Published:Updated:

`யார் யாரைக் கவிழ்ப்பார்களோ..!’- உள்ளாட்சி தேர்தலால் புலம்பும் காஞ்சிபுரம் திமுக, அதிமுக தொண்டர்கள்

தி.மு.க எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் பலம் வாய்ந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடிமட்ட தி.மு.க தொண்டர்களின் புலம்பல் சற்று அதிகமாகவே உள்ளது.

காஞ்சிபுரம் அ.தி.மு.கவினர்
காஞ்சிபுரம் அ.தி.மு.கவினர்

தமிழகம் முழுவதுமே உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு ஒன்றுதான் பாக்கியுள்ளது. அரசு எந்திரம், தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகள் என அனைத்துத் தரப்பிலும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க எனக் கட்சியினரும் விருப்ப மனுக்களைப் பெற்றுவருகிறார்கள். ஆனால் அ.தி.மு.கவைப் போல தி.மு.கவில் உற்சாகம் இல்லை.

காஞ்சிபுரம் தி.மு.க
காஞ்சிபுரம் தி.மு.க

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற்றாலும், அந்த வெற்றியைக் கொண்டாடும் நிலையில் தி.மு.க இல்லை. கடந்த எட்டு வருடத்திற்கும் மேலாக அ.தி.மு.க ஆட்சியே நடைபெறுவதால் தமிழகம் முழுவதும் தி.மு.கவினர் சுணக்கமாகவே இருக்கிறார்கள். தி.மு.க எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் பலம் வாய்ந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடிமட்ட தி.மு.க தொண்டர்களின் புலம்பல் சற்று அதிகமாகவே உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உத்திரமேரூர், மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம், ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய 11 தொகுதிகள் உள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருப்போரூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இரண்டு தொகுதிகளை மட்டுமே அ.தி.மு.கவால் கைப்பற்ற முடிந்தது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் திருப்போரூர் தொகுதி காலியானதால் நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க திருப்போரூர் தொகுதியைக் கைப்பற்றியது. இருந்த இரண்டு தொகுதியில் ஒரு தொகுதி தி.மு.கவுக்கு சென்றுவிட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் தி.மு.க வசம் வந்தாலும் ஆளும் தரப்பில் அ.தி.மு.க இருப்பதால் இருதரப்பினருக்கும் பெருத்த சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் அ.தி.மு.க வினரோடு கைகோத்தனர். இருதரப்பினரும் ரகசிய கூட்டணி வைத்ததைத் தொடர்ந்து அரசு டெண்டர்கள், கூட்டுறவு சங்க உறுப்பினர் தேர்தல் என அனைத்திலும் சிண்டிகேட் முறையே தொடர்ந்து வருகிறது. இதனால் தி.மு.க தொண்டர்கள் சுணக்கம் காட்டுகிறார்கள். இது உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு செய்யும் போது வெளிப்படையாகவே தெரிந்தது.

காஞ்சிபுரம் அ.தி.மு.க
காஞ்சிபுரம் அ.தி.மு.க

காஞ்சிபுரம் பெருநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. அ.தி.மு.க தரப்பில் விருப்ப மனு பெற்றபோது 10 -வது வார்டில் யாரும் விருப்பமனு அளிக்கவில்லை. அ.தி.மு.கவினரே டம்மியாக இரண்டு பேரிடம் விருப்பமனு வாங்கினார்கள். பிரபல ரவுடி ஒருவருக்கு பயந்து அந்தத் தொகுதியில் யாரும் மனு செய்யவில்லை என்கிறார்கள்.

இது குறித்து தி.மு.க பிரமுகர் ஒருவரிம் பேசினோம். ``மாவட்ட, ஒன்றிய அளவில் தி.மு.க-அ.தி.மு.க ரகசிய கூட்டணி இருக்கும் போது அடிமட்டத் தொண்டர்கள் உள்ளாட்சித் தேர்தலில் கட்சியினரை நம்பி நிற்கத் தயாராக இல்லை. இந்த நிலையில் அந்தப்பகுதியில் டம்மி வேட்பாளரை நிறுத்த ஏற்பாடுகள் நடைபெறுகின்றன“ என்கிறார். காஞ்சிபுரம் பகுதி அ.தி.மு.க பிரமுகரோ, “அ.தி.மு.க தரப்பில் காஞ்சிபுரம் பகுதியில் மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன், சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு என மூன்று அணிகளாகப் பிரிந்து கிடக்கின்றன. இதனால் தி.மு.க வோடு கூட்டணி வைத்து யாரை யார் கவிழ்ப்பார்கள் என்பது தெரியவில்லை” என்கிறார்கள்.