Published:Updated:

6.26 கோடி பேர்; 18-19 வயதுடைய 8,97,694 வாக்காளர்கள்! - தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழக இறுதி வாக்காளர் பட்டியல்
தமிழக இறுதி வாக்காளர் பட்டியல்

தமிழகத்தில் இந்த வருடம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, இறுதி வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

தமிழகத்தில் புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நிறைவடைந்திருக்கிறது. கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் மற்றும் ஒரு சட்டமன்றத் தொகுதியிலிருந்து வேறு சட்டமன்றத் தொகுதிக்கு இடம் பெயர்தல் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து, இந்த விண்ணப்பங்களின் மீதான பரிசீலனை கடந்த டிசம்பர் 15-ம் தேதி தொடங்கியது.

இடமாற்றம், இரட்டைப்பதிவு மற்றும் இறப்பு போன்ற காரணங்களால் 5,09,307 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன - தேர்தல் ஆணையம்.

வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்க்க 21,82,120 விண்ணப்பங்கள் வந்திருந்த நிலையில், அவற்றில் 21,39,395 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. திருத்தம் மேற்கொள்ள 3,32,743 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றில் 3,09,292 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. முகவரி மாற்றம் செய்ய 1,84,791 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 1,75,365 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.

பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை முடிந்த நிலையில், புதிய வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலை, தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார். தமிழகத்தில் மொத்தம் 6.26 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 3,08,38,473 ஆண் வாக்காளர்களும், 3,18,28,727 பெண் வாக்காளர்களும் இருக்கிறார்கள். 7,246 மூன்றாம் பாலின வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியல்
இறுதி வாக்காளர் பட்டியல்

புதிய வாக்காளர்கள் அதிகமாகச் சேர்ந்த மாவட்டங்களில் சென்னை முதலிடத்திலும், சேலம் இரண்டாவது இடத்திலும், திருவள்ளூர் மூன்றாவது இடத்திலும் உள்ளன. குறைந்த வாக்காளர்கள் சேர்ந்த மாவட்டமாக நீலகிரி உள்ளது. அதோடு, தமிழகத்தில் 4,62,597 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் இருப்பதாகவும், வெளிநாடுவாழ் வாக்காளர்களாக 47 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

தி.மு.க Vs அ.தி.மு.க: 1952 முதல் 2016 வரை தேர்தல் ஹைலைட்ஸ்!

18-19 வயது புதிய வாக்காளர்களாக 8,97,694 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4,80,953 ஆண் வாக்காளர்கள். 4,16,423 பெண் வாக்காளர்கள் மற்றும் 318 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.

வாக்காளர்கள்
வாக்காளர்கள்

தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளில் அதிக வாக்காளர்கள்கொண்ட தொகுதியாக, 6,94,845 வாக்காளர்களுடன் சோழிங்கநல்லூர் தொகுதி முதலிடத்தில் இருக்கிறது. அதேபோல, குறைந்த வாக்காளர்கள்கொண்ட தொகுதியாக 1,76,272 வாக்காளர்களுடன் சென்னையிலுள்ள துறைமுகம் தொகுதி உள்ளது. அதேபோல், அதிக வாக்காளர்கள்கொண்ட மாவட்டமாகச் சென்னையும், குறைந்த வாக்காளர்களைக் கொண்ட மாவட்டமாக அரியலூரும் இருக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு