Published:Updated:

தேர்தல் ஏன் செவ்வாய்கிழமைகளில் நடக்கிறது?! புத்தம் புதுக் காலை -7 #6AMClub

Vote for change
Vote for change

தமிழகத்தின் தலையெழுத்தை எழுதுவதற்கு உதவும் செவ்வாய்கிழமை என்பதால், மறக்காமல் நமது வாக்கைப் பதிவுசெய்து, நம் விரல்களில் அந்த ஒற்றைப்புள்ளியை ஏற்றுக்கொள்வோம். ஏனெனில், இன்றைய ஜனநாயகத்திற்கு ஓட்டுதான் O2..!

ஏப்ரல் 6, செவ்வாய்க்கிழமை... இன்று தமிழகத்தில் தேர்தல் தினம்!

நமது நாட்டில், ஒவ்வொரு தேர்தலும் ஒவ்வொரு கிழமைகளில் நடக்கும் என்றாலும், செவ்வாய்க்கிழமைகளில் மட்டுமே தேர்தல்கள் நடக்கும் நாடு ஒன்று இருப்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆம்... செவ்வாய்கிழமைக்கும், ஜனாதிபதி தேர்தலுக்கும் நீண்டதொரு தொடர்புள்ளது என்கிறது அமெரிக்க அரசியல் வரலாறு.

1845-ம் ஆண்டு முதல் இன்றுவரை, அமெரிக்காவில் வாக்குப்பதிவுகள் எப்போதும் நவம்பர் மாத செவ்வாய்கிழமைகளில் மட்டுமே நடைபெற்று வருகிறது என்கிறது. அன்றைய காலகட்டங்களில் கிட்டத்தட்ட ஒரு திருவிழா போல நடைபெற்ற அமெரிக்கத் தேர்தல்களில் கட்சிகளின் அணிவகுப்பு, நாடகம், நடனம் என அனைத்தும் நிறைந்திருக்க, அதைக் காண வரும் விவசாயப் பழங்குடி மக்களும், அதற்காகவே புத்தாடையெல்லாம் உடுத்திப் புறப்பட்டு வருவார்களாம்.

election day
election day

அவர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ள வசதியாக, அவர்களுடைய 'சபாத்' எனும் தொழுகை மற்றும் ஓய்வு நாட்களான சனி-ஞாயிறுகளில் தேர்தலை வைப்பதில்லை. அதேபோல பொதுச்சந்தை நாளான புதன்கிழமையையும் தவிர்த்து, விவசாய நிலங்களிலிருந்து குதிரை வண்டிகளில் தேர்தல் களத்திற்கு வந்துசேர, ஒருநாள் அவகாசமாக திங்கட்கிழமையைக் கணக்கிட்டு, செவ்வாய்கிழமையை அதுவும் குளிர்காலத்தின் ஆரம்பமான நவம்பர் மாத முதல் செவ்வாய்கிழமையை அமெரிக்க தேர்தல் தினமாக முடிவுசெய்து, அதையே இன்றுவரை கடைபிடித்தும் வருகிறார்கள் அமெரிக்கர்கள்.

அதேசமயம், 'Why Tuesday' போன்ற இளைஞர் இயக்கங்கள், தேர்தல்களை வார இறுதிக்கு மாற்றி வைக்குமாறு சமீப காலத்தில் போராடி வந்தாலும், பாரம்பரியமாக செவ்வாய்கிழமையைத்தான் பின்பற்றி வருகின்றனர் அமெரிக்கர்கள்.

அமெரிக்காவின் செவ்வாய்கிழமை போன்றதல்ல இன்றைய நமது ஏப்ரல் 6, செவ்வாய்..! இது தமிழ்நாட்டின் 16-ம் சட்டமன்றத் தேர்தலின் மிக முக்கியமான, வாக்குப்பதிவு நாள் என்பது மட்டுமல்ல... மனித சமுதாயத்தின் ஜனநாயகக் கோட்பாட்டை நம்மிடையே வலுவாக்க நமக்களிக்கப்பட்ட நம்பிக்கை நாள்.

கோவிட் பெருந்தொற்று காரணமாக, வாக்குப்பதிவு நேரத்தை காலை ஏழு மணிமுதல், மாலை ஏழு மணிவரை என அரசாங்கம் அதிகரித்துள்ள நிலையில், நாம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளையும் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

"ஒவ்வொருவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்.

தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

ஒவ்வொருவராக மட்டுமே வாக்குப்பதிவு அளிக்க முடியும் என்பதால் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.

வாக்குப்பதிவு அறைக்குள் நுழைந்தவுடன், சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்து, பின் வலது கைக்கு க்ளவுஸ் அணிந்து, பதிவு அறையிலிருக்கும் வாக்குப்பதிவு அதிகாரிகளை சந்திக்க வேண்டும். அடையாள அட்டையை சரிபார்த்து, இடது கைவிரலில் இங்க் அடையாளத்தையும் பெற்றுக்கொண்டு,

voters
voters

மின்னணு வாக்கு இயந்திரத்தில் வாக்குச் செலுத்தியபின், மறக்காமல் க்ளவுஸைக் களைந்து அதற்கான கூடையில் டிஸ்போஸ் செய்து, மீண்டும் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தப்படுத்தி, ஓட்டுச் சாவடியை விட்டு வெளியே வரவேண்டும். மேலும் ஓட்டுச்சாவடி முன் கூட்டத்தைத் தவிர்க்க உடனடியாக வீட்டிற்கு அல்லது பணிக்கு திரும்ப வேண்டும்..." என்று வழிமுறைப்படுத்துகிறது நமது தேர்தல் ஆணையம்!

இன்று நம் ஆள்காட்டி விரல்கள் தமிழை எழுதுவதற்கு மட்டுமல்லாமல், தமிழகத்தின் தலையெழுத்தை எழுதுவதற்கும் உதவும் செவ்வாய்க்கிழமை என்பதால், மறக்காமல் நமது வாக்கைப் பதிவுசெய்து, நம் விரல்களில் அந்த ஒற்றைப்புள்ளியை ஏற்றுக்கொள்வோம். ஏனெனில், இன்றைய ஜனநாயகத்திற்கு ஓட்டுதான் O2..!

அடுத்த கட்டுரைக்கு