Published:Updated:

செங்கோட்டையன் முதல் 3 புதுமுக வேட்பாளர்கள் வரை! - ஈரோடு அ.தி.மு.க வேட்பாளர்களின் பயோடேட்டா!

ஈரோடு

இரண்டு சிட்டிங் அமைச்சர்கள், ஒரு சிட்டிங் எம்.எல்.ஏ, மூன்று புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. யார் யார் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டிருக்கின்றனர்?

Published:Updated:

செங்கோட்டையன் முதல் 3 புதுமுக வேட்பாளர்கள் வரை! - ஈரோடு அ.தி.மு.க வேட்பாளர்களின் பயோடேட்டா!

இரண்டு சிட்டிங் அமைச்சர்கள், ஒரு சிட்டிங் எம்.எல்.ஏ, மூன்று புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. யார் யார் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டிருக்கின்றனர்?

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் (தனி) என மொத்தம் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இவற்றில் ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி ஆகிய இரண்டு தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள ஆறு தொகுதிகளிலும் சொந்தக் கட்சியினரை வேட்பாளராகக் களமிறக்கியிருக்கிறது அ.தி.மு.க தலைமை. இவர்களில் இரண்டு சிட்டிங் அமைச்சர்கள், ஒரு சிட்டிங் எம்.எல்.ஏ., மூன்று புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. யார் யார் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டிருக்கின்றனர், அவர்களின் பின்னணி என்ன என்று பார்ப்போம்...

கே.வி.இராமலிங்கம்
கே.வி.இராமலிங்கம்

ஈரோடு மேற்கு - (கே.வி.இராமலிங்கம்)

ஈரோடு மேற்கு தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருக்கும் கே.வி.இராமலிங்கம் (64) மறுபடியும் களமிறக்கப்பட்டிருக்கிறார். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகாவிலுள்ள கள்ளிவலசு கிராமம்தான் கே.வி.இராமலிங்கத்தின் சொந்த ஊர். கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். தாராபுரம் ஒன்றியச் செயலாளராக இருந்த இவர், 2008-ம் ஆண்டு முதல் தற்சமயம் வரை ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளராக இருக்கிறார். 2010-ம் ஆண்டு ராஜ்யசபா எம்.பி-யானவர், எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு 2011 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து பொதுப்பணித்துறை அமைச்சரானார். நில அபகரிப்புப் புகாரால் இரண்டு ஆண்டுகளிலேயே அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. 2016-ல் மறுபடியும் ஈரோடு மேற்கில் போட்டியிட்டு தற்போது எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். மாவட்டச் செயலாளர், சிட்டிங் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் என்கிற அடிப்படையில் இராமலிங்கத்துக்கு 2021 தேர்தலில் போட்டியிட சீட் கிடைத்திருக்கிறது.

பெருந்துறை - (ஜே.கே (எ) ஜெயக்குமார்)

பெருந்துறை தொகுதியின் வேட்பாளராக ஜே.கே (எ) ஜெயக்குமார் என்பவர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். பி.பி.எம்., டி.சி.எம் படித்துள்ள ஜெயக்குமார், ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்துவருகிறார். 1999-ல் அ.தி.மு.க-வில் இணைந்தவர் கிளைச் செயலாளர், ஈரோடு புறநகர் மாவட்ட மாணவரணிச் செயலாளர் ஆகிய பதவிகளை வகித்திருக்கிறார். 2006-ம் ஆண்டிலிருந்து இன்றுவரை தொடர்ந்து 15 ஆண்டுகளாக பெருந்துறை ஒன்றிய கவுன்சிலராக இருந்துவருகிறார். தற்சமயம் பெருந்துறை ஒன்றியத்தில் 10-வது வார்டில் கவுன்சிலராக இருக்கிறார். முன்னாள் அமைச்சரும், சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான தோப்பு வெங்கடாசலத்துக்கு சீட் மறுக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஜெயக்குமார் சீட்டைத் தட்டிச் சென்றிருக்கிறார்.

ஜே.கே (எ) ஜெயக்குமார்
ஜே.கே (எ) ஜெயக்குமார்

பவானி - (கே.சி.கருப்பணன்)

சுற்றுச்சூழல்துறை அமைச்சரும், பவானியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான கே.சி.கருப்பணன் மறுபடியும் பவானி தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகிலுள்ள காட்டுவலசு கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பணன் (64). கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். ரியல் எஸ்டேட் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்றவற்றையும் நடத்திவருகிறார். 1972-ல் காட்டுவலசு கிளைச் செயலாளராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர், 1994-ல் பவானி ஒன்றிய அவைத் தலைவராகவும், 1999-ல் பவானி ஒன்றியச் செயலாளராகவும், 2001-2006 வரை பவானி தொகுதியின் எம்.எல்.ஏ-வாகவும் இருந்திருக்கிறார்.

2006 தேர்தலில் மறுபடியும் பவானி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைய, 2011 தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதையடுத்து 2011-ல் பவானி நகர்மன்றத் தலைவராகிறார். 2016-ல் மறுபடியும் பவானி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆகிறார். போனஸாக ஈரோடு புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியும், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பதவியும் கிடைக்கிறது. சிட்டிங் அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர் லிஸ்ட்டில் மறுபடியும் பவானி தொகுதியில் கருப்பணன் களமிறக்கப்பட்டிருக்கிறார்.

கே.சி.கருப்பணன்
கே.சி.கருப்பணன்

அந்தியூர் - (கே.எஸ்.சண்முகவேல்)

அந்தியூர் தொகுதி வேட்பாளராக கே.எஸ்.சண்முகவேல் என்பவர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். அந்தியூரை அடுத்த கருங்கால்வாடிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேல். விவசாயம் இவரது தொழில். அ.தி.மு.க-வில் 1987-ம் ஆண்டு முதல் இருக்கிறார்.

1989-ம் ஆண்டு கிளைச் செயலாளரானவர், 2001-ம் ஆண்டு அந்தியூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 2003-ம் ஆண்டு அ.தி.மு.க ஒன்றிய விவசாய அணிப் பொருளாளர், 2005-ம் ஆண்டு ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளர், 2006-ல் அந்தியூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மற்றும் 2020 உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்று அந்தியூர் 3-வது வார்டு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினராக இருக்கிறார்.

கே.எஸ்.சண்முகவேல்
கே.எஸ்.சண்முகவேல்

கோபிசெட்டிபாளையம் - (கே.ஏ.செங்கோட்டையன்)

எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதியும், அ.தி.மு.க-வின் சீனியருமான செங்கோட்டையன் (73) கோபிசெட்டிபாளையம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கோபிசெட்டிபாளையம் அருகிலுள்ள குள்ளம்பாளையம்தான் செங்கோட்டையனின் சொந்த ஊர். 1969-ம் ஆண்டு குள்ளம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பேற்கிறார். 1972 முதல் அ.தி.மு.க-வில் உறுப்பினராக இருக்கிறார். மாவட்டச் செயலாளர், அமைப்புச் செயலாளர், கொள்கை பரப்புச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் இருந்திருக்கிறார்.

1977-ல் முதன்முறையாக சத்தியமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனவர், 1980, 1984, 1989, 1991, 2006, 2011, 2016 என ஏழு முறை கோபி தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 1991-1996 வரை போக்குவரத்து மற்றும் வனத்துறை அமைச்சராகவும், 2011-ல் வேளாண்மைத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, வருவாய்த்துறை ஆகிய அமைச்சரவைப் பதவிகளிலும் இருந்துள்ளார். தற்சமயம் பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கிறார். கட்சியின் சீனியர், சிட்டிங் அமைச்சர் என்ற அடிப்படையில் செங்கோட்டையன் மறுபடியும் களமிறக்கப்பட்டிருக்கிறார்.

கே.ஏ.செங்கோட்டையன்
கே.ஏ.செங்கோட்டையன்

பவானிசாகர் (தனி) - (ஏ.பண்ணாரி)

பவானிசாகர் (தனி) சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக ஏ.பண்ணாரி (42) என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். பவானிசாகர் அருகேயுள்ள பெரிய கள்ளிப்பட்டி கிராமத்தில் வசித்துவருகிறார். பெரிய கள்ளிப்பட்டி கிளைக் கழகச் செயலாளராக இருக்கிறார்.

ஏ.பண்ணாரி
ஏ.பண்ணாரி

அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலில் எம்.எல்.ஏ அல்லாதோர் 103 பேருக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் வாய்ப்பு மறுக்கப்பட்ட மூன்று அமைச்சர்கள் உட்பட பல சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.