Published:Updated:

மீண்டும் ஜெயிப்பாரா கெஜ்ரிவால்?

கெஜ்ரிவால்
பிரீமியம் ஸ்டோரி
News
கெஜ்ரிவால்

டெல்லி தேர்தல் க்ளைமாக்ஸ்...

தலைநகரை யார் கைப்பற்றப்போகிறார்கள் என்பதற்கான போட்டி, இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள ஆம் ஆத்மியும், ஆட்சியைப் பிடித்துவிட பா.ஜ.க-வும், இழந்த செல்வாக்கை மீட்டுவிட காங்கிரஸும் களம் காண்கின்றன.

மொத்தம் 70 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு, பிப்ரவரி 8-ம் தேதி வாக்குப்பதிவு. பிப்ரவரி 11-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டங்கள், மாநில தேர்தல்களில் பா.ஜ.க-வின் தொடர் சரிவுகள் ஆகியவற்றுக்கு மத்தியில் இந்தத் தேர்தல் பல வழிகளிலும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

நீண்டகாலமாக காங்கிரஸுக்கும் பா.ஜ.க-வுக்கும் இருமுனைப் போட்டியாக இருந்துவந்த டெல்லி தேர்தல், 2013-ம் ஆண்டில் ஆம் ஆத்மி வருகையால் மும்முனைப் போட்டியாக மாறியது. 2013-ம் ஆண்டில் காங்கிரஸ் ஆதரவுடன் அரியணை ஏறியது ஆம் ஆத்மி. உட்கட்சிப் பூசல் மற்றும் பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளின் தொடர் குடைச்சல்கள் காரணமாக 49 நாள்களிலேயே தன் முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். ஒரு வருட ஜனாதிபதி ஆட்சிக்குப் பிறகு 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 67 இடங்களைக் கைப்பற்றி இமாலய வெற்றியுடன் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது ஆம் ஆத்மி. அரவிந்த் கெஜ்ரிவால், இரண்டாவது முறையாக முதல்வர் ஆனார்.

பிரியங்கா, ராகுல்; கெஜ்ரிவால்; மோடி
பிரியங்கா, ராகுல்; கெஜ்ரிவால்; மோடி

‘கட்டமைப்புகளில் முதலீடு செய்வோம். ஊழலற்ற ஆட்சி அமைப்போம்’ என்பதை முன்வைத்து ஆம் ஆத்மி ஆட்சியில் அமர்ந்தது. கல்வி மற்றும் சுகாதாரத்தில் முதலீடுகளை அதிகரித்து, அரசுப் பள்ளிகளை மேம்படுத்தியது. மொஹல்லா கிளினிக்குகளை டெல்லி முழுவதும் திறந்தது. அதோடு, ஆம் ஆத்மி அரசு மீது சொல்லிக்கொள்ளும்படியாக ஊழல் குற்றச்சாட்டுகளும் எழவில்லை. எனவே, ஐந்து ஆண்டுகளில் தான் செய்த நலத்திட்டங்களை முன்னிறுத்தி ஆம் ஆத்மி இந்தத் தேர்தலைச் சந்தித்துவருகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

1998-ம் ஆண்டு டெல்லியில் ஆட்சியை இழந்த பா.ஜ.க, மீண்டும் ஆட்சியில் அமர்ந்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறது. காங்கிரஸின் வீழ்ச்சியில் ஆம் ஆத்மி வளர்ந்தாலும், பா.ஜ.க தனக்கான இடத்தைத் தக்கவைத்தே வந்துள்ளது. டெல்லி தேர்தல் பிரசாரத்தில் உள்ளூர் விவகாரங்களைக்காட்டிலும் தேசிய விவகாரங்களுக்கே பா.ஜ.க முக்கியத்துவம் கொடுத்துவருகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் பிரசாரப் பேரணிகளில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், அயோத்தி ராமர் கோயில், குடியுரிமை திருத்த சட்டம், அதற்கு எதிரான போராட்டங்கள் ஆகியவையே அதிகம் முன்னிறுத்தப்படுகின்றன.

ஆம் ஆத்மியின் திட்டங்களுக்குப் போட்டியாக, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குவதாகவும், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்களை நிறைவேற்றுவோம் எனவும் தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் பா.ஜ.க தெரிவித்துள்ளது.

முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்கிற குழப்பமும் பா.ஜ.க-வில் நிலவிவந்தது. ‘டெல்லிக்கு முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்டு விவாதிக்கத் தயாரா?’ என அரவிந்த் கெஜ்ரிவால் பா.ஜ.க-வுக்கு சவால்விடுத்துள்ளார். முதல்வர் வேட்பாளர் இல்லாமல் பா.ஜ.க தேர்தலைச் சந்திப்பதும் அதற்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளில் ஐந்து இடங்களில் காங்கிரஸ் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. ஷீலா தீட்ஷித் தலைமை வகிக்கும்பட்சத்தில், சட்டமன்றத் தேர்தல் மும்முனைப் போட்டியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. அவருடைய தனிப்பட்ட செல்வாக்கு அதற்கு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் ஷீலாவின் எதிர்பாராத மறைவு, தேர்தல் கணக்குகளை மாற்றிப்போட்டது. காங்கிரஸ் கட்சியும் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. 1998 முதல் 2013 வரை 15 ஆண்டுகள் ஆட்சிசெய்த தலைநகரில், தான் இழந்த செல்வாக்கை மீட்டு தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதே காங்கிரஸுக்கு பெரும்சவாலாக உள்ளது.

இந்த நிலையில், அனைத்துக் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியிலும் போக்குவரத்து மற்றும் காற்று மாசு முக்கிய இடம்பெற்றுள்ளன. `டெல்லியில் காற்று மாசைப் போக்க, இரண்டு கோடி மரங்களை நடுவோம்’ என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. `இரண்டு ஆண்டுகளில் டெல்லியின் காற்று மாசு குறைக்கப்படும்’ என்று பா.ஜ.க அறிவித்துள்ளது. `பட்ஜெட்டில் 25 சதவிகிதம், காற்று மாசைக் குறைப்பதற்கு செலவிடப்படும்’ என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

தேர்தலுக்கு முன்பாக வந்துள்ள கருத்துக்கணிப்புகள், பெரும்பாலும் ஆம் ஆத்மி 50 சதவிகித வாக்குகளைப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும், பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என்றும் தெரிவித்திருக்கின்றன.

யார் கணக்குகள் வெற்றிபெறும் என்பதை 11-ம் தேதி முடிவுகள் தெரிவித்துவிடும்.