Published:Updated:

பதவி பறிக்கப்படும்! - தி.மு.க எச்சரிக்கை; விலைபோய்விடக் கூடாது - அ.தி.மு.க உஷார்

ஸ்டாலின், பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின், பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

சூடுபிடிக்கும் உள்ளாட்சித் தேர்தல்...

பதவி பறிக்கப்படும்! - தி.மு.க எச்சரிக்கை; விலைபோய்விடக் கூடாது - அ.தி.மு.க உஷார்

சூடுபிடிக்கும் உள்ளாட்சித் தேர்தல்...

Published:Updated:
ஸ்டாலின், பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின், பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, வரும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தியாக வேண்டும் என்பதால் தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகள் பரபரக்கின்றன. கடந்த சட்டமன்றத் தேர்தல் வெற்றியை அடுத்து, உள்ளாட்சித் தேர்தலிலும் முழு வெற்றியை அறுவடை செய்ய நினைக்கும் தி.மு.க தலைவர் ஸ்டாலின், “உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் கொஞ்சம் சறுக்கினாலும், உங்கள் கட்சிப் பதவி பறிக்கப்படும்” என்று தனது கட்சி நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அ.தி.மு.க-வில் சமீபத்தில் நடந்த ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், “தி.மு.க நம்மை விலைக்கு வாங்க முயலும். ஒருவரும் விலை போய்விடக் கூடாது” என்று நிர்வாகிகளை உஷார்ப்படுத்திருக்கிறார்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள்!

பதவி பறிக்கப்படும்! - தி.மு.க எச்சரிக்கை; விலைபோய்விடக் கூடாது - அ.தி.மு.க உஷார்

2016-ம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தல், தி.மு.க தொடர்ந்த வழக்கால் ரத்தானது. பிறகு 2019-ல் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தலை மட்டும் அறிவித்தது அப்போதைய அ.தி.மு.க அரசு. இதையும் எதிர்த்து நீதிமன்றம் சென்ற தி.மு.க., மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி தேர்தலை தள்ளிப்போடச் சொன்னது. ஆனாலும், ‘பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்கள் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்திக்கொள்ளலாம்’ என்று நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி 2019, டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட்டு, 2020, ஜனவரி 2-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தி.மு.க கூட்டணியும், அ.தி.மு.க கூட்டணியும் சரிசமமான இடங்களைக் கைப்பற்றின.

இந்தச் சூழலில்தான் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கான தேர்தல் அறிவிப்பு விரைவில் வரவிருக்கிறது. சமீபத்தில் இந்த ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின், “இந்தத் தேர்தல் நமக்கு கெளரவப் பிரச்னை. சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு வரும் முதல் தேர்தல் என்பதால், நம் மீதான மக்களின் நம்பிக்கை தொடர்கிறது என்பதை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எனவே, 100 சதவிகித வெற்றியைப் பெற்றாக வேண்டும். என்ன செய்வீர்கள் என்று தெரியாது... தேர்தல் முடிவுகளில் கொஞ்சம் சறுக்கினாலும், உங்கள் கட்சிப் பதவி பறிக்கப்படும்” என்று சூடானார். இதையடுத்து, அந்த ஒன்பது மாவட்டங்களிலும் ஆளுங்கட்சியினர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவிருக்கும் அ.தி.மு.க-வினரை வளைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்துத்தான், அ.தி.மு.க-வில் ஒன்பது மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய கழக ஒருங்கிணைப்பாளர்கள், “தி.மு.க-விடம் விலை போய்விடக் கூடாது” என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். அ.தி.மு.க கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட நிர்வாகிகள் சிலர் நம்மிடம், “இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முதல்நாள்தான் வேலுமணியின் இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. அதைக் குறிப்பிட்டுப் பேசிய எடப்பாடி, ‘உள்ளாட்சித் தேர்தலில் நம்மை முடக்கிவிட வேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற ரெய்டுகள் நடத்தப்படுகின்றன. நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் உளவியல் ரீதியிலான டார்ச்சரைக் கொடுக்கிறார்கள். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள்... ரெய்டு விவகாரங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், தேர்தலில் வெற்றிபெறுவதைப் பற்றி மட்டுமே நீங்கள் சிந்தியுங்கள். 2019 ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நம் ஆட்கள் சரியாக வேலை பார்க்காததால்தான், நாம் ஆளுங்கட்சியாக இருந்தும் சரிபாதி இடங்களை தி.மு.க கைப்பற்றியது. இந்தமுறை நாம் எதிர்க்கட்சியாக இருக்கிறோம். கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றி சாத்தியம்’ என்றார்.

பதவி பறிக்கப்படும்! - தி.மு.க எச்சரிக்கை; விலைபோய்விடக் கூடாது - அ.தி.மு.க உஷார்

தொடர்ந்து பேசிய பன்னீர், ‘தேர்தல் நடக்கவிருக்கும் ஒன்பது மாவட்டங்களில், ஏழு மாவட்டங்கள் வட தமிழகத்தில் இருக்கின்றன. கூட்டணிக் கட்சி என்கிற முறையில், பா.ம.க சில முக்கியமான ஊராட்சிகளை எதிர்பார்ப்பார்கள். அவர்களிடம் பக்குவமாகப் பேசி, சச்சரவு இல்லாமல் இடங்களைப் பங்கிட வேண்டும். ஒருவேளை தே.மு.தி.க மீண்டும் நம்முடன் கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக்கொள்ளலாம். சேர்மன், தலைவர் பதவிகளைக் கைப்பற்றுவதற்காக, தேர்தலில் வெற்றிபெறும் கவுன்சிலர்களை விலைக்கு வாங்கவும் தி.மு.க தயாராகிவருகிறது. ஒருபோதும் நம் ஆட்கள் விலை போய்விடக் கூடாது. அதனால், விலை போகாத ஆட்களை மட்டுமே வேட்பாளர்களாகக் களமிறக்குங்கள்’ என்று அறிவுறுத்தினார். இதையடுத்து ஒன்பது மாவட்டங்களிலும் மக்கள் செல்வாக்குள்ள வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளை அந்தந்த மாவட்டப் பொறுப்பாளர்கள் தொடங்கிவிட்டார்கள்” என்றார்கள்.

மீண்டும் மீண்டும் தள்ளிப்போடாமல் இம்முறையாவது உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்த வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism