Published:Updated:

வாக்கு சதவிகிதம் யாருக்கு சாதகம்?

2006 சட்டமன்றத் தேர்தலில் 70.56 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தபோதும், தி.மு.க-வால் தனித்து மெஜாரிட்டியைப் பெற முடியவில்லை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிந்துவிட்டது. வாக்கு எண்ணிக்கை நாளுக்காக அரசியல்வாதிகள் `திக்திக்’ மனதுடன் காத்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் தமிழகத்தில் பதிவான வாக்கு சதவிகிதம் சராசரி அளவை எட்டியிருந்தாலும், ஆட்சிக்கு எதிரான அலையா... இல்லையா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது!

தமிழக தேர்தல்களை தொடர்ச்சியாகக் கவனித்துவரும் அரசியல் ஆய்வாளர் ஒருவர், இது தொடர்பாக சில தரவுகளைப் பகிர்ந்துகொண்டார். ‘‘தமிழகத்தில் 1962 தேர்தலிலிருந்து தற்போது நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தல்வரை பார்த்தோமேயானால், 2001-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் மட்டும்தான் மிகக்குறைந்த அளவில் 59.07 சதவிகித வாக்குகள் பதிவாகின. இருந்தபோதும் கருணாநிதி, ஜெயலலிதா காலத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வோம். ராஜீவ் காந்தி மறைவைத் தொடர்ந்து 1991 சட்டமன்றத் தேர்தலில் 63.84 சதவிகித வாக்குகள் பதிவாகின. தி.மு.க-வுக்கு எதிரான மிகப்பெரிய அலை உருவாகி, கருணாநிதி உள்ளிட்ட இருவரைத் தவிர வேறெந்த தி.மு.க-வினரும் ஜெயிக்கவில்லை.

வாக்கு சதவிகிதம் யாருக்கு சாதகம்?

1991 முதல் 1996 வரையிலான ஜெயலலிதாவின் முதல் ரவுண்ட் ஆட்சியைப் பார்த்த மக்கள் யாரும் அதை மறந்திருக்க மாட்டார்கள். 1996 தேர்தலில், ஜெ-வுக்கு எதிராக வீசிய அலையும் ரஜினியின் வாய்ஸும் சேர்ந்ததால், தி.மு.க-த.மா.கா கூட்டணி வெற்றிபெற்றது. இந்த அலையின் காரணமாக 1991-ஐவிட 3 சதவிகிதம் அதிகமாக, 1996-ல் 66.95 சதவிகித வாக்குகள் பதிவாகின. அந்த ஐந்தாண்டு தி.மு.க ஆட்சிக்கு எதிராக எந்தவோர் அலையும் பெரிதாகக் கிளம்பாத காரணத்தால், 2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மிகக்குறைந்த அளவாக 59.07 சதவிகித வாக்குகள்தான் பதிவாகின.

ஜெயலலிதாவின் இரண்டாவது ஆட்சியில் பெரிதாக எதிர்ப்பு அலை உருவாகவில்லை. இதன்படி, 2006 சட்டமன்றத் தேர்தலில் 70.56 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தபோதும், தி.மு.க-வால் தனித்து மெஜாரிட்டியைப் பெற முடியவில்லை. காங்கிரஸ், பா.ம.க-வின் ஆதரவைப் பெற்றே கருணாநிதி ஆட்சி நடத்தினார். அதைவைத்துத்தான் ‘மைனாரிட்டி ஆட்சி’ என்று அடிக்கடி விமர்சித்தார் ஜெயலலிதா. அதன் பிறகு, 2009-ல் நடந்த ஈழ இனப்படுகொலை, 2ஜி முறைகேடு வழக்கு எனத் தொடர்ச்சியாக தி.மு.க மீதான குற்றச்சாட்டுகளால் எதிர்ப்பலை உருவாகி, 2011-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 78.1 சதவிகித வாக்குகள் பதிவாகின. ஜெயலலிதா முதல்வரானார். அதைத் தொடர்ந்து 2016 தேர்தலிலும் ஆட்சிக்கு எதிரான அலை உருவாகவில்லை; 74.26 சதவிகித வாக்குகள் பதிவாகி, அ.தி.மு.க ஆட்சி தொடர்ந்தது.

10 ஆண்டுகள் தொடர்ச்சியாக அ.தி.மு.க ஆண்டது போதும் என்று மக்கள் நினைத்திருந்தால், நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வாக்குகளைச் செலுத்தி, 2011 தேர்தல் வாக்கு சதவிகிதத்தைத் தாண்டியிருக்க வேண்டும். தற்போது வாக்கு சதவிகிதம் குறைந்திருக்கிறது என்றால், ஆட்சிக்கு எதிராகப் பெரிய அலை உருவாகவில்லை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நகர்ப்பகுதிகளில் வாக்கு சதவிகிதம் குறைந்ததற்குக் காரணம்... கருணாநிதி, ஜெயலலிதாவுக்குப் பிறகு தற்போதிருக்கும் தலைவர்கள் யாரையும் அப்பர் கிளாஸ் மக்களில் பலர் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான். கொரோனாவைச் சிலர் காரணம் காட்டக்கூடும். ஆனால், கொரோனா பரவிக்கொண்டிருந்தாலும், ஷாப்பிங், சினிமா, டூர் எனப் பல இடங்களுக்கும் மக்கள் சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், வாக்குப்பதிவு அன்று விடுமுறை கொடுத்தபோதும் அவர்களில் பலர் வாக்களிக்கச் செல்லவில்லை. இந்த வாக்குப்பதிவு சதவிகிதத்தின் அடிப்படையில் பார்த்தால், மெஜாரிட்டி பெற்று ஒரு கட்சி ஆட்சியமைக்கிறது என்றால், இன்னொரு கட்சி தற்போது பலமான எதிர்க்கட்சியாக அமரும்’’ என்றார்.

ஆனால், அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியோ, ‘‘2011, 2016 சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகளை 2021 தேர்தலோடு இணைத்துப் பார்க்க வேண்டாம். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் களம் மாறிவிட்டது. அதனால், அதைத்தான் நாம் கணக்கீட்டுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். 72.78 சதவிகிதம் என்பது குறைவல்ல; சராசரி அளவை எட்டிவிட்டது. 2019 நாடாளுமன்றத் தேர்தலிலிருந்து இந்தத் தேர்தல் எந்த வகையிலும் மாறுபட வாய்ப்பில்லை. சிறு சேதாரம் ஏற்படலாமே தவிர, அப்போது கிடைத்த ரிசல்ட்தான் இப்போதும் கிடைக்கப்போகிறது’’ என்றார்.

வாக்கு சதவிகிதம் யாருக்கு சாதகம்?

மூத்த பத்திரிகையாளர் துரை கருணாவின் கருத்தோ வேறு மாதிரியாக இருக்கிறது. ‘‘தி.மு.க ஆதரவு அல்லது அ.தி.மு.க எதிர்ப்பலை என்பது இந்தத் தேர்தலில் சுத்தமாக இல்லை. ஐந்தாண்டுகள் ஆட்சி நடத்தினாலே மக்களிடம் கோபம் ஏற்படும் சூழலில், அ.தி.மு.க 10 ஆண்டுகள் ஆட்சியிலிருந்தும் மக்களின் கோபத்துக்கு ஆளாகவில்லை. மத்திய, நடுத்தர வர்க்கத்தினர் பெரும்பாலானோர் வாக்களிக்கவே இல்லை. முழுமையாக வாக்கைப் பதிவுசெய்த அடித்தட்டு மக்கள் மனதில் சமீபத்திய கடன் தள்ளுபடி போன்ற விஷயங்கள் வேரூன்றியிருக் கின்றன. புதிதாக வருபவர்கள், ‘முந்தைய அரசு கஜானாவை காலியாக்கிவிட்டது என்ற ஒரு காரணத்தைச் சொல்லி தப்பிக்கக்கூடும்’ என்ற எண்ணம் அவர்களிடம் மேலோங்கியிருக்கிறது. இரு கட்சிகளுக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் குதிரைப் பேரத்துக்கும் வாய்ப்பிருக்கிறது” என்றார்.

பார்ப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு