
1957 சட்டமன்றத் தேர்தலில், சேவல் சின்னத்தில் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்ட அண்ணாவும், உதயசூரியன் சின்னத்தில் குளித்தலை தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதியும் வெற்றிபெற்றிருந்தனர்.
...தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. ஓரிரு புதிய கட்சிகள் இந்தத் தேர்தலில் களமிறங்கவிருந்தாலும், தமிழகத்தின் பிரதான கட்சிகளாக விளங்குவது தி.மு.க-வும் அ.தி.மு.க-வும்தான். இந்த இரண்டு திராவிடக் கட்சிகள் சந்தித்த சட்டமன்றத் தேர்தல்களின் ஹைலைட்ஸ்தான் இந்தக் கட்டுரை!
குறிப்பு: இந்தக் கட்டுரையில் ஆண்டுவாரியாக கொடுக்கப்பட்டிருக்கும் புள்ளிவிவரங்கள் அனைத்தும் அ.தி.மு.க., தி.மு.க-வின் புள்ளிவிவரங்கள் மட்டுமே. அதன் கூட்டணிக் கட்சிகள் குறித்த புள்ளிவிவரங்கள் சேர்க்கப்படவில்லை.
1952
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மதராஸ் மாகாணத்தில் முதன்முறையாகத் தேர்தல் நடைபெற்றது. 1949-ம் ஆண்டிலேயே தி.மு.க உருவாக்கப்பட்டிருந்தாலும், 1952 தேர்தலில் போட்டியிடவில்லை. இந்தத் தேர்தலில், 367 தொகுதிகளில் போட்டியிட்டு, 152 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது.

1957
தி.மு.க போட்டியிட்ட முதல் தேர்தல் இது. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் நடந்த இந்தத் தேர்தலில் தி.மு.க கேட்ட `உதயசூரியன்' சின்னம் ஒதுக்கப்படவில்லை. எனவே, சேவல், உதயசூரியன் உள்ளிட்ட சின்னங்களில் காங்கிரஸை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்டது தி.மு.க. மொத்தம் 124 தொகுதிகளில் போட்டியிட்டு 15 தொகுதிகளைக் கைப்பற்றி முதன்முறையாகச் சட்டமன்றத்தில் கால்பதித்தது தி.மு.க. 204 தொகுதிகளில் போட்டியிட்டு, 151 இடங்களில் வெற்றிபெற்று, காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தது. இந்தத் தேர்தலில், சுமார் 14% வாக்குகளை பெற்றிருந்தது தி.மு.க
1957 சட்டமன்றத் தேர்தலில், சேவல் சின்னத்தில் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்ட அண்ணாவும், உதயசூரியன் சின்னத்தில் குளித்தலை தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதியும் வெற்றிபெற்றிருந்தனர்.
1962
தி.மு.க தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற்று உதயசூரியன் சின்னத்தை நிரந்தரமாகப் பெற்ற பின்னர் சந்தித்த முதல் தேர்தல் இது. இந்தத் தேர்தலில் 143 இடங்களில் போட்டியிட்டு 50 இடங்களைக் கைப்பற்றி தமிழகத்தின் எதிர்க்கட்சியாகச் சட்டமன்றத்தில் அடியெடுத்துவைத்தது தி.மு.க. மீண்டும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியமைத்தது. இம்முறை 206 தொகுதிகளில் போட்டியிட்டு 139 இடங்களைக் கைப்பற்றியிருந்தது அக்கட்சி.
தி.மு.க வாக்கு சதவிகிதம் - 27.10%

1967
1967 சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது தி.மு.க. அண்ணாதுரை முதலமைச்சர் ஆனார். கருணாநிதி பொதுப் பணித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். செயின்ட் தாமஸ் மவுன்ட் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார் எம்.ஜி.ஆர். இந்தத் தேர்தலில், 174 தொகுதிகளில் 137 இடங்களைக் கைப்பற்றியது தி.மு.க. புதிய வாக்காளர்கள் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்க ஆரம்பித்தது இந்தத் தேர்தலில்தான். மொத்த வாக்காளர்களில் 11.37% பேர் புதிய வாக்காளர்கள்.
தி.மு.க வாக்கு சதவிகிதம் - 40.69%
1971
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு தி.மு.க சந்தித்த முதல் தேர்தல் இது. இந்தத் தேர்தலில், 203 தொகுதிகளில் போட்டியிட்டு 184 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றிபெற்றது தி.மு.க. முதல்வரானார் கருணாநிதி.
தி.மு.க வாக்கு சதவிகிதம் - 48.58%
இந்தத் தேர்தலுக்குப் பின்னர், 1972-ம் ஆண்டு கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் மோதல் ஏற்படவே, கட்சியிலிருந்து பிரிந்து சென்றார் எம்.ஜி.ஆர். அதே ஆண்டில் `அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' உருவானது.

1977
அ.தி.மு.க சந்தித்த முதல் தேர்தல் இது. போட்டியிட்ட 200 தொகுதிகளில் 130 தொகுதிகளைக் கைப்பற்றி அ.தி.மு.க ஆட்சியமைத்தது. எம்.ஜி.ஆர் முதல்வரானார். அதேநேரத்தில், 230 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க 48 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
அ.தி.மு.க வாக்கு சதவிகிதம் - 30.36%
தி.மு.க வாக்கு சதவிகிதம் - 24.89%
1980
இந்தத் தேர்தலில் 177 தொகுதிகளில் போட்டியிட்டு 129 தொகுதிகளில் வெற்றிபெற்றது அண்ணா தி.மு.க. இரண்டாவது முறையாக முதல்வர் அரியணை ஏறினார் எம்.ஜி.ஆர். தி.மு.க 112 தொகுதிகளில் போட்டியிட்டு 37-ல் மட்டுமே வெற்றி கண்டது.
அ.தி.மு.க வாக்கு சதவிகிதம் - 38.75%
தி.மு.க வாக்கு சதவிகிதம் - 22.10%

1984
எம்.ஜி.ஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது நடைபெற்ற தேர்தல் இது. 155 இடங்களில் போட்டியிட்டு 132 இடங்களைக் கைப்பற்றியது அ.தி.மு.க. தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலமைச்சரானார் எம்.ஜி.ஆர். 167 இடங்களில் போட்டியிட்டு 24 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று மீண்டும் படுதோல்வியடைந்தது தி.மு.க.
அ.தி.மு.க வாக்கு சதவிகிதம் - 37.03%
தி.மு.க வாக்கு சதவிகிதம் - 29.34%
1989
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் நடைபெற்ற இந்தத் தேர்தலில், அ.தி.மு.க இரண்டு அணிகளாகப் பிரிந்து தேர்தலை எதிர்கொண்டது. ஜெயலலிதா அணி சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 27 இடங்களைக் கைப்பற்றியது. ஜானகி அணி இரட்டைப் புறா சின்னத்தில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி கண்டது. 202 தொகுதிகளில் போட்டியிட்டு 150 இடங்களைப் பெற்றிருந்தது தி.மு.க. அ.தி.மு.க வாக்குகள் பிரிந்ததால் தி.மு.க-வின் வெற்றி வாய்ப்பு சற்று எளிதானது. 12 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஆட்சிக்கு வந்தது தி.மு.க.
தி.மு.க வாக்கு சதவிகிதம் - 33.18%
ஜெ. அணி வாக்கு சதவிகிதம் - 21.15%
ஜா. அணி வாக்கு சதவிகிதம் - 9.19%

1991
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாகக் கூறி, இரண்டே ஆண்டுகளில், தி.மு.க ஆட்சி கவிழ்க்கப்பட்டது. ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட ஆண்டு நடைபெற்ற தேர்தல் இது. 168 இடங்களில் போட்டியிட்டு 164 இடங்களில் வெற்றிபெற்றது அ.தி.மு.க. ஜெயலலிதா முதன்முறையாக முதல்வரானார். தி.மு.க 176 தொகுதிகளில் களமிறங்கி வெறும் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது.
அ.தி.மு.க வாக்கு சதவிகிதம் - 44.39%
தி.மு.க வாக்கு சதவிகிதம் - 22.46%
1996
182 தொகுதிகளில் போட்டியிட்டு, 173 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது தி.மு.க. கருணாநிதி முதல்வரானார். அ.தி.மு.க 168 இடங்களில் போட்டியிட்டு நான்கு தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது.
`ரஜினி கொடுத்த வாய்ஸ் காரணமாகத்தான் தி.மு.க-தா.ம.கா கூட்டணி அமோக வெற்றிபெற்றது' என ரஜினி ரசிகர்கள் மார்தட்டிக்கொள்ளும் தேர்தல் இதுதான்.
தி.மு.க வாக்கு சதவிகிதம் - 42.07%
அ.தி.மு.க வாக்கு சதவிகிதம் - 21.47%

2001
காங்கிரஸ், த.மா.கா., பா.ம.க., கம்யூனிஸ்ட் கட்சிகளை ஒன்றிணைத்து மெகா கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தது அ.தி.மு.க. இந்தக் கூட்டணியில் 141 தொகுதிகளில் போட்டியிட்டு 132 இடங்களைக் கைப்பற்றியது அ.தி.மு.க. மீண்டும் முதலமைச்சரானார் ஜெயலலிதா. பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்த தி.மு.க 183 தொகுதிகளில் போட்டியிட்டு 31 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.
அ.தி.மு.க வாக்கு சதவிகிதம் - 31.44%
தி.மு.க வாக்கு சதவிகிதம் - 30.92%
2006
இந்த முறை காங்கிரஸ், பா.ம.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்தன. இந்தக் கூட்டணியில் தி.மு.க மட்டும் 132 தொகுதிகளில் போட்டியிட்டது. அவற்றில் 96 இடங்களில் வெற்றி கண்டது. முதல்வர் அரியணையில் மீண்டும் அமர்ந்தார் கருணாநிதி. அ.தி.மு.க 188 இடங்களில் போட்டியிட்டு 61 இடங்களில் வென்றது.
அ.தி.மு.க வாக்கு சதவிகிதம் - 32.64%
தி.மு.க வாக்கு சதவிகிதம் - 26.46%

2011
இந்தத் தேர்தலில் 168 தொகுதிகளில் போட்டியிட்டு 150 இடங்களைக் கைப்பற்றியது அ.தி.மு.க. மூன்றாவது முறையாக முதல்வரானார் ஜெயலலிதா. 124 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க, வெறும் 23 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது. விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க எதிர்க்கட்சியானது.
அ.தி.மு.க வாக்கு சதவிகிதம் - 38.40%
தி.மு.க வாக்கு சதவிகிதம் - 22.39%
2016
இந்த முறை 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது அ.தி.மு.க. 135 இடங்களைக் கைப்பற்றித் தொடர்ச்சியாக இரண்டாவது முறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார் ஜெயலலிதா. தி.மு.க 180 இடங்களில் போட்டியிட்டு 88 இடங்களைப் பெற்று, கடந்த தேர்தலில் தவறவிட்ட எதிர்க்கட்சி அந்தஸ்தை மீட்டெடுத்தது.
அ.தி.மு.க வாக்கு சதவிகிதம் - 40.77%
தி.மு.க வாக்கு சதவிகிதம் - 31.64%

2021-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் தி.மு.க., அ.தி.மு.க என இரண்டு கட்சிகளுக்கும் சவாலாகவே இருக்கும். கருணாநிதி, ஜெயலலிதா என இருபெரும் தலைவர்கள் இல்லாமல் இந்தத் தேர்தலை இரு கட்சிகளும் சந்திக்கவிருக்கின்றன. அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், இந்தத் தேர்தலில் யார் அதிக இடங்களை ஜெயிப்பார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.