Published:Updated:

`தி.மு.க கார்ப்பரேட் கம்பெனி; அ.தி.மு.க ஐ.எஸ்.ஐ முத்திரை குத்திய தரமான இயக்கம்!' - எடப்பாடி பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

``தி.மு.க கார்பரேட் கம்பெனி. குடும்ப கட்சி. வாரிசு அரசியல் செய்கிறார்கள். ஸ்டாலின் மைனர் மாதிரி பேன்ட் சட்டை போட்டுக்கொண்டு மக்களை ஏமாற்றுகிறார். அ.தி.மு.க ஐ.எஸ்.ஐ முத்திரை குத்திய இயக்கம்’’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

வேலூர் மக்களவைத் தொகுதி அ.தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வாணியம்பாடி, ஆம்பூரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில், ``அ.தி.மு.க-வை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது. சில துரோகிகள் நம்மைப் பிரிக்க நினைத்தார்கள். சில எதிரிகள் நம்மை வீழ்த்தப்பார்த்தார்கள். நம்மை அவர்களால் எதுவும் செய்யமுடியவில்லை. பொய் பேசுவதற்கு ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம். 

ஏ.சி.சண்முகம்
ஏ.சி.சண்முகம்

வாயைத் திறந்தால் அவ்வளவு பொய் பேசுகிறார். வீதியில் விளையாடும் குழந்தைகளை மிட்டாய் கொடுத்து கடத்திச் செல்வதைப்போல் பொய் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார். நாங்கள் தர்மத்தின் வழியில் நெஞ்சை நிமிர்த்தி வெற்றிபெற்றிருக்கிறோம். பொய்யைப் பொருந்துகிற மாதிரி சொன்னால் மெய் திருதிருவென முழிக்குமாம். அதே மாதிரி தான் பச்சைப் பொய் பேசுபவர் ஸ்டாலின். எல்லோரின் காதுகளிலும் ஓட்டை போட்டு பெரிய கடுக்கன் மாட்டுகிறார்.

தி.மு.க முத்திரை இல்லாத கட்சி. கார்ப்பரேட் கம்பெனி. அ.தி.மு.க ஐ.எஸ்.ஐ. முத்திரை குத்திய தரமான இயக்கம். எந்த காலத்திலும் மங்காது. கருணாநிதிக்குப் பிறகு அவரது மகன் ஸ்டாலின் தலைவர். ஸ்டாலினுக்குப் பிறகு அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் தலைவராக இருப்பார். ஏன், தி.மு.க-வில் வேறு ஆளே இல்லையா... தி.மு.க குடும்ப அரசியல் கட்சி. அ.தி.மு.க-வில் வாரிசு அரசியல் இல்லை. யாராக இருந்தாலும் உயர்ந்த பதவிக்கு வருவார்கள் என்ற பெருமை இந்தியாவிலேயே அ.தி.மு.க என்ற ஒரே கட்சிக்குத்தான் இருக்கிறது. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

பேன்ட் சட்டை போட்டுக்கொண்டு மைனர் மாதிரி மார்க்கெட் போகிறார். டீ கடைக்குப் போகிறார். இதனைப் பார்த்து மக்கள் ஏமாறக்கூடாது. யாரால் வேலூர் தேர்தல் நிறுத்தப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியெல்லாம் பொய் வாக்குறுதிகள் கொடுத்தார்கள் என்று தெரியும். ஸ்டாலின் பொய்யில் பிறந்து, பொய்யில் வாழ்ந்து, பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டு வெற்றிபெற்றார். தாய்மார்களைப் பார்த்து கேட்கிறேன். அவர்களால் ஒரு திட்டத்தையாவது நிறைவேற்ற முடியுமா?

ஸ்டாலின் எத்தனையோ அவதாரம் எடுத்தார். ஆட்சியைக் கவிழ்க்க நினைத்தார். கட்சியை உடைக்கப் பார்த்தார். அவரால் எங்களைத் தொட்டுக்கூட பார்க்க முடியவில்லை. நாங்கள் உண்மையைச் சொல்கிறோம். மக்களைச் சந்திக்கிறோம். இதுதான் எங்களின் நிலைப்பாடு. ஸ்டாலின் போகும் இடமெல்லாம், இந்த ஆட்சியில் ஒன்றுமே நடக்கவில்லை என்கிறார். ஸ்டாலின் யாராவது எழுதிக் கொடுத்தால் அப்படியே பேசுபவர். நாங்கள் அப்படியல்ல. நல்லது எது, கெட்டது எது என்று ஒவ்வொரு திட்டங்களையும் பார்த்து பார்த்துச் செயல்படுத்திவருகிறோம். 

வாணியம்பாடி பிரசார பொதுக்கூட்டம்
வாணியம்பாடி பிரசார பொதுக்கூட்டம்

இந்தியாவிலேயே இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக வாழும் ஒரே மாநிலம் தமிழகம்தான். சிறந்த நிர்வாகம், சிறப்பான ஆட்சியைத் தந்துகொண்டிருக்கிறோம். மின்மிகை மாநிலமாக மாற்றியிருக்கிறோம். ஏ.சி.சண்முகம் நல்லவர், திறமையானவர். ஏற்கெனவே, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். அவருக்கு வாக்களியுங்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்று சொல்வார்கள். அவர் செய்த சாதனைகளை நினைத்துப் பார்த்து வெற்றிபெறச் செய்யுங்கள்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு