Published:Updated:

15 ஆயிரம், 24 ஆயிரம், 44 ஆயிரம், 39 ஆயிரம்... கட்சிகளின் இடைத்தேர்தல் ப்ளஸ் மைனஸ் கணக்குகள்!

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்திருக்கின்றன. 6 மாதங்களுக்கு முன்பு, நாடாளுமன்றத் தேர்தல் நடந்த போது, இதே சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குப்பதிவுகளில் பெரும்பான்மை பெற்றிருந்தது திமுக. இந்தக் குறுகிய காலத்திற்குள் வெற்றியை அடைந்துள்ளது அதிமுக.

ஸ்டாலின்
ஸ்டாலின்

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியைக் குளிர வைத்திருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலில் சறுக்கிய போதும், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள போதுமான இடங்கள் பெற்றுத் தப்பினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்த முறை, மேலும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் எடப்பாடி பழனிசாமி கைகளுக்குச் சென்றிருக்கின்றன.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்தியா முழுவதும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் பெரும்பான்மை இடங்களை பி.ஜே.பி வெல்ல, நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். நாடு முழுவதும் பி.ஜே.பி அலை வீசிய போதும், காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்த போதும், தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 38 இடங்களில் வென்றது.

தமிழக சட்டசபையில் காலியாக இருந்த 18 தொகுதிகளுக்கான முதல் கட்டமாகவும், 4 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாகவும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் திமுக 13 தொகுதிகளையும், அதிமுக 9 தொகுதிகளையும் வென்றன. ஆட்சியைத் தொடர்ந்தது அதிமுக.

நாம் தமிழர் Vs பனங்காட்டுப் படை! -சீமானுக்கு அதிர்ச்சி கொடுத்த நாங்குநேரி

நாங்குநேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். கடந்த மே 29 அன்று, வசந்தகுமார் தன் பதவியை ராஜினாமா செய்ததால், நாங்குநேரி தொகுதி காலியானது. நாங்குநேரி தொகுதியில் திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் களமிறங்கினார். அவருக்கு எதிராக நாராயணனை வேட்பாளராக நிறுத்தியது அதிமுக கூட்டணி.

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி திருநெல்வேலி நாடாளுமன்றத்திற்குள் வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஞானதிரவியம் வெற்றிபெற்றார். அந்தத் தேர்தலில், சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக முடிவுகள் வெளியிடப்பட்டன. நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில், திமுக கூட்டணி 86 ஆயிரம் வாக்குகளையும், அதிமுக கூட்டணி வேட்பாளர் மனோஜ் பாண்டியன் 51 ஆயிரம் வாக்குகளையும் பெற்றிருந்தார். 6 மாதங்களுக்குப் பிறகு, இடைத்தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் திமுக கூட்டணி ஏறத்தாழ 62 ஆயிரம் வாக்குகளையும், அதிமுக கூட்டணி 95 ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளன.

நாங்குநேரி இடைத்தேர்தல்
நாங்குநேரி இடைத்தேர்தல்
கடந்த 6 மாதங்களுக்குள், நாங்குநேரி தொகுதியில் திமுக கூட்டணி ஏறத்தாழ 24 ஆயிரம் வாக்குகளை இழந்துள்ளது; அதிமுக கூட்டணி ஏறத்தாழ 44 ஆயிரம் வாக்குகளை வென்றுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி முடிவுகளும், நாங்குநேரி தொகுதி முடிவுகளோடு ஒத்துப் போகின்றன, விக்கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவைச் சேர்ந்த ராதாமணி, கடந்த ஜூன் மாதம் மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பின், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக சார்பில் புகழேந்தி, அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் போட்டியிட்டனர். விக்கிரவாண்டியில் தற்போது அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் அமைந்துள்ளது விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், விழுப்புரம் தொகுதியின் வேட்பாளராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். அதிமுக கூட்டணிக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக வடிவேல் ராவணன் போட்டியிட்டார். தொகுதிவாரியாக வெளியிடப்பட்ட முடிவுகளில், விக்கிரவாண்டி தொகுதியில், திமுக கூட்டணியின் ரவிக்குமார் ஏறத்தாழ 83 ஆயிரம் வாக்குகளையும், அதிமுக கூட்டணியின் வடிவேல் ராவணன் ஏறத்தாழ 75 ஆயிரம் வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

தற்போதைய இடைத்தேர்தல் முடிவுகளின் படி, விக்கிரவாண்டி தொகுதியில் திமுக கூட்டணியின் புகழேந்தி ஏறத்தாழ 69 ஆயிரம் வாக்குகளையும், அதிமுக கூட்டணியின் முத்தமிழ்ச்செல்வன் 1.13 லட்சம் வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இயந்திரக் கோளாறு; தகித்த தி.மு.க; பதற்றமான பூத்துகள்!- விக்கிரவாண்டி, நாங்குநேரியில் என்ன நடக்கிறது?
கடந்த 6 மாதங்களுக்குள், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக கூட்டணி ஏறத்தாழ 15 ஆயிரம் வாக்குகளை இழந்துள்ளது; அதிமுக கூட்டணி ஏறத்தாழ 39 ஆயிரம் வாக்குகளை வென்றுள்ளது.

6 மாதங்களுக்கு நிகழ்ந்துள்ள இந்த மாற்றம் குறித்து, அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வனிடம் பேசினோம். "நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகம் பொய்யான வாக்குறுதிகளை மக்கள் மத்தியிலே வழங்கியது. பயிர்க்கடன் ரத்து, வங்கிக்கடன் ரத்து, கல்விக்கடன் ரத்து எனப் பொய்யான வாக்குறுதிகளைச் சொன்னது திமுக. மக்கள் நம்பி வாக்களித்தனர். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை. தொடர்ந்து பொய்யான வாக்குறுதிகளை அளித்ததால், மக்கள் அதனைப் புரிந்துகொண்டு அவர்களைப் புறக்கணித்திருக்கிறார்கள். இது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்குக் கிடைத்திருக்கிற மிகப்பெரிய வெற்றி. 2021ஆம் ஆண்டு நடக்கவுள்ள பொதுத் தேர்தலுக்கான அச்சாரமாக இதைப் பார்க்கலாம்" என்றார்.

வைகைச்செல்வன்
வைகைச்செல்வன்

திமுக வழக்கறிஞர் தமிழன் பிரசன்னாவிடம் இதுகுறித்துக் கேட்டோம். "2016 சட்டமன்றத் தேர்தலிலும், தற்போதைய இடைத்தேர்தலிலும் எங்கள் வாக்குச் சதவிகிதத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. பா.ம.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகள் பலமாக உள்ள தொகுதி விக்கிரவாண்டி. இதைக் கடந்து ஆளும் ஆட்சியாளர்களாக, அமைச்சர்களாக அதிமுக இருக்கிறது. அந்தப் போக்குதான் அங்கு செல்லுபடியாகுமே தவிர, நாங்கள் எவ்வளவு முயன்றாலும் அது செல்லாது. இடைத்தேர்தல்கள் என்பது ஒரு ஆட்சியின் எடையையோ, அதிகாரத்தையோ பொறுத்து அமைவதில்லை. ஆளுங்கட்சி அந்த அதிகாரத்தை எப்படி பயன்படுத்துகிறது என்பதைப் பொறுத்தது.

அமைச்சர்களும், முன்னாள் அமைச்சர்களும் செய்துள்ள பண விநியோகத்தைப் பார்க்கும் போது, இது எங்களுக்கான தோல்வியல்ல; ஜனநாயகத்திற்கான தோல்வி என்று தெரிகிறது. நாங்குநேரி தொகுதியில் வாக்குப்பதிவு குறைவாக இருந்தது. தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் தேர்தலைப் புறக்கணித்ததும், தொடர் மழை முதலான அதற்குக் காரணம். இந்தத் தோல்வியை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், இது மக்களால் தரப்பட்ட தோல்வியல்ல; ஆளுங்கட்சியால் வாங்கப்பட்ட வெற்றி" என்றார் தமிழன் பிரசன்னா.

தமிழன் பிரசன்னா
தமிழன் பிரசன்னா

6 மாதங்களில் வாக்குகளின் எண்ணிக்கை இரு தரப்பிலும் மாறியுள்ளன. இதற்கு இரு தரப்பும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இறுதியில் அதிமுக தொண்டர்களின் நம்பிக்கையாக எடப்பாடி பழனிசாமியை இந்தத் தேர்தல் முடிவுகள் மாற்றியுள்ளன என்பது மட்டும் உண்மை.