Published:Updated:

`ஆளுங்கட்சியினரால் உதவி அலுவலர்கள் மிரட்டப்படுகிறார்கள்!'- கொதிக்கும் சேலம் தி.மு.க

எங்களுடைய போராட்டத்திற்குப் பிறகு, மீண்டும் பழனியம்மாளின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. செல்வராஜ் மேற்பார்வையில் தேர்தல் நடந்தால் நியாயமாக இருக்காது.

எம்.பி தர்ணா
எம்.பி தர்ணா ( எம்.விஜயகுமார் )

`சேலம் மாவட்டத்தில், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் ஊராட்சிகளில் உள்ள தேர்தல் நடத்தும் உதவி அலுவலகர்கள், ஆளுங்கட்சிக்கு சாதகமாகச் செயல்படுகிறார்கள். நடுநிலையோடு செயல்படக்கூடிய தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள், ஆளுங்கட்சியினரால் மிரட்டப்படுகிறார்கள்' என்று சேலம் தி.மு.க-வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் மற்றும் மேற்கு மாவட்டச் செயலாளர் சிவலிங்கம் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

எம்.பி. பார்த்திபன், சிவலிங்கம் தர்ணா
எம்.பி. பார்த்திபன், சிவலிங்கம் தர்ணா
எம்.விஜயகுமார்

இதுபற்றி சேலம் தி.மு.க மேற்கு மாவட்டச் செயலாளர் சிவலிங்கம், ''தமிழக உள்ளாட்சி தேர்தலில் எங்கள் கட்சியின் சார்பாக மகுடஞ்சாவடி, 5-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் தேர்தலில், பழனியம்மாள் போட்டியிட உள்ளார். அதற்காகக் கடந்த 13 -ம் தேதி மகுடஞ்சாவடி ஊராட்சி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் செல்வராஜிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

அதை, தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் செல்வராஜ், வேட்பு மனுவைப் பரிசீலித்து, அனைத்து சட்ட விதிமுறைகளும் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளன என்பதை உறுதிசெய்து, அதன் அடிப்படையில் பழனியம்மாளின் வேட்புமனு பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவித்தார். பிறகு, ஆளும் அ.தி.மு.க கட்சிக்குச் சாதகமாகச் செயல்பட்டு, எங்க கட்சியைச் சேர்ந்த பழனியம்மாளின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல என சட்ட விரோதமாகத் தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராக அறிவித்தார். அதற்கான காரணத்தைச் சொல்லவில்லை.

எங்களுடைய போராட்டத்திற்குப் பிறகு, மீண்டும் பழனியம்மாளின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. செல்வராஜ் மேற்பார்வையில் தேர்தல் நடந்தால் நியாயமாக இருக்காது. அவர், சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் ராஜாவின் சொந்த ஊர்க்காரர். ஏதோ ஒரு குறுக்கு வழியில் எங்களது கழக வெற்றி வேட்பாளரின் வேட்பு மனுவை நிராகரித்து, அதன் மூலம் ஆளும் கட்சி வட்டாரத்தில் செல்வாக்கைப் பெற்றுக்கொள்ள நினைப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

செல்வராஜை அப்பணியில் இருந்து நீக்க வேண்டுமென்றும், மகுடஞ்சாடி ஊராட்சி மட்டுமல்ல, சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலகர்கள் ஆளுங்கட்சியினரால் மிரட்டப்பட்டுவருவதாக எங்களுக்குத் தகவல்கள் வருகிறது. அத்தகவலை மாவட்ட தேர்தல் பார்வையாளர் மற்றும் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனுக் கொடுக்க இரண்டு நாள்களாக முயல்கிறோம். அவர்களைச் சந்திக்க முடியாததால் தர்ணாவில் அமர்ந்தோம்'' என்றார்.

கலெக்டர் ராமன்
கலெக்டர் ராமன்
எம்.விஜயகுமார்

இதுபற்றி மாவட்ட கலெக்டர் இராமன், ''பழனியம்மாளின் மனு நிராகரிக்கப்படவில்லை. அவருடைய விண்ணப்பம் ஆய்வுசெய்ய சற்று கால தாமதம் ஏற்பட்டது. உடனே, அதை நிராகரிக்க தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் முயற்சிக்கிறார் என்று சொல்லி இருக்கிறார்கள். இதில் சற்றும் உண்மையில்லை. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் நியாயமாகத் தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவருகிறது. ஒவ்வொரு பூத்திலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட இருக்கிறது. காவல்துறை மற்றும் பறக்கும்படை பயன்படுத்த இருக்கிறோம். தேர்தல் தொடர்பாகப் புகார் கொடுக்க 1950 என் செயல்பட இருக்கிறது. கன்ட்ரோல் ரூம் திறக்கப்பட இருக்கிறது. அவர்கள் சொல்வது உண்மைக்குப் புறம்பானது'' என்றார்.