மதுரை மாவட்டத்தில், மேலூர் நகராட்சி 8-வது வார்டு அல்-அமீன் பள்ளியில் வாக்களிக்கவந்த இஸ்லாமியப் பெண்னை, வாக்குச்சாவடியிலிருந்த பா.ஜ.க முகவர், ``முகம் சரியாகத் தெரியவில்லை. அதனால், ஹிஜாபைக் கழற்றிவிட்டு வாருங்கள்" எனக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து, தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த முகவர்கள் அவருக்குக் கண்டனம் தெரிவித்து, வாக்குச்சாவடியைவிட்டு வெளியேற்ற முயன்றனர். பின்னர், தேர்தல் அலுவலர்கள் பா.ஜ.க முகவரை வெளியேற்றினர். வாக்குச்சாவடியில் பதற்றமான சூழல் நிலவியதால், காவல்துறையினர் அங்கு கூடுதலாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் சென்னையில் செய்தியாளர்களிடத்தில் பேசினார். அப்போது ஹிஜாப் விவகாரம் தொடர்பாகப் பேசிய அவர், ``இந்தியா மதச்சார்பற்ற நாடு. அனைத்து வாக்காளர்களும் அவர்களது மத நம்பிக்கையைப் பின்பற்ற உரிமை உள்ளது. அரசமைப்புச் சட்டப்படி யாரும், எந்த உடையணிந்தும் வாக்களிக்கலாம். மதுரை மேலூரில் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்தவருக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்மீது மாவட்ட ஆட்சித்தலைவர் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்" என்றார்.
அதைத் தொடர்ந்து பேசிய அவர், ``ஆறு இடங்களில் வேட்பாளர்கள் இறந்ததால் தேர்தல் நடைபெறவில்லை. இதுவரை 30 முதல் 40 மின்னணு இயந்திரங்கள் வரை பழுதடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பணப் பட்டுவாடா நடந்ததாக 17 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மின்னணு இயந்திரங்களால் வாக்குப்பதிவு தாமதமான இடங்களுக்கு கூடுதல் நேரம் வழங்கும் திட்டமில்லை. கோவையில் பெரிதாக பிரச்னைகள் எதுவும் இல்லை. சென்னையில் தற்போது மந்தமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இனிமேல் சூடுபிடிக்க ஆரம்பிக்கும்'' என்றார்.
