Published:Updated:

'சீட் கேட்டது மகனுக்கு, கிடைத்தது தந்தைக்கு'... ஈரோடு கிழக்கில் ஈவிகேஎஸ் இளங்கோவன் - பின்னணி என்ன?!

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

ஈரோடு கிழக்கில் போட்டியிடுவதற்குத் தன் மகனுக்கு சீட் கேட்ட நிலையில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னணி என்ன?

'சீட் கேட்டது மகனுக்கு, கிடைத்தது தந்தைக்கு'... ஈரோடு கிழக்கில் ஈவிகேஎஸ் இளங்கோவன் - பின்னணி என்ன?!

ஈரோடு கிழக்கில் போட்டியிடுவதற்குத் தன் மகனுக்கு சீட் கேட்ட நிலையில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னணி என்ன?

Published:Updated:
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

தேர்தல் அறிவிப்பு:

கடந்த 4-ம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மரணமடைந்தார். இதையடுத்து இந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வேட்புமனு தாக்கல் வரும் 31-ல் தொடக்கி பிப்.7 வரை நடக்கிறது. பிப்.27-ல் வாக்குப்பதிவும், மார்ச் 2-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகின்றன. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத், அந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் ஆகியோர் விருப்பம் தெரிவித்துக் கடிதங்களை அளித்திருந்தனர்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

முன்னதாக இது குறித்து கருத்து தெரிவித்திருந்த இளங்கோவன், "இடைத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை. எனக்கு உடல்நிலையும் சரியில்லை. இடைத்தேர்தலில் இளைஞர் ஒருவரை வேட்பாளராக காங்கிரஸ் அறிவிக்க வேண்டும். என் இளைய மகன் சஞ்சய் சம்பத்துக்கு வாய்ப்பு தருமாறு கட்சித் தலைமையிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன். வேறு சிலரும் வேட்பாளர் தேர்வில் இருப்பதாலும், கட்சித் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதை ஏற்றுக்கொள்வேன்" எனத் தெரிவித்திருந்தார்.

முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

இதற்கிடையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் மேம்பாட்டுப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 22-ம் தேதி ஆய்வுசெய்தார். இளங்கோவன் இல்லம் அமைத்திருக்கும் மணப்பாக்கம் பகுதியிலும் ஆய்வு நடந்தது. அப்போது இளங்கோவனின் அழைப்பை ஏற்று அவரின் இல்லத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு சிறிது நேரம் இருவரும் ஆலோசனை நடத்தினர். 'ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாகவே இந்தச் சந்திப்பு நடந்தது' என்ற தகவல்கள் வெளியாகின.

மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே

இந்தச் சந்திப்பு நடந்த அடுத்த சில மணி நேரத்தில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் இந்த அறிவிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையிலிருந்தது. கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் வெளியிட்டிருந்த அறிக்கையில், "ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட கட்சியின் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்திருக்கிறார்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

"என்மீது நம்பிக்கை..."

பின்னர் இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், "ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் என் இளைய மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட வேண்டும் என விரும்பினேன். ஆனால், காங்கிரஸ் தலைமை என்மீது நம்பிக்கை வைத்து என்னை வேட்பாளராக அறிவித்திருக்கிறது. தலைமை முடிவை ஏற்கிறேன். இடைத்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிபெறும். போட்டியிட வாய்ப்பளித்த திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தோழமைக் கட்சியினருக்கு நன்றி. என் மகன் திருமகன் ஈவெரா விட்டுச் சென்ற பணிகளைப் பூர்த்திசெய்வேன்" என்றார்.

தினேஷ் குண்டுராவ்
தினேஷ் குண்டுராவ்
ட்விட்டர்

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், "காங்கிரஸ் எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் அனைவரும் ஈரோடு கிழக்குத் தொகுதி பிரசாரத்தில் ஈடுபடுவார்கள். திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் வெற்றிபெறுவது 100% உறுதி. மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள்" என்றார்.

"கேட்டது மகனுக்கு, கிடைத்தது தந்தைக்கு..."

தற்போது ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (74), ஈரோட்டில் ஈ.வி.கே.சம்பத் - சுலோச்சனா சம்பத் ஆகியோருக்கு மகனாக 21.11.1948-ல் பிறந்தார். பெரியாரின் பேரனான இவர், சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ.பொருளாதாரம் படித்திருக்கிறார். இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தார். 1984-ல் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பேரவைத் தொகுதி உறுப்பினராக முதன்முறையாகத் தேர்வுசெய்யப்பட்டார். 2004-ல் கோபி மக்களவைத் தொகுதியில் 2,14,477 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்
விகடன்

அப்போது பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் ஜவுளித்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்தார். பின்னர் 2009-ல் ஈரோடு, 2014-ல் திருப்பூர், 2019-ல் தேனி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவை தவிர தமிழக காங்கிரஸ் தலைவராக இரண்டு முறையும், செயல் தலைவராக ஒரு முறையும் பதவி வகித்திருக்கிறார். இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஈரோடு கிழக்கில் போட்டியிடுவதற்குத் தன் மகனுக்கு சீட் கேட்டிருந்த நிலையில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வழங்கப்பட்டிருப்பது ஏன் என்பது குறித்த கேள்வி எழுகிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய சீனியர் கதர்கள் சிலர். "தற்போது இருக்கும் 18 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களில் 'பவர் பாலிடிக்ஸ்' செய்யக்கூடியவர்கள் யாரும் இல்லை. அவர்கள் திமுக-வை ஆதரிக்கக்கூடிய ஆட்களாகத்தான் இருக்கிறார்கள். காமராஜரைத் திட்டிப்பேசினால்கூட அமைதியாகத்தான் இருக்கிறார்கள். இது மிகவும் வேதனையாக இருக்கிறது. மேலும், சட்டமன்றத்தில் செல்வப்பெருந்தகையின் செயல்பாட்டை ஸ்டாலின் ரசிக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. ஆளுநர் விவகாரத்தில் தனித் தீர்மானம் கொண்டுவந்தது அவர் தன்னிச்சையாகச் செயல்படுகிறார் என்ற பெயரை ஏற்படுத்திவிட்டதாம்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

இது தொடர்பாக கே.எஸ்.அழகிரியுடனும் பேசியிருக்கிறாராம். இந்த நிலையில்தான் ஈரோடு தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைக் களமிறக்க முடிவுசெய்யப்பட்டது. ஆனால் இளங்கோவனின் விருப்பமோ சஞ்சய் சம்பத் போட்டியிட வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. சஞ்சய் சம்பத்தும் சாஃப்ட்டாகத்தான் பேசுவார். மேலும், அவர் உடனடியாக அரசியலில் இறங்க ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள்.

இது குறித்து இளங்கோவனிடம் விளக்கப்பட்டது. ஒருவழியாக அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டார். சட்டசபைக்குள் இளங்கோவன் வந்த பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிடும். அவர் எது பேசினாலும் பரபரப்பை ஏற்படுத்திவிடுவார். மேலும், அவரது பேச்சு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 'லைவ்'வில் இருப்பதைக் காட்டும். அதுதான் தற்போது காங்கிரஸுக்குத் தேவை" என்றனர்.

அழகிரியின் 'ஆடுபுலி ஆட்டம்'!

இதில் அழகிரியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து விசாரித்தோம். "தலைவரின் 'ஆடுபுலி ஆட்டம்' இதிலும் இருக்கிறது என்று பேசத் தொடங்கினர், அவரின் ஆதரவாளர்கள். "அழகிரிக்கும் செல்வப்பெருந்தகைக்கும் இடையே முட்டல் மோதல் தொடர்கிறது. தலைவர் பதவிக்காக சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதலுக்கு, அவர்தான் காரணம். எனவே, அவருக்கு எப்படி 'செக்' வைப்பது என ஆலோசித்துவந்தார் அழகிரி. இந்த நிலையில் கவர்னர் விஷயத்தில் செல்வப்பெருந்தகையின் செயல்பாடு, அழகிரிக்குக் கைகொடுத்தது.

ஏனெனில், இந்த விஷயத்தில் திமுக-வின் தலைமையும் செல்வப்பெருந்தகை மீது அதிருப்தியில் இருந்தது. இதனால் திமுக-வும் இளங்கோவன் தரப்புக்கு கிரீன் சிக்னல் காட்டியது. இவற்றையெல்லாம் தொகுத்து கட்சியின் தலைமைக்குக் கொண்டு சென்ற அழகிரி, இளங்கோவனுக்கு சீட் பெற்றுக்கொடுத்திருக்கிறார். வழக்கம்போல் தனது ஆடுபுலி ஆட்டத்தை ஈரோடு தேர்தலிலும் ஆடியிருக்கிறார். சட்டசபையிலும், சத்தியமூர்த்தி பவனிலும் இனி அனல் பறக்கும்" என்கின்றனர்.