Election bannerElection banner
Published:Updated:

ஈரோடு: `ஈஸியான தொகுதியா கொடுங்க!’ -சுப்புலட்சுமி ஜெகதீசனால் கொதிக்கும் உடன்பிறப்புகள்

தி.மு.க துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன்
தி.மு.க துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன்

கிழக்கு தொகுதிக்கு சீட் எதிர்பார்த்த செந்தில்குமார், சந்திரகுமார் மட்டுமல்ல, `மொடக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்தவர், ஈரோடு கிழக்கில் போட்டியிட வேண்டிய அவசியமென்ன’ என்று கட்சி நிர்வாகிகளுமே அப்செட்டில் இருக்கிறார்களாம்.

ஈரோடு மாநகரின் மையப் பகுதியிலுள்ள தொகுதி `ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி.’ ஈரோடு மாநாகராட்சியின் 36 வார்டுகளை மட்டுமேகொண்ட, மாவட்டத்திலேயே சிறிய தொகுதி இதுதான். ஜவுளி வியாபாரமும், விசைத்தறி தொழிலும் தொகுதியின் பிரதான தொழிலாக இருக்கின்றன. இங்கு முதலியார், கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர். இந்தத் தொகுதியிலுள்ள பெரும்பான்மையான முதலியார் சமுதாய வாக்குகளைக் குறிவைத்து, முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளர்களை களமிறக்குவதை இரு பெரும் திராவிடக் கட்சிகளும் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றன.

ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க துணைச் செயலாளர் செந்தில்குமார்
ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க துணைச் செயலாளர் செந்தில்குமார்

அந்தவகையில், தி.மு.க-வில் முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த ஈரோடு தெற்கு மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், தி.மு.க கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் இருவரும் ஈரோடு கிழக்கில் சீட் வாங்குவதற்குத் தீவிரமாக வேலை செய்துவருகின்றனர். மாவட்டச் செயலாளரின் பரிந்துரைப் பட்டியலிலும், ஐபேக் டீமினுடைய பட்டியலிலும் இவர்கள் இருவருடைய பெயர்களும்தான் டாப் லிஸ்ட்டில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. `இந்த இரண்டு பேரில் யாராவது ஒருவருக்குத்தான் நிச்சயமாக சீட் கிடைக்கும்’ என கட்சியினரும் கடந்த சில நாட்களாக உறுதியாகக் கூறிவந்தனர். ஆனால், தேர்தல் நெருங்கும் வேளையில் காட்சிகள் மாறும் என்பதற்கேற்ப கடைசி நேரத்தில் பெரும் ட்விஸ்ட் நடந்திருப்பது உடன்பிறப்புகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தி.மு.க கொள்கை பரப்பு இணைச் செயலாளர்
தி.மு.க கொள்கை பரப்பு இணைச் செயலாளர்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடந்த வேட்பாளர் நேர்காணலின்போது, கிழக்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனும் அங்கு வந்து அமர்ந்திருக்கிறார். `மொடக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், எதற்காக ஈரோடு கிழக்கு தொகுதி நேர்காணலில் வந்து உட்கார்கிறார்?’ என அப்போதே உடன்பிறப்புகளுக்கு சந்தேகம் தட்டியிருக்கிறது. தி.மு.க கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவிலும், தி.மு.க வேட்பாளர் நேர்காணல் குழுவிலும் இடம்பெற்றிருக்கும் சுப்புலட்சுமி ஜெகதீசன், அங்கு யதார்த்தமாகவே இருந்திருக்கிறார் என உடன்பிறப்புகள் நினைத்திருக்கிறார்கள். ஆனால், அதன் பிறகு சுப்புலட்சுமி ஜெகதீசனே, `தலைவர்தான் விருப்ப மனு கொடுக்கலையான்னு கேட்டாரு. நான் மொடக்குறிச்சி தொகுதிதான் கேட்டேன். தலைவர்தான் ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் சேர்த்துக் கட்டுங்கன்னு சொன்னாரு’ என உடன்பிறப்புகளிடம் கூறியிருக்கிறார்.

என்ன நடந்தது என விசாரித்தோம். `மொடக்குறிச்சி தொகுதி கிராமங்கள் நிறைந்த பெரிய தொகுதி. வயதான என்னால் கிராமம் கிராமமாகச் சென்று பிரசாரம் செய்ய முடியாது. மாவட்டத்தில் சிறிய தொகுதியான நகர்ப்புறத்தைக்கொண்ட ஈரோடு கிழக்கு தொகுதியை எனக்குக் கொடுத்தால், பிரசாரம் செய்ய ஈஸியாக இருக்கும்’ என சுப்புலட்சுமி ஜெகதீசன்தான் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருப்பதாகத் தெரிகிறது. சுப்புலட்சுமியின் இந்த பாலிடிக்ஸால் கிழக்கு தொகுதியில் சீட் கேட்டிருந்த உடன்பிறப்புகள் மிகவும் நொந்துபோயிருக்கின்றனர்.

விஷயமறிந்த தி.மு.க-வினர் சிலரிடம் பேசினோம். ``ஈரோடு கிழக்கு தொகுதிக்கு சீட் கேட்ட செந்தில்குமார், சந்திரகுமார் இருவரும் சுப்புலட்சுமியின் ஃபாலோயர்ஸ். சுப்புலட்சுமி ஜெகதீசனை `அக்கா... அக்கா...’ என்றுதான் அழைப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் செந்தில்குமார் கிழக்கு தொகுதி சீட்டுக்காக, சுப்புலட்சுமி ஜெகதீசன் வழியாகத்தான் காய்நகர்த்தினார். கடைசியில் தன்னுடைய ஆதரவாளர்கள் இருவரையே காலிசெய்யும் அளவுக்கு சுப்புலட்சுமி தந்திரமாக காய்நகர்த்தியிருக்கிறார். 1977-ல் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர், 1989-ல் ஈரோடு சட்டமன்ற உறுப்பினர், மறுபடியும் 1996-ல் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர், 2004-ல் திருச்செங்கோடு நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பல முறை சுப்புலட்சுமி பதவிகளில் இருந்திருக்கிறார். இதுபோக தற்சமயம் திமு.க துணைப் பொதுச் செயலாளர் மற்றும் கழக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார். இப்படி ஆட்சியிலும் கட்சியிலும் பல பொறுப்புகளில், பல உயரங்களை எட்டியும் இப்படி செய்யலாமா...

தி.மு.க., துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன்
தி.மு.க., துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன்

சுப்புலட்சுமி ஜெகதீசனின் இந்த திடீர் முடிவுக்குப் பின்னால் அவருடைய கணவர் ஜெகதீசனின் மாஸ்டர் மைண்ட் இருக்கிறது. இதனால் கிழக்கு தொகுதிக்கு சீட் எதிர்பார்த்த செந்தில்குமார் மற்றும் சந்திரகுமார் மட்டுமல்ல, `மொடக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்தவர், ஈரோடு கிழக்கில் போட்டியிட வேண்டிய அவசியமென்ன...’ என்று கட்சி நிர்வாகிகளுமே கடுமையான அப்செட்டில் இருக்கின்றனர். இப்படியான உள்கட்சி குழப்பங்களாலும், கோஷ்டி அரசியலாலும்தான் கடந்தமுறை ஈரோட்டில் ஒரு தொகுதியில்கூட தி.மு.க-வால் வெற்றிபெற முடியாமல் போனது. இந்தமுறையும் இப்படியான விவகாரங்கள் தி.மு.க-வில் நிச்சயம் சரிவை ஏற்படுத்த வாய்ப்புண்டு. தலைமையிடம் பேசி சீட் வாங்குறாங்கன்னா, அப்புறம் எதுக்குங்க இந்த ஐபேக் டீமெல்லாம்... தி.மு.க-வில் இந்த பவர் பாலிடிக்ஸ் இருக்குறவரைக்கும் கோஷ்டிப்பூசல், தோல்விகள் தொடர்ந்து வந்துகிட்டேதான் இருக்கும்” என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு