Published:Updated:

திருவள்ளூர்:2 அமைச்சர்கள் தோல்வி; 6 தொகுதிகளைத் தவறவிட்ட அதிமுக - மாவட்டத்தை வாஷ்அவுட் செய்த திமுக!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மாஃபா பாண்டியராஜன் - பெஞ்சமின்
மாஃபா பாண்டியராஜன் - பெஞ்சமின்

10 தொகுதிகளில் அதிமுக ஒரே ஒரு தொகுதியைக்கூட தக்கவைக்கவில்லை. அதில் மாவட்டத்திலுள்ள இரண்டு சிட்டிங்  அமைச்சர்களின் தொகுதிகளும் அடக்கம். பாஜக எதிர்ப்பு அலை மற்றும் திமுக ஆதரவு அலை மாவட்டத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 10 சட்டமன்றத் தொகுதிகளையும் தி.மு.க முழுமையாகக் கைப்பற்றியிருக்கிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் 10-ல் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றிருந்த தி.மு.க இந்தமுறை 10 தொகுதிகளையும் வாரிச்சுருட்டி அ.தி.மு.க-வினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மறுபக்கம் கடந்த 2016 தேர்தலில் மாவட்டத்தில் ஆறு தொகுதிகளைத் தன்வசப்படுத்திய அ.தி.மு.க தரப்பால் இந்தத் தேர்தலில் ஒரு தொகுதியைக்கூட தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒன்பது தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்களை நேரடியாகக் களத்தில் இறக்கிய தி.மு.க., பொன்னேரி தனித்தொகுதியை மட்டும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்குக் கொடுத்திருந்தது. ஒன்பது தொகுதிகளில் மூன்று சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு தி.மு.க தலைமை மீண்டும் வாய்ப்பு வழங்கியிருந்தது. கடந்த மாதம் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க., மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் முதல் சுற்று முதலே ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. நள்ளிரவு வரை நீடித்த வாக்கு எண்ணிக்கையில் 10 தொகுதிகளையும் மிச்சம் மீதி வைக்காமல் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றியைப் பதிவுசெய்திருக்கிறது.

மாஃபா பாண்டியராஜன் - சா.மு.நாசர்
மாஃபா பாண்டியராஜன் - சா.மு.நாசர்

10 தொகுதிகளில் அ.தி.மு.க ஒரே ஒரு தொகுதியைக்கூட தக்கவைக்கவில்லை. அதில் மாவட்டத்திலுள்ள இரண்டு சிட்டிங் அமைச்சர்களும் அடக்கம். பா.ஜ.க எதிர்ப்பு அலை மற்றும் தி.மு.க ஆதரவு அலை மாவட்டத்தில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. குறிப்பாக அ.தி.மு.க-வின் இரண்டு சிட்டிங் அமைச்சர்களும் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் தேர்தலில் தோல்வியைத் தழுவியிருக்கின்றனர். ஆவடி தொகுதியில் அ.தி.மு.க சார்பாகப் போட்டியிட்ட சிட்டிங் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 54,695 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்திருக்கிறார்.

அவரை எதிர்த்து தி.மு.க சார்பாகப் போட்டியிட்ட சா.மு.நாசர் 1,49,065 வாக்குகள் பெற்று வெற்றியடைந்திருக்கிறார். கடந்த சட்டசபைத் தேர்தலில் ஆவடி தொகுதியில் போட்டியிட்டு 1,08,064 வாக்குகள் பெற்று பாண்டியராஜன் வெற்றிபெற்றிருந்தாலும், வெற்றி வித்தியாசம் மிகவும் குறைவாகவே இருந்தது. கடந்த முறை தி.மு.க சார்பாகக் களம் கண்ட நாசர் 1,06,669 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம்பிடித்தார். அவர் வெறும் 1,395 வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வியைத் தழுவினார். எம்.எல்.ஏ-வாக பதவியேற்ற பாண்டியராஜன் தொகுதியில் சொல்லிக்கொள்ளும் அளவுக்குத் வளர்ச்சிப் பணிகள் எதையும் செய்யவில்லை. அதன் காரணமாக அமைச்சர் மீது தொகுதி மக்களுக்குக் கடும் அதிருப்தி ஏற்பட்டது. அதேபோல் கடந்த தேர்தலில் தி.மு.க-வின் நாசருக்குக் கிடைக்காமல் சிதறிய சிறுபான்மையினர் வாக்குகள் இந்தத் தேர்தலில் அவருக்கு முழுமையாகக் கிடைத்திருக்கிறது. ஆவடி தொகுதியில் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் விழாமல் போனதே பாண்டியராஜனின் தோல்விக்கு மிக முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

Long Read - திமுக: அரை நூற்றாண்டுகள் கடந்தும் அழிக்க முடியாத அரசியல் அஞ்சான்! #TNelections2021

அதேபோல், அ.தி.மு.க-வின் மற்றுமொரு சிட்டிங் அமைச்சரான பெஞ்சமினும் தொகுதியை தி.மு.க வேட்பாளர் காரம்பாக்கம் கணபதியிடம் பறிகொடுத்திருக்கிறார். வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றிலிருந்தே தி.மு.க வேட்பாளர் காரம்பாக்கம் கணபதி ஆதிக்கம் செலுத்திவந்தார். அமைச்சரின் தரப்பு, அடுத்த சுற்றில் மாறும், இன்னும் சில மணி நேரங்களில் சூழல் மாறும் என்று காத்திருந்து தலையில் துண்டுடன் திரும்பியதுதான் மிச்சம். இறுதிச்சுற்றின் முடிவில் 1,21,298 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் கணபதி வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வும், அமைச்சருமான பெஞ்சமின் 89,577 வாக்குகள் பெற்று 31,721 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

தொகுதியில் வளர்ச்சிப் பணிகளை பெஞ்சமின் சொல்லிக்கொள்ளும் அளவுக்குச் செய்திருந்தாலும், ஒட்டுமொத்த தி.மு.க அலையின் தாக்கம் சென்னை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள மதுரவாயலிலும் பெரிய அளவிலான அரசியல் மாற்றத்துக்கு வித்திட்டிருக்கிறது.

பெஞ்சமின்
பெஞ்சமின்

திருத்தணி தொகுதியில் சொந்தக் கட்சியினரே பலமாக உள்ளடி வேலை பார்த்ததால், அ.தி.மு.க வேட்பாளர் கோ.அரி தோல்வியைத் தழுவியிருக்கிறார். அதேபோல், கடந்த முறை கும்மிடிப்பூண்டி தொகுதியில் வெற்றிபெற்ற அ.தி.மு.க இந்தமுறை அதன் கூட்டணிக் கட்சியான பா.ம.க-வுக்குக் கொடுத்ததால், தொகுதியில் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. குறிப்பாக, மாவட்டத்தில் மீண்டும் தி.மு.க வெற்றிபெறவே முடியாது என்று அனைவராலும் ஆணித்தரமாக அடித்துச் சொல்லப்பட்ட திருவள்ளூர் தொகுதியையும் கைப்பற்றி 10-க்கு 10-க்கு என்ற கணக்கில் வாஷ்அவுட் செய்து அ.தி.மு.க-வின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது தி.மு.க.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு