Published:Updated:

`இந்திய வரலாற்றில் முதல்முறை!' - புது ஐடியாவுடன் ஜார்க்கண்ட் தேர்தலை அணுகும் ஆணையம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரகுபர் தாஸ் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடக்கிறது.

Chief Election Commissioner, Sunil Arora
Chief Election Commissioner, Sunil Arora

ஜார்க்கண்ட் மாநிலத்துக்காக சட்டசபைத் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவித்தது. டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ``ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் 5 கட்டங்களாக நடக்கவுள்ளது. முதல் கட்டமாக நவம்பர் 30-ம் தேதி 13 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டமாக டிசம்பர் 7-ம் தேதி 20 தொகுதிகளுக்கும், மூன்றாம் கட்டமாக டிசம்பர் 12-ம் தேதி 17 தொகுதிகளுக்கும், நான்காம் கட்டமாக டிசம்பர் 16-ம் தேதி 15 தொகுதிகளுக்கும், ஐந்தாம் கட்டமாக மீதமுள்ள 16 தொகுதிகளுக்கும் டிசம்பர் 20-ம் தேதி தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணும் பணி டிசம்பர் 23-ம் தேதி நடைபெறும். மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

வாக்குப்பதிவு எந்திரம்
வாக்குப்பதிவு எந்திரம்

நக்சல் பிரச்னை காரணமாகத் தேர்தல் பணிகள் அதிக கவனத்துடன் நடக்கின்றன. எந்தத் தொய்வும் இல்லாமல் தேர்தலை நடத்துவதற்காகத்தான் 5 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 19 மாவட்டங்களில் நக்சல்கள் பாதிப்பு உள்ளது. இதில் 67 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. நாட்டிலேயே முதல் முறையாக ஜார்க்கண்ட் தேர்தலில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குகள் அளிக்கும் முறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

`சரத் பவார் மற்றும் ஆளுநரை சந்தித்த சிவசேனா!’ - மகாராஷ்டிரா முதல்வர் ரேஸில் முந்துவது யார்?

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரகுபர் தாஸ் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. பா.ஜ.க அரசின் பதவிக்காலம் ஜனவரி 5-ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆட்சியைத் தக்க வைக்க பா.ஜ.க தரப்பில் கடும் முயற்சிகள் நடந்து வருகிறது. நடந்து முடிந்த மகாராஷ்ட்ரா, ஹரியானா தேர்தலில் பா.ஜ.க-வுக்கு காங்கிரஸ் கட்சி கடுமையான சவால் அளித்தது. ஜார்க்கண்ட் சிறிய மாநிலமாக இருந்தாலும், மீண்டும் இங்கு ஆட்சியைப் பிடிப்பதில் காங்கிரஸ் தீவிரம் காட்டிவருகிறது.

 ரகுபர் தாஸ்
ரகுபர் தாஸ்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பழங்குடியின மக்களின் வாக்குகளை சேகரிப்பதில் பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது. 28 ரிசர்வ் தொகுதிகளில் 22 தொகுதிகளை பா.ஜ.க-வினர் டிக் செய்துள்ளனர். 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மாநிலத்தில் பழங்குடியினர்களின் மக்கள் தொகை 70 லட்சமாக இருந்தது. ரகுபர் தாஸ் அரசு, பழங்குடியின மக்களுக்காக நிறைய திட்டங்களை முன்னிலைப்படுத்தியது. பழங்குடியின மக்களின் கல்விக்காக உதவித்தொகை வழங்கப்பட்டது. இதன் மூலம் 30 லட்ச பழங்குடியின குழந்தைகள் பயனடைந்துள்ளனர். சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு 1 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்கியுள்ளார்.

ரிசர்வ் தொகுதிகளைக் கைப்பற்றினால் மெஜாரிட்டி பெற்றுவிடலாம் என்பது பா.ஜ.க கணக்கு. இதில் இன்னொரு சுவாரஸ்யமான தகவல் இருக்கிறது. 2000-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு, 5 ஆண்டுக்கால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்த முதல், முதலமைச்சர் ரகுபர் தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.