Published:Updated:

கோவா கோதா! - பரிதாப காங்கிரஸ்... நெருக்கடியில் பா.ஜ.க... கால்பதிக்கும் மம்தா...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மோடி, ராகுல், மம்தா, கெஜ்ரிவால்
மோடி, ராகுல், மம்தா, கெஜ்ரிவால்

2017-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பரிதாபமாக இருக்கிறது காங்கிரஸ்.

பிரீமியம் ஸ்டோரி

பா.ஜ.க-வும் காங்கிரஸும் 2024 நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து சுற்றிச்சுழன்றுவருவதால், நாட்டிலேயே அதிக சட்டமன்றத் தொகுதிகளைக்கொண்ட உத்தரப்பிரதேசத் தேர்தல் களம் அனல் பறக்கிறது. இந்தநிலையில்தான், கோவாவின் முன்னாள் ஆளுநரும், தற்போதைய மேகாலயா ஆளுநருமான சத்ய பால் மாலிக், “கோவாவில் கொரோனா பேரிடரின்போது, பா.ஜ.க அரசின் அனைத்து நடவடிக்கைகளிலும் ஊழல் தலைவிரித்தாடியது. இதுபற்றியெல்லாம் நான் கேள்வி கேட்டதாலேயே அங்கிருந்து மேகாலயாவுக்கு மாற்றிவிட்டார்கள்” என்று கோவா பா.ஜ.க அரசுமீது ஊழல் புகாரை சுமத்தியதைத் தொடர்ந்து கோவா தேர்தல் களமும் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இன்னொரு பக்கம் மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் என முக்கியத் தலைவர்கள் கோவா கோதாவில் களமிறங்கியிருக்கிறார்கள்.

மூடப்பட்ட சுரங்கங்கள்!

2017 சட்டமன்றத் தேர்தலில், கோவாவிலுள்ள 40 தொகுதிகளில் 17 தொகுதிகளைக் கைப்பற்றியது காங்கிரஸ். பெரும்பான்மைக்கு 21 தொகுதிகள் தேவைப்பட்ட நிலையில், 13 தொகுதிகளை மட்டுமே வென்ற பா.ஜ.க., சுயேச்சை எம்.எல்.ஏ-க்கள், மாநிலக் கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களை வளைத்து இரண்டாவது முறையாக அங்கு ஆட்சியமைத்தது. தொடர்ந்து 2019, ஜூலை மாதம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான சந்திரகாந்த் உள்ளிட்ட 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வில் இணைந்ததை அடுத்து, கோவா சட்டமன்றத்தில் பா.ஜ.க-வின் பலம் 27-ஆக உயர்ந்தது.

இதற்கிடையே கோவா மாநிலத்தில் பிரச்னைகளும் அதிகரித்தன. கடந்த 2015-ல் கோவாவில் செயல்பட்டுவந்த 88 இரும்பு, மக்னீசியம் சுரங்கங்களின் உரிமங்களை 20 ஆண்டுகளுக்குப் புதுப்பித்தது மாநில பா.ஜ.க அரசு. ஆனால், 2018-ல் இதற்குத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம். மாநிலத்தின் மொத்த ஜி.டி.பி-யில் 30 சதவிகிதம் இந்தச் சுரங்கத் தொழிலில் மட்டுமே கிடைத்துவந்த நிலையில், தடையின் காரணமாக கோவாவின் பொருளாதாரம் கடுமையாகச் சரிந்தது. தொடர்ந்து கொரோனாவால் சுற்றுலா தொழிலும் முடங்கியதால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். தற்போது சுற்றுலா தொழில் ஓரளவுக்கு பழையநிலைக்குத் திரும்பியிருந்தாலும், சுரங்கங்கள் திறக்கப்படாதது மாநில பா.ஜ.க அரசுக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தநிலையில்தான் ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்தி, நெருக்கடியை அதிகப்படுத்தியிருக்கிறார் மேகாலயா ஆளுநர். இதையடுத்து, மக்களின் அதிருப்தி மனநிலையை மாற்றுவதற்காக, பெரும்பாலான புதிய முகங்களை வேட்பாளர்களாக அறிவிக்கும் திட்டத்தில் இருக்கிறது பா.ஜ.க.

நான்காகச் சரிந்த காங். எம்.எல்.ஏ-க்கள்!

2017-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பரிதாபமாக இருக்கிறது காங்கிரஸ். அந்தத் தேர்தலில் 17-ஆக இருந்த அந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை, தற்போது வெறும் நான்காகக் குறைந்திருக்கிறது. அப்படியிருந்தபோதும் ‘மற்ற கட்சிகளுக்குத் தாவிய எம்.எல்.ஏ-க்களை மீண்டும் சேர்க்க மாட்டோம்’ என்று சொல்லியிருக்கிறது காங்கிரஸ். தற்போது கூட்டணி அமைப்பதில் மும்முரமாக இருக்கும் கோவா மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பார்வையாளராக ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

``கடந்த தேர்தலில் குறுக்குவழியில் பா.ஜ.க ஆட்சி அமைத்துவிட்டது. இந்தமுறை அப்படி நடக்கக் கூடாது என்றால் நாம் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற வேண்டும்’’ என்று கட்சி நிர்வாகிகளுக்குக் கட்டளையிட்டிருக்கிறது காங்கிரஸ் மேலிடம். தொடர்ந்து ராகுல் காந்தியும் கடந்த வாரம் தனது பிரசாரத்தை அங்கு தொடங்கிவிட்டார். ஆனாலும், “காங்கிரஸிடம் பெரிதாக எந்தத் தேர்தல் வியூகமும் இல்லாததால், அந்தக் கட்சி எந்த அளவுக்குச் சாதிக்கும் என்று தெரியவில்லை” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!

கோவா கோதா! - பரிதாப காங்கிரஸ்... நெருக்கடியில் பா.ஜ.க... கால்பதிக்கும் மம்தா...

எதிர்க்கட்சியாகத் துடிக்கும் ஆம் ஆத்மி... கால்பதிக்க நினைக்கும் திரிணாமுல்!

கடந்த தேர்தலில் ஓர் இடம்கூட வெல்லாத ஆம் ஆத்மி, இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சியாகிவிடத் துடிக்கிறது. கோவாவின் வேலைவாய்ப்பின்மையை மையப்படுத்தியே தேர்தல் வாக்குறுதிகளை அளித்துவருகிறது அந்தக் கட்சி. இன்னொரு பக்கம், பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகளோடு கோவாவில் களமிறங்கியிருக்கிறார் திரிணாமுல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி. பா.ஜ.க-வைக் கடுமையாக விமர்சிக்கும் மம்தா, ``பா.ஜ.க அசுர பலமடைந்ததற்குக் காரணமே காங்கிரஸ்தான்’’ என்று காங்கிரஸையும் வெளுத்து வாங்கிவருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் கோவாவின் முன்னாள் முதல்வர் லூயிசினோ ஃபெலேரோ காங்கிரஸிலிருந்து விலகி மம்தாவோடு கைகோத்திருப்பதால் உற்சாகமாக இருக்கிறது திரிணாமுல் காங்கிரஸ். “கோவா தேர்தலில் காங்கிரஸைவிட அதிக இடங்களில் வெற்றிபெற்றுவிட்டால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் சக்தியாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியும் என்பதே மம்தாவின் கணக்கு’’ என்கிறார்கள் கோவா தேர்தலை உற்றுநோக்குபவர்கள்!

வேலைவாய்ப்பின்மை, ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதாரச் சிக்கல் என கோவா பா.ஜ.க அரசுக்குப் பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும், வலுவான எதிர்க்கட்சி இல்லாதது அந்தக் கட்சிக்கு ப்ளஸ். முக்கியத் தலைவர்களை இழந்த காங்கிரஸ், மாநிலக் கட்சிகளோடு கூட்டணி அமைத்தாலும் அது மக்களிடம் பெரிதாக எடுபடுமா என்பது தெரியவில்லை. காரணம், ஆம் ஆத்மியும் திரிணாமுல் காங்கிரஸும் பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகளைக் கணிசமாகப் பிரிக்கின்றன. மேலும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும் வாக்குகளைச் சிதறடிக்கும். 11 சதவிகிதம் வாக்குவங்கியை வைத்திருக்கும் மகாராஷ்டிரவாடி கோமன்தாக் கட்சியும், நான்கு சதவிகித வாக்குவங்கி வைத்திருக்கும் கோவா ஃபார்வர்ட் கட்சியும் இந்தத் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனாலும், உள்ளூரில் செல்வாக்கு பெற்ற தலைவர்களை கைவசம் வைத்திருக்கும் பா.ஜ.க-வே தேர்தல் களத்தில் முந்தியிருப்பதாக சமீபத்திய கருத்துக்கணிப்புகள் சொல்லியிருக்கின்றன. தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்கள் இருப்பதால், நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு