அலசல்
Published:Updated:

விரிசலில் காங்கிரஸ்... வலுப்பெறும் ஆம் ஆத்மி... எப்படி இருக்கிறது பஞ்சாப் தேர்தல் களம்?

பஞ்சாப்
பிரீமியம் ஸ்டோரி
News
பஞ்சாப்

2017 பஞ்சாப் தேர்தலில் 20 இடங்களைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி, அங்கு பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்திருக்கிறது.

வருகிற 2022-ம் ஆண்டு, இந்தியாவின் ஏழு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. அவற்றில் பஞ்சாப் தேர்தல் களம் இப்போதே தகிக்கத் தொடங்கிவிட்டது. கடந்த சில மாதங்களாகவே அங்கு ஆளுங்கட்சியான காங்கிரஸில் ஏற்பட்டுள்ள விரிசல்தான் இந்தப் பரபரப்புக்குக் காரணம். இன்னொரு பக்கம், மாநிலத்திலுள்ள அனைத்துக் கட்சிகளுமே தேர்தல் பணிகளில் விறுவிறுவெனக் களமிறங்கிவிட்டன.

சோனு சூட் - கெஜ்ரிவால்
சோனு சூட் - கெஜ்ரிவால்

விரிசலில் காங்கிரஸ்!

2016-ம் ஆண்டு வரை பா.ஜ.க-விலிருந்த நவ்ஜோத் சிங் சித்து, 2017-ல் காங்கிரஸில் இணைந்து சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றார். அமரீந்தர் சிங் தலைமையிலான ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சித்து, இரண்டு முறை அமரீந்தரின் பேச்சை மீறி பாகிஸ்தானுக்குச் சென்றார். இருவருக்கும் இடையே அப்போது தொடங்கிய மோதல், ஒருகட்டத்தில் அதிகமானது. 2019-ம் ஆண்டு சித்துவின் இலாகா மாற்றப்படவே, கோபமடைந்த சித்து பதவியை ராஜினாமா செய்தார்.

இந்தநிலையில்தான், அமரீந்தரின் எதிர்ப்பையும் மீறி சித்துவை பஞ்சாப் காங்கிரஸின் தலைவராக்கியது கட்சி மேலிடம். எம்.எல்.ஏ-க்கள் பலரும் சித்துவுடன் சேர்ந்து அமரீந்தரை எதிர்த்தனர். இதனால் அதிருப்தியடைந்த அமரீந்தர், முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதையடுத்து, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னியை முதல்வராக்கியிருக்கிறது காங்கிரஸ். `தற்போது இந்தியாவிலிருக்கும் முதல்வர்களில் சரண்ஜித் மட்டுமே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். பஞ்சாப் மாநிலத்திலிருக்கும் சுமார் 30 சதவிகிதப் பட்டியல் சமூக மக்களின் வாக்குகளைக் குறிவைத்தே காங்கிரஸ், சரண்ஜித்தை முதல்வராக்கியிருக்கிறது’ என்கிறார்கள் தேர்தல் களத்தை உற்றுநோக்கும் அரசியல் பார்வையாளர்கள்.

சரண்ஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ``தலித் மக்களே கவனத்தில்கொள்ளுங்கள்... இது எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை மனதில்கொண்டு காங்கிரஸ் செய்திருக்கும் அரசியல் ஸ்டன்ட்!’’ என்று எச்சரிக்கைவிடவும் தவறவில்லை. பா.ஜ.க-வும் தன் பங்குக்கு, ``சில மாதங்கள் மட்டும் சரண்ஜித்தை முதல்வராக அமரவைத்து தலித் மக்களின் ஆதரவைப் பெற நினைக்கிறது காங்கிரஸ்’’ என்று குற்றம்சாட்டியிருக்கிறது. காங்கிரஸோ, ``எதிர்வரும் தேர்தலை சரண்ஜித் சிங், நவ்ஜோத் சிங் சித்து ஆகிய இருவர் தலைமையிலும் சந்திப்போம்’’ என்று சமாளித்திருக்கிறது.

விரிசலில் காங்கிரஸ்... வலுப்பெறும் ஆம் ஆத்மி... எப்படி இருக்கிறது பஞ்சாப் தேர்தல் களம்?

வலுப்பெறும் ஆம் ஆத்மி?

2017 பஞ்சாப் தேர்தலில் 20 இடங்களைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி, அங்கு பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்திருக்கிறது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், தடையில்லா மின்சாரம் என வாக்குறுதிகளை அளித்துவரும் ஆம் ஆத்மி, `ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம்’ என்கிற மெகா அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது. `டெல்லி மாடல்’ என்பதை முன்னிறுத்தி, ``அங்கு நாங்கள் இதையெல்லாம் செய்திருக்கிறோம்; இங்கும் நிச்சயம் செய்வோம்’’ என்று சொல்லியும் பஞ்சாப் மக்களைக் கவரத் தொடங்கியிருக்கிறது அந்தக் கட்சி. பஞ்சாப் மாநிலம், மோகாவைச் சேர்ந்த நடிகர் சோனு சூட்டை, டெல்லி அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டும் திட்ட தூதுவராக அறிவித்துள்ள கெஜ்ரிவால், தேர்தலில் அவரைக் களமிறக்கவும் திட்டமிட்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. தவிர, அதிருப்தியில் இருக்கும் அமரீந்தர் சிங் ஆதரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சிலரைத் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியிலும் ஆம் ஆத்மி இறங்கியிருக்கிறது என்கிறார்கள். சிரோமணி அகாலி தளம் கட்சியிலிருந்து வெளியேறிய மூத்த நிர்வாகிகள் சிலர், சிரோமணி அகாலி தளம் (சன்யுக்த்) கட்சியைத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்களோடு கூட்டணிவைத்திருக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கு மேலும் சில சிறிய கட்சிகளும், சில விவசாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

அமரீந்தர் சிங்
அமரீந்தர் சிங்

தயார்நிலையில் சிரோமணி அகாலி தளம்!

இதுவரை 64 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் பணிகளில் முந்தி நிற்கிறது சிரோமணி அகாலி தளம். 1996-க்குப் பிறகு மீண்டும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்திருக்கும் அந்தக் கட்சி 97 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 20 இடங்களில் போட்டியிடுகின்றன. சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், ஐந்து முறை பஞ்சாப் முதல்வராக இருந்திருந்தாலும், `வேளாண் சட்டங்களை எதிர்த்து சிரோமணி அகாலி தளம், பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியே வந்ததைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை’ என்றே கருதுகிறார்கள் பஞ்சாப் விவசாயிகள்.

கள நிலவரம் என்ன?

பஞ்சாப்பின் தற்போதைய நிலவரம் பற்றிப் பேசும் அரசியல் பார்வையாளர்கள் நம்மிடம், “தேர்தல் களத்தில் வலுவான எதிர்க்கட்சிகள் இல்லாதது, காங்கிரஸ் கட்சிக்கு ப்ளஸ். ஜாட் சமூகத்தினர், பட்டியல் சமூகத்தினர், சீக்கியர்கள் என அனைத்துச் சமூகங்களிலும் காங்கிரஸின் வாக்குவங்கி வலுவாகவே இருக்கிறது. அதேசமயம் கடந்த தேர்தலைவிட அதிக இடங்களைக் கைப்பற்றி வலுவான எதிர்க்கட்சியாக ஆம் ஆத்மி உருவெடுக்குமே தவிர, ஆட்சியமைக்கும் அளவுக்கான இடங்களை அந்தக் கட்சி கைப்பற்றுவது சந்தேகமே. பா.ஜ.க-வுக்கு இங்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வாக்குவங்கி இல்லை. அதுவும் வேளாண் சட்டங்கள் அமலான பிறகு, `பா.ஜ.க-வுக்கு பஞ்சாபில் இடமில்லை’ என்ற நிலையே நீடிக்கிறது. அதேசமயம், தேர்தலுக்கு ஆறு மாதங்கள் இருப்பதால் காட்சிகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்’’ என்கிறார்கள்.