Published:Updated:

மேயர், நகராட்சித் தலைவர் பதவிகள் விற்பனைப் பொருள்களல்ல!

மேயர், நகராட்சித் தலைவர் பதவிகள்
பிரீமியம் ஸ்டோரி
மேயர், நகராட்சித் தலைவர் பதவிகள்

- வலுப்பெறும் நேரடித் தேர்தல் கோரிக்கை...

மேயர், நகராட்சித் தலைவர் பதவிகள் விற்பனைப் பொருள்களல்ல!

- வலுப்பெறும் நேரடித் தேர்தல் கோரிக்கை...

Published:Updated:
மேயர், நகராட்சித் தலைவர் பதவிகள்
பிரீமியம் ஸ்டோரி
மேயர், நகராட்சித் தலைவர் பதவிகள்

`விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் செப்டம்பர் 15-க்குள் நடத்தப்பட வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், அதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. இன்னொரு பக்கம் நடத்தப்படாத மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தேர்தல் குறித்த எதிர்பார்ப்பும் எகிறத் தொடங்கியிருக்கும் நிலையில், `மாநகராட்சி மேயர் மற்றும் நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்’ என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

‘மக்களால் ஓட்டுப் போட்டு நேரடித் தேர்தல் மூலமே மேயர்கள், நகராட்சித் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலினிடம் மனு அளித்து, இந்த விவாதத்தைத் தொடங்கிவைத்திருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். இதையடுத்தே, தற்போது இந்தக் கருத்து வலுப்பெறத் தொடங்கியிருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில் நேரடி மற்றும் மறைமுகத் தேர்தல் விஷயத்தில் தமிழகத்தில் கடந்த காலங்களில் நடந்த வரலாற்றை விவரித்தார்கள் அரசியல் பார்வையாளர்கள்...

மேயர், நகராட்சித் தலைவர் பதவிகள் விற்பனைப் பொருள்களல்ல!

‘‘பஞ்சாயத்து ராஜ் சட்டம் இயற்றப்பட்ட பின்னர், 1996-லிருந்து தமிழகத்தில் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பதவிகளைத் தவிர, மற்ற உள்ளாட்சிப் பதவிகள் அனைத்தும் நேரடித் தேர்தல் முறையில்தான் தேர்வு செய்யப்பட்டுவந்தன. 2001-ம் ஆண்டு ஸ்டாலின் நேரடித் தேர்தலில்தான் மேயரானார். 2006-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க., ‘நகர்ப்புற உள்ளாட்சித் தலைவர்கள் அனைவரும் மறைமுகத் தேர்தலில் தேர்வு செய்யப்படுவார்கள்’ என்று சட்டத் திருத்தம் கொண்டுவந்தது. அதன்படி அப்போது சென்னை மாநகராட்சியில் கவுன்சிலராகி மேயரானார், தற்போதைய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

2011-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., ஆகஸ்ட் 30-ம் தேதி ‘நகர்ப்புற உள்ளாட்சித் தலைவர்கள் அனைவரும் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவார்கள்’ என்று சட்டத் திருத்தம் கொண்டுவந்தது. ‘கவுன்சிலர்களிலிருந்து மேயர் தேர்ந்தெடுக்கப்படுவதால், அவரது வார்டை மட்டுமே மேயர் கவனிக்கிறார். மற்ற வார்டுகள் மீது கவனம் செலுத்துவதில்லை’ என்ற காரணத்தைச் சொல்லித்தான் சட்டத்தைத் திருத்தினார் ஜெயலலிதா. அதன்படி, அப்போது சைதை துரைசாமி நேரடித் தேர்தலில் சென்னை மாநகராட்சியின் மேயரானார். 2016-ல் இரண்டாவது முறையாக ஆட்சியமைத்த ஜெயலலிதா, ‘மாநகராட்சி மேயர்கள் மட்டும் மறைமுகத் தேர்தலில் தேர்வு செய்யப்படுவார்கள்’ என்று மீண்டும் சட்டத்தைத் திருத்தினார். அப்போது, ‘மேயர் ஒரு கட்சியைச் சேர்ந்தவராகவும், கவுன்சிலர்கள் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கும் சூழலில், நிர்வாகம் பாதிக்கப்படுகிறது. மறைமுகத் தேர்தலால்தான் நிலையான அமைப்பு உருவாகும். மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து வந்த பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இந்த மாற்றம் செய்யப்படுகிறது’ என்ற விளக்கத்தையும் கொடுத்தது அ.தி.மு.க அரசு. இந்தநிலையில்தான் இப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நேரடித் தேர்தல் கோரிக்கையை வைத்திருக்கிறது” என்றவர்கள், மறைமுகத் தேர்தலின் பாதகங்கள் பற்றியும் சொன்னார்கள்...

“கவுன்சிலர்கள் மூலம் மேயரோ, நகராட்சித் தலைவரோ தேர்வு செய்யப்படும்போது, அங்கு குதிரைப் பேரம் நடக்கிறது. சுயேச்சையாக வெற்றிபெற்ற கவுன்சிலர்களை விலைக்கு வாங்கி தலைவரைத் தேர்வுசெய்கிறார்கள். மறைமுக வாக்குப்பதிவு என்பதால், மாற்றுக் கூட்டணியிலிருக்கும் கட்சிகள்கூட கூட்டணிக் கட்சிக்கு வாக்களிக்காமல், தங்களை நன்றாக கவனிக்கும் கட்சிக்கு வாக்களிக்கின்றன” என்றார்கள்.

உள்ளாட்சிகளுக்கான அதிகாரப்பகிர்வை வலியுறுத்திவரும் ‘மக்களின் குரல்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாரு கோவிந்தன், ‘‘கவுன்சிலர்கள் மூலமாக மேயரைத் தேர்வு செய்தால்தான், கவுன்சிலர்கள் ஒத்துழைப்பார்கள் என்பது கட்சிகளின் கருத்து. ஆனால், நேரடித் தேர்தல் முறையே நேர்மையான ஜனநாயகமாகும். மக்களாட்சி முறையில் இதற்கான வழிவகை இருக்கும்போது எதற்காக மறைமுகத் தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் என் கேள்வி’’ என்கிறார்.

‘தன்னாட்சி’ இயக்கத்தின் பொதுச்செயலாளர் நந்தகுமாரோ, ‘‘நேரடித் தேர்தல்தான் மேயருக்கான பலம். கவுன்சிலர்கள் மூலம் மேயர் அல்லது நகராட்சித் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டால், மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி பதவிநீக்கம் செய்துவிடுவோம் என்று அவர்கள் மிரட்டும் சம்பவங்களும் நடக்க வாய்ப்பு இருக்கிறது. மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை அருகிலிருந்து மேற்கொள்ளும் உள்ளாட்சித் தலைவர்கள், அதே மக்களால் தேர்வு செய்யப்பட்டால்தான் மக்களுக்கு நன்றியுடன் செயல்படுவார்கள். கவுன்சிலர்கள் மூலம் தேர்வானால், மக்களை மதிக்க மாட்டார்கள்” என்றார்.

சாரு கோவிந்தன், நந்தகுமார், பழனிதுரை
சாரு கோவிந்தன், நந்தகுமார், பழனிதுரை

உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான ஆய்வுகள் செய்துவரும் காந்தி கிராம பல்கலைக்கழக அரசியல் அறிவியல்துறை முன்னாள் பேராசிரியர் பழனிதுரை நம்மிடம், “இப்போது பல மாநிலங்களில் எம்.எல்.ஏ-க்களையே விலைக்கு வாங்குகிறார்கள். மறைமுகத் தேர்தல் நடந்தால் உள்ளாட்சி அமைப்புகளிலும் அதுதான் நடக்கும். மேயர், நகராட்சித் தலைவர்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகள் ஒன்றும் விற்பனைப் பொருள்கள் அல்ல. கடுமையான ஊழலுக்கும் இது வழிவகுக்கும். அதேசமயம், நேரடித் தேர்தலிலும் ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் பழக்கம் இருக்கிறது. அதையும் நிவர்த்தி செய்ய வேண்டும். ஜனநாயகத்தின் முக்கிய அம்சமே தேர்தல்தான். அது எந்த அளவுக்கு நியாயமாக நடக்கிறதோ அந்த அளவுக்கு ஜனநாயகம் காப்பாற்றப்படும்” என்றார்.

ஓங்கி ஒலிக்கும் குரல்களுக்குக் காதுகொடுப்பாரா ஸ்டாலின்?