தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்குத் தேர்தல் செலவு செய்ய உச்ச வரம்பு உண்டு. ஆனால், கட்சிகளுக்கு அந்தக் கட்டுப்பாடு இல்லை. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க செய்த செலவுகள் பற்றிய ஸ்கேன் ரிப்போர்ட் இது.
கதீட்ரல் ரோடு பேங்க் ஆஃப் இந்தியா, அபிராமபுரம் இந்தியன் பேங்க், மயிலாப்பூர் கரூர் வைஸ்யா பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகளில் 7 கணக்குகளை வைத்திருக்கிறது அ.தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அ.தி.மு.க தலைமையிடம் கையிருப்பு மற்றும் வங்கி இருப்புகளைச் சேர்த்து மொத்தமாக 192.58 கோடி ரூபாய் இருந்தது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு பணமாக 1.19 கோடி ரூபாய், காசோலை மற்றும் டிராப்ட் மூலமாக 60.62 கோடி ரூபாய் என மொத்தமாக 61,82,18,111 ரூபாய் நன்கொடையாக அ.தி.மு.க-வுக்கு கிடைத்திருக்கிறது.

தேர்தலுக்காக என்னென்ன செலவுகளை அ.தி.மு.க செய்தது என்பதை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். தேர்தல் பிரசாரத்துக்கு 42 நட்சத்திர பேச்சாளர்களை அ.தி.மு.க பயன்படுத்தியது. இவர்களுக்கான செலவை அ.தி.மு.க தலைமைதான் செய்தது. இதில் நடிகர் ஆர்.சுந்தர்ராஜனுக்குதான் மிகக் குறைவாக 36,000 ரூபாயைச் செலவழித்திருக்கிறார்கள். இவருக்கு அடுத்தபடியாக நடிகை விந்தியாவுக்கு 54,000 ரூபாய் செலவிட்டுள்ளனர். இவருக்கு அடுத்த இடத்தில் மூன்று பேர் இருக்கிறார்கள். பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் நிலோபர் கபீல், வி.எம்.ராஜலட்சுமி ஆகியோருக்கு தலா 69,000 ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது.
அமைச்சர்கள் அல்லாத பா.வளர்மதி, கோகுல இந்திரா, விஜிலா சத்தியானந்த், நிர்மலா பெரியசாமி ஆகியோரைவிட அமைச்சர்கள் நிலோபர் கபீல், வி.எம்.ராஜலட்சுமிக்குக் குறைவாகப் பணம் ஒதுக்கியிருக்கிறது அ.தி.மு.க. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதிக்கு எந்தச் செலவும் செய்யப்படவில்லை. ஜே.சி.டி.பிரபாகர், விஜிலா சத்தியானந்த், நிர்மலா பெரியசாமி ஆகியோருக்கு தலா 1.25 லட்சமும் தமிழ்மகன் உசேனுக்கு 1.69 லட்சமும் செலவழித்திருக்கிறார்கள்.

ஆர்.வைத்திலிங்கம் எம்.பி, சி.பொன்னையன், நத்தம் விசுவநாதன், தளவாய் சுந்தரம், வளர்மதி, கோகுல இந்திரா, அன்வர்ராஜா, ஆர்.பி.உதயக்குமார், வைகை செல்வன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், சரோஜா, எம்.சி.சம்பத், கே.சி.கருப்பணன், ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், உடுமலை ராதாகிருஷ்ணன், சி.விஜயபாஸ்கர், சேவூர் ராமச்சந்திரன், துரைக்கண்ணு, கடம்பூர் ராஜு, கே.சி.வீரமணி, கே.டி.ராஜேந்திர பாலாஜி, பெஞ்சமின், எம்.ஆர்.விஜயபாஸ்கர், மணிகண்டன் ஆகிய 33 பேருக்கு தலா 1.94 லட்சம் ரூபாய் பிரசார செலவுக்காகத் தரப்பட்டிருக்கிறது. இந்த 42 நட்சத்திர பேச்சாளர்களுக்காக மட்டும் மொத்தமாக 72,43,000 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது நடைபெற்ற 2016 சட்டசபைத் தேர்தலில் நட்சத்திர பேச்சாளர்களுக்கு 20.27 லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டது. ஆனால், அதைவிட நான்கு மடங்கு செலவழித்திருக்கிறது இப்போது இருக்கிற தலைமை.

தலைவர்கள் பிரசார போக்குவரத்துக்காகவும் தனியாகச் செலவு செய்யப்பட்டிருக்கிறது. தலைவர்கள் யார்? எடப்பாடியும் பன்னீர்செல்வமும்தான். 87,732 ரூபாய் போக்குவரத்துக்காகச் செலவு செய்திருக்கிறார் பன்னீர்செல்வம். எடப்பாடி 4,99,396 ரூபாய் செலவழித்திருக்கிறார். எடப்பாடிக்குச் செய்யப்பட்ட செலவில் 2,47,896 ரூபாய் மட்டும் விமானத்துக்காகக் கொடுத்திருக்கிறார்கள். இந்த விமான ஏற்பாட்டைச் சென்னை ஜார்ஜ் டவுன் ஏரியாவில் உள்ள Creative Links Tours & Travels நிறுவனம் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது. எடப்பாடியும் பன்னீரும் பிரசாரம் செய்த வகையில், மொத்தமாக 5,87,128 ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள்.

அடுத்து விளம்பர செலவுகள். ஊடகங்களில் விளம்பரங்களைச் செய்வதற்காக Eywa Media, Excellent 2 Publicities, Flame Advertising Co, Bronsky Media Limited, A One Positive Advertising ஆகிய ஐந்து நிறுவனங்களைப் பயன்படுத்தியிருக்கிறது அ.தி.மு.க. பத்திரிகைகள், டிவி சேனல்கள், எஸ்.எம்.எஸ், இணையத் தளங்கள், கேபிள் டிவி ஆகியவற்றில் தேர்தல் விளம்பரங்களைச் செய்தது அ.தி.மு.க தலைமை. பல்க் எஸ்.எம்.எஸ்., மற்றும் மின்னணு விளம்பரங்களுக்காக மட்டும் 1.86 கோடி ரூபாயை ஒதுக்கினார்கள். பத்திரிகை விளம்பரங்களுக்கு 8.52 கோடி ரூபாயும் டிவி மற்றும் ரேடியோ விளம்பரங்களுக்கு 8.73 கோடி ரூபாயும் செலவழித்திருக்கிறார்கள். மொத்தமாகத் தேர்தல் விளம்பரத்துக்காக மட்டும் 19,11,89,620 ரூபாய் அளிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் விளம்பரங்களுக்காக அ.தி.மு.க செலவழித்த தொகை 49.71 கோடி ரூபாய்

வேட்புமனுவோடு அளிக்கப்படும் அஃபிடவிட் பாரங்கள், ரசீது புத்தகங்கள் அச்சிட்டது என 17,293 ரூபாயும் தேர்தல் அறிக்கை புத்தகங்கள் தயாரிப்புக்காக 2,88,680 ரூபாயும், சின்னங்கள் ஒதுக்குவது தொடர்பாகத் தேர்தல் கமிஷனிடம் அளிக்கப்படும் ஃபார்ம் A, B பிரின்டிங் செய்வதற்காக 3,894 ரூபாயும், போக்குவரத்து, உணவு, டீசலுக்கு 31,226 ரூபாயும் டீ, ஸ்நாக்ஸ்க்கு 1,82,900 ரூபாயும் என மொத்தம் 5,23,993 ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள்.

தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களின் குற்றப் பின்னணி குறித்த தகவல்களை, பத்திரிகைகள் மற்றும் 'டிவி' சேனல்களில், விளம்பரமாக வெளியிட வேண்டும்' எனத் தேர்தல் ஆணையம், அறிவித்திருந்தது. அ.தி.மு.க சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களில் தம்பிதுரை, அக்ரி கிருஷ்ணமூர்த்தி (திருவண்ணாமலை) ஆகிய வேட்பாளர்கள் மீது வழக்குகள் இருந்தன. சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாகராஜன் (மானாமதுரை) லோகிராஜன் (ஆண்டிபட்டி) ஆகியோர் மீதும் வழக்குகள் நிலுவையில் இருந்தன. இவர்களைப் பற்றிய விளம்பரத்தையும் அ.தி.மு.க தலைமைதான் வெளியிட்டது. 'நமது அம்மா' நாளிதழிலும் ராஜ் நியூஸ் தொலைக்காட்சி சேனலிலும் தலா மூன்று முறை வெளியிடப்பட்டது. இதற்காக நமது அம்மா நாளிதழுக்கு 7,56,000 ரூபாயும் ராஜ் நியூஸ் சேனலுக்கு 70,800 ரூபாயும் செலவழித்திருக்கிறார்கள். வேட்பாளர்களின் குற்றவியல் தொடர்பான செய்திகளை வெளியிட்டதில் மட்டும் 8,26,800 ரூபாய் செலவானது.
அத்தனை செலவுகளையும் ஒட்டுமொத்தமாகக் கணக்கிட்டால் 20,03,70,541 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில் செலவிடப்பட்ட மொத்த பணம் 64.72 கோடி ரூபாய். இது கணக்கில் காட்டப்பட்ட செலவுதான். உண்மையான செலவு எவ்வளவு ஆகியிருக்குமென்பது அவரவர் கற்பனைக்கே.
செலவுகள் ஹைலைட்ஸ் !
நட்சத்திர பேச்சாளர்கள் 72,43,000
தலைவர்கள் பிரசாரம் 5,87,128
விளம்பரங்கள் 19,11,89,620
அஃபிடவிட், ரசீது புத்தகங்கள் 17,293
தேர்தல் அறிக்கை புத்தகங்கள் 2,88,680
ஃபார்ம் A, B பிரின்டிங் 3,894
போக்குவரத்து, உணவு, டீசல் 31,226
டீ, ஸ்நாக்ஸ் 1,82,900
வேட்பாளர் குற்றவியல் விளம்பரம் 8,26,800
மொத்தம் ரூ. 20,03,70,541