Published:Updated:

`பின்வாங்கிய அ.தி.மு.க; பட்டாசு வெடித்த தி.மு.க!' - குத்தாலம் உள்ளாட்சி கலாட்டா

வெற்றி ஊர்வலம் ஊராட்சி மன்றத் தலைவராகப் போட்டியின்றித் தேர்வு

ஜானகி சின்னதுரை
ஜானகி சின்னதுரை

நாகை மாவட்ட குத்தாலம் மருத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு எதிர்த்து வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்த அ.தி.மு.க வேட்பாளர் உட்பட அனைவரும் வாபஸ் பெற்றுக்கொண்டதால் தி.மு.க. வேட்பாளர் ஜானகி சின்னதுரை போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இந்த வெற்றியை தி.மு.கவினர் இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.

வெற்றி ஊர்வலம்
வெற்றி ஊர்வலம்

நாகை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் மருத்தூர் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ஜானகி சின்னதுரை, பிாியா, ஜெயந்தி, விஜயலெட்சுமி ஆகிய நான்குபேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். இதில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஜானகி சின்னதுரை தவிர மற்ற மூவரும் தங்களது வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றனர். இதில் அ.தி.மு.க வேட்பாளரும் அடக்கம். இதைத் தொடர்ந்து ஜானகி சின்னதுரை போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். ஜானகி சின்னதுரைக்கு முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் மனோகரன், முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் குஞ்சு உள்ளிட்ட தி.மு.க.வினர் வாழ்த்து தெரிவித்தனர்.

`ஸ்டாலின் போட்ட திட்டமெல்லாம் வீணாகிவிட்டது!'- வேட்பாளர்களுக்கு எடப்பாடியின் உள்ளாட்சி அலர்ட்

ஜானகி சின்னதுரை இதற்கு முன் இரண்டு முறை மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். மருத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக இவரின் கணவர் சின்னதுரை ஒரு முறையும், இவரின் மகன் பிரசன்னா இரண்டு முறையும் பணியாற்றியுள்ளனர்.

ஜானகி சின்னதுரை
ஜானகி சின்னதுரை

51 ஊராட்சிகள் உள்ள குத்தாலம் ஒன்றியத்தில் மருத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மட்டும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வாகை சூடப் போகும் ஜானகி சின்னதுரை குத்தாலம் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் வெற்றியைக் கொண்டாடினர்.