெயலட்சுமி ராஜபாஸ்கரனின் ஆதரவாளர்கள் மறியல் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இதனால், பதவியேற்பு விழா தள்ளிவைக்கப்படுவதாக அறிவித்தார், தேர்தல் நடத்தும் அதிகாரி சுப்பிரமணியன்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன்

இந்த விவகாரம் தொடர்பாக, ஜெயலட்சுமி ராஜபாஸ்கரன் நீதிமன்றத்தை அணுகியிருக்கும் நிலையில், வெற்றிபெற்ற வேட்பாளரின் பெயரை மாற்றி அறிவித்ததில் தேர்தல் நடத்திய அதிகாரி சுப்பிரமணியன் பெரும் பங்கு வகித்திருப்பதாகக் கூறி, அவரைப் பணியிடை நீக்கம்செய்து உத்தரவிட்டிருக்கிறார், கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன்.

அதேபோல, வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்களுக்கு, உரிய நேரத்தில் உணவை வழங்காததால் கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் கொளஞ்சி என்பவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு