Published:Updated:

`என் நாமினேஷன் செல்லாதுங்க; எப்படியும் ரிஜெக்ட் பண்ணிடுவாங்க!’ - `தேர்தல் மன்னன்’ கலகல!

‘ஜெயிக்கிறது எப்படி எல்லாருக்கும் ஒரு சந்தோஷமான விஷயமோ, அதேமாதிரிதான் எனக்கு தோத்துப் போறது..!’

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடைபெறவிருக்கிறது. அத்துடன் 28 மாவட்டங்களில் காலியாக இருக்கும் பதவிகளுக்கும் அக்டோபர் 9-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சியினர் களத்தில் இறங்கி வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துவிட்டு தீவிரமாகப் பணியாற்றிவருகின்றனர். இதற்கிடையே, வார்டு கவுன்சிலர் தேர்தல் முதல் குடியரசுத் தலைவர் தேர்தல் என எல்லாத் தேர்தல்களிலும் களமிறங்கி அதிரடிக்கும் சேலத்தைச் சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன், நான்கு பதவிகளுக்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்திருக்கிறார்.

வேட்புமனுத் தாக்கல் செய்யும் பத்மராஜன்
வேட்புமனுத் தாக்கல் செய்யும் பத்மராஜன்

சேலம் மாவட்டம், சின்னசேலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 11-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவி, 11-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவி, வி.அலம்பளம் ஊராட்சித் தலைவர் பதவி, அம்மையகரம் வார்டு உறுப்பினர் பதவி என மொத்தம் நான்கு பதவிகளுக்கு தேர்தல் மன்னன் பத்மராஜன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதுவரை 221 தடவை பல்வேறு பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்திருக்கும் பத்மராஜன், தற்போதைய வேட்புமனுவையும் சேர்த்து 225-வது முறையாக தேர்தல் களம் காண்கிறார்.

மாமியார் Vs மருமகள்; தந்தை Vs மகள்! - உள்ளாட்சித் தேர்தலில் மோதும் உறவுகள்

இது சம்பந்தமாக தேர்தல் மன்னன் பத்மராஜனிடம் பேசினோம். ``தேர்தல்ன்னு வந்துட்டா, பஞ்சர் ஒட்டுகிற பத்மராஜனும், பாரத பிரதமரும் ஒன்றுதான் என்பதை நிரூபிக்கவே தேர்தல் களத்துல இறங்குறேன். இதுவரை 225-வது முறை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செஞ்சிருக்கேன். இந்தமுறை உள்ளாட்சித் தேர்தல்ல, சின்னசேலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நான்கு பதவிகளுக்கு போட்டியிடுறேன். ஒருத்தர் ஒருபதவிக்குத்தான் போட்டியிட முடியும். அது தெரிஞ்சும் நான் நான்கு பதவிகளுக்கு நாமினேஷன் போட்டிருக்கேன். அதுமட்டுமில்லாம, எனக்கு மேட்டூர் வீரக்கல்புதூர் பேரூராட்சியிலதான் ஓட்டு இருக்கு. சின்னசேலம் யூனியனுக்கு எனக்கும் சம்பந்தமே இல்லை. முறைப்படி பார்த்தா என் நாமினேஷனே செல்லாதுங்க. எப்படியும் ரிஜெக்ட் பண்ணிடுவாங்க.

தேர்தல் மன்னன்
தேர்தல் மன்னன்

இதெல்லாம் தெரிஞ்சேதான், ஜெயிக்கலைன்னாலும் தேர்தல்ல போட்டியிடணும்னு களமிறங்கியிருக்கேன். எல்லாரும் வெற்றியை நோக்கிப் பயணிக்கிறப்ப, தோல்வியை நோக்கி சந்தோஷமா பயணப்படுற ஒரே ஆள் நானாகத்தான் இருக்கும். என்னைப் போன்ற மனோபாவம் இல்லாததாலதான், நீட் தேர்வுல தோல்வியுற்ற பல மாணவர்கள் தற்கொலை முடிவை கையிலெடுத்தாங்க. அவங்கல்லாம் என்னைப் பார்த்து கத்துக்கணும். வெற்றி எப்படியோ அதைப்போலவே தோல்வியையையும் சந்தோஷமாக நாம ஏத்துக்கணும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு