Published:Updated:

ரயில்வே ஓடும் தொழிலாளர்களுக்குத் தபால் வாக்குரிமை! - தேர்தல் ஆணையத்தின் பதிலால் மகிழ்ச்சி

ரயில்வே
ரயில்வே

`இது அனைத்து ரயில்வே பணியாளர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே நிர்வாகத்துக்கும் இது மகிழ்ச்சியான தகவல். இல்லையென்றால் ஓடும் தொழிலாளர்கள் (Railway Running Staff) பலர் தேர்தல் நாளன்று விடுப்பு கேட்பார்கள்’ - ரயில்வே ஓடும் தொழிலாளர்கள்.

தேர்தலில் 100 சதவிகித வாக்குப் பதிவு நடைபெற வேண்டுமென்று இந்தியத் தேர்தல் ஆணையம் விளம்பரங்களையும், பல்வேறு ஏற்பாடுகளையும் செய்துவருகிறது. ஆனால், இது முழுமையாக நடைமுறைக்கு வருவதில் பல சிக்கல்கள் இருந்துவருகின்றன.

இந்தியத் தேர்தல் ஆணையம்
இந்தியத் தேர்தல் ஆணையம்

இந்தநிலையில், `தேர்தல் ஆணையத்தின் நோக்கம் நிறைவேற, தேர்தல் நாளன்று ரயில்வே ஓடும் தொழிலாளர்களுக்குத் தபால் மூலம் வாக்களிக்கும் உரிமை வேண்டும்’ என்று ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி கோரிக்கைவைத்திருந்தார். இந்தக் கோரிக்கைக்குச் சாதகமான பதிலை தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதால், ரயில்வே ஓடும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள்.

இது பற்றி எஸ்.ஆர்.எம்.யூ மதுரை கோட்ட உதவிச் செயலாளர் வி.ராம்குமாரிடம் பேசினோம். ``தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தேர்தலின்போதும் 100 சதவிகித வாக்குப்பதிவு நடைபெற வேண்டுமென்று பிரசாரம் செய்கிறது. ஆனால், சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களின்போது ஓடும் ரயிலில் பணியாற்றும் லோகோ பைலட்டுகள், கார்டுகள், டிக்கெட் பரிசோதகர்கள், இன்னும் பல தொழிலாளர்கள் வாக்களிக்க முடியாத நிலை இருந்துவருகிறது.

வி.ராம்குமார்
வி.ராம்குமார்

ரயில் சேவை என்பது அத்தியாவசியப் பணி என்பதால், வாக்களிக்க ஆர்வப்படும் ஓடும் ரயில்வே தொழிலாளர்களுக்கு விடுமுறை எடுக்க முடியாத சூழல். அதுமட்டுமல்லாமல் பெரும்பாலான ஒடும் தொழிலாளர்கள் விடுப்பு எடுத்தால், ரயில்வே நிர்வாகத்துக்கும் பொதுமக்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும்.

இது போன்று மாநில அரசில் தேர்தலன்று பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், மின்வாரிய ஊழியர்கள் போன்றவர்கள் வாக்களிக்க இயலாது. இந்தநிலை நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருந்துவருகிறது. இதற்கு ஒரு தீர்வு ஏற்பட வேண்டுமென்று ரயில்வே ஓடும் தொழிலாளர்களின் கோரிக்கையை பிரதமருக்கு மனுவாக அனுப்பினேன். அதன் நகலை இந்தியத் தேரதல் ஆணையத்துக்கும் அனுப்பினேன்.

ரயில்
ரயில்

தேர்தல் நாளன்று தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், காவல்துறையினருக்கு மட்டும் தபால் வாக்குரிமை பொதுவாக வழங்கப்பட்டுவருகிறது. என்னுடைய கோரிக்கை மனுவுக்கு கடந்த 28-ம் தேதி தேர்தல் ஆணையத்தின் செயலாளர் அபிஷேக் திவாரி பதில் அனுப்பினார்.

அதில், 1951-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 60(C)- யில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த அடிப்படையில் அத்தியாவசியப் பணியில் இருப்பவர்களுக்கு தபால் வாக்குரிமை அளிக்கப்படும். ரயில்வே தொழிலாளர்கள் அத்தியாவசியப் பணியின் கீழ் வருவதால் அவர்களுக்குத் தபால் வாக்குரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

வாக்குப்பதிவு இயந்திரம்
வாக்குப்பதிவு இயந்திரம்

இது அனைத்து ரயில்வே பணியாளர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரயில்வே நிர்வாகத்துக்கும் இது மகிழ்ச்சியான தகவல். இல்லையென்றால் ஓடும் தொழிலாளர்கள் பலர் தேர்தல் நாளன்று விடுப்பு கேட்பார்கள். அதேநேரம், தமிழக சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், இந்தத் தபால் வாக்குரிமையைப் பெற ரயில்வே பணியாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை மாநிலத் தேர்தல் அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும்.

தேர்தல் ஆணையம் எங்களுக்குச் சாதகமான தகவலைத் தரவில்லையென்றால், பொதுநல வழக்கு தாக்கல் செய்ய ஓடும் தொழிலாளர் பிரிவு நிர்வாகிகள் ரவிசங்கர், அழகுராஜா, தாமரை செல்வன் ஆகியோர் தயாராக இருந்தார்கள். அவர்களும் இந்த முயற்சிக்குக் காரணம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு