பாஜக தலைவரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாய், `தேர்தல் சமயங்களில் இலவச வாக்குறுதிகளை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்திருந்திருந்தார். அதைத்தொடர்ந்து, நான்கு வாரங்களில் இந்த மனு மீது பதிலளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், ``இலவசங்களை வழங்குவது அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவு அதனைக் கட்டுப்படுத்த முடியாது" என தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனுவில், ``தேர்தல்களில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் கட்சிகளின் மாநில கொள்கைகள் மற்றும் முடிவுகள் ஆகியவற்றைத் தேர்தல் ஆணையத்தால் கட்டுப்படுத்த முடியாது. அதுமட்டுமல்லாமல், அத்தகைய நடவடிக்கையானது, சட்டத்தில் உள்ள விதிகளை செயல்படுத்தாமல், அதிகாரத்தை மீறுவதாக இருக்கும். மேலும், இலவசங்களை வழங்குவதென்பது அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவு. நீதிமன்றங்களால் அரசியல் கட்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க முடியும். ஆனால், தேர்தல் ஆணையத்தால் அதனை கட்டுப்படுத்த முடியாது. மேலும் இத்தகைய கொள்கைகள், நிதி ரீதியாக சாத்தியமானதா அல்லது மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு விளைவுகளை ஏற்படுத்துமா என்பது வாக்காளர்களால் தீர்மானிக்கப்பட வேண்டியவை" என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.
