ஈரோடு கிழக்குத் தொகுதியின் இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து ஈரோடு இடையங்காட்டுவலசு, தெப்பக்குளம், மகாஜன உயர்நிலைப் பள்ளி, சூரம்பட்டி நால் ரோடு ஆகிய பகுதிகளில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர், ``தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த 22 மாதங்களில் இதுவரை மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க தி.மு.க அரசு முன்வரவில்லை. மாறாக தினந்தோறும் ஏதாவது பிரச்னைகளில் தான் அரசு சிக்கிக்கொள்கிறதே தவிர மக்களுக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை.

இப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு 33 வார்டுகளுக்கு 30 அமைச்சர்களை நியமித்து காலையிலிருந்து இரவு வரை மக்களை எப்படி ஏமாற்றுவது, அவர்களின் வாக்குகளை எப்படி பெறுவது என்பது குறித்த சிந்தனையில்தான் இருக்கின்றனர். நாங்கள் இங்கு வந்ததற்கு முக்கிய காரணம், தென்னரசு இங்கு வெற்றி பெறுவதன் மூலம் ஆட்சி மாற்றம் எதுவும் வந்து விடப்போவதில்லை. ஆனால், தென்னரசுவை வெற்றிபெறச் செய்தால் தி.மு.க தேர்தல் காலத்தில் அளித்த முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வைக்க முடியும்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உரிமைத்தொகை வழங்குவதாகக் கூறியும், எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ரூ.100 வீதம் மானியம் கொடுப்பதாகக் கூறிவிட்டு அதை நிறைவேற்றாமலும் இருக்கின்றனர். அதன்படி இதன் நிலுவைத்தொகையான ரூ.24,200 -ஐ உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்த வைக்க முடியும்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் மட்டும் 1.21 லட்சம் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவர்களுக்கு மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள எரிவாயு இணைப்புகளுக்கும் மானியத் தொகையை வழங்குவதாக தி.மு.க அறிவித்துவிடும். கடந்த தேர்தலில் 517 வாக்குறுதிகளை கொடுத்து இதில் 49 வாக்குறுதிகளை மட்டுமே தி.மு.க அரசு நிறைவேற்றியிருக்கிறது.

இங்கு தேர்தல் பணியாற்றிவரும் சாராய அமைச்சர் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள். உங்கள் பணம் வேறொரு ரூபத்தில் வருகிறது. ஆனால், வாக்குகளை மட்டும் அ.தி.மு.க-வுக்கு அளியுங்கள். இந்தத் தொகுதியில் நெசவாளர்கள் அதிகம் இருக்கின்றனர். 1,000 யூனிட் மின்சாரத்தை இலவசமாக அளிப்பதாக வாக்குறுதியில் கூறிவிட்டு இப்போது மின்கட்டணத்தை 80% உயர்த்திவிட்டனர்.
இது போன்ற நடவடிக்கைகளால் நெசவுத் தொழில் செய்பவர்களால் எப்படித் தொழிலை செய்ய முடியும். இந்த தேர்தல் வந்த பிறகு 1,000 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்குகிறோம் என்று இப்போது கூறுகிறார்கள். இதுவரையிலும் முதல்வர் கோமாவில் இருந்தாரா, யாருக்கும் எதுவும் செய்யாமல், வெறும் பொய்யை மட்டும் பேசி, மக்களின் வாக்குகளை விலை கொடுத்து வாங்கிவிடலாம் என்று தி.மு.க கருதுகிறது. எப்போதும் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மிரட்டி மாமூல் வசூலிப்பது, பிரியாணி கடையில் ஓசியில் சாப்பிடுவது போன்றவற்றில் ஈடுபடுவதுதான் அதிகம்.
5 ஆண்டுகளுக்கு முன் விருகம்பாக்கத்தில் ஒரு பிரியாணி கடையில் எட்டு தி.மு.க-வினர் சாப்பிட்டதற்குப் பணம் கேட்டவர்களை அந்தக் கட்சியினர் தாக்கினர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மன்னிப்பு கேட்டார். ஆனால், இப்போது முதல்வராக இருக்கும்போது, கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் ஒருவரை, தி.மு.க கவுன்சிலர் ஒருவர் அடித்துக் கொலைசெய்துவிட்டார். இதைப்பற்றி இதுவரை ஸ்டாலின் வாயைத் திறக்கவில்லை. திருமங்கலம் தேர்தலில், மு.க.அழகிரி ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசி தேர்தலில் வெற்றிபெற்றார். அரவக்குறிச்சியில் பணத்தை வாரியிறைத்ததால் தேர்தலை நிறுத்திவைத்து அவப்பெயர் ஏற்பட்டது. அதேபோல ஈரோடு கிழக்குத் தொகுதியும் ஓர் அவப்பெயரை சம்பாதித்துக்கொண்டிருக்கிறது. ஈரோடு உள்ளிட்ட கொங்கு பகுதியில் உள்ளவர்கள் நல்ல உழைப்பாளிகள். இந்தத் தொகுதியில் வாக்காளர்களைப் பட்டியில் அடைப்பது, பிரசாரத்துக்கு கூட்டங்கூட்டமாக அழைத்துச் சென்று பணம் தருவது என நம்முடைய கொங்கு மண்டலத்துக்கு அவப்பெயரை அந்த 30 அமைச்சர்களும் ஏற்படுத்திவருகின்றனர். இந்த அவப்பெயர் ஏற்பட நாம் விடக் கூடாது. அதற்காக தென்னரசுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

தேர்தலுக்காகவே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோடு வந்திருக்கிறார். இந்தத் தேர்தலில் உங்கள் வாக்கின் மை காய்வதற்கு முன் இளங்கோவன் சென்னைக்குச் சென்றுவிடுவார். அவர் ஏழைகளுக்குச் சேவை செய்பவர் இல்லை. இளங்கோவன், இளையராஜாவுக்கு ராஜ்யசபை எம்.பி வழங்கியபோது அவரின் சாதியைச் சொல்லி தரக்குறைவாகத் திட்டியவர். ஜெயலலிதாவைத் தரக்குறைவாக விமர்சித்தவர். ஒருகாலத்தில் வைகோவையும் மோசமாக விமர்சனம் செய்தவர் இளங்கோவன். எனவே, தரமான வேட்பாளரான தென்னரசுவை ஆதரித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என்றார்.