Published:Updated:

`பணம் பிரிப்பதில் தகராறு' - விக்கிரவாண்டியில் பா.ம.க - தே.மு.தி.க-வினரிடையே மோதல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பணம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் பா.ம.க மற்றும் தே.மு.தி.க-வினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சண்டை
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சண்டை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏவான தி.மு.கவைச் சேர்ந்த ராதாமணி உடல்நலக் குறைவால் கடந்த ஜூன் மாதம் உயிரிழந்ததால் இடைத்தேர்தலை சந்திக்கிறது இந்தத் தொகுதி. பா.ம.க, தே.மு.தி.க கூட்டணியுடன் அ.தி.மு.க வேட்பாளர் ஆர்.முத்தமிழ்ச்செல்வனும், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணியுடன் தி.மு.க வேட்பாளர் நா.புகழேந்தியும் போட்டியிட்டனர். அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றிருந்த பா.ம.க மற்றும் தே.மு.தி.கவைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் பூத் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

கட்டுக்கட்டாக 2000 ரூபாய் பணத்துடன் சிக்கிய திமுக எம்எல்ஏ?- சுற்றிவளைத்து பிடித்த நாங்குநேரி மக்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சண்டை
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சண்டை

இன்று மதியம் கல்யாணம்பூண்டி என்ற கிராமத்தில் காலை முதலே வாக்குகள் விறுவிறுப்பாக பதிவாகிக்கொண்டிருந்தது. மதிய உணவு இடைவேளையின்போது திடீரென பா.ம.க மற்றும் தே.மு.தி.க-வினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. சட்டை கிழியும் அளவுக்கு இரு தரப்பினருக்குமிடையே நடைபெற்ற மோதலை அங்கிருந்த காவல்துறையினர் முடிவுக்குக் கொண்டு வந்து அனுப்பி வைத்தனர். சாப்பிட்டுக்கொண்டிருந்த நேரத்தில் அ.தி.மு.க தரப்பில் பூத் பணிக்கான பணத்தை பா.ம.க-வினரிடம் கொடுத்து, `அனைவரும் பிரித்துக்கொள்ளுங்கள்' என்று கூறப்பட்டிருக்கிறது.

அதைத் தொடர்ந்து, `அந்தப் பணத்தை சம பாகமாக பிரித்துக் கொடுங்கள்' என்று தே.மு.தி.க-வினர் கூறியிருக்கிறார்கள். ஆனால், அதை ஏற்க மறுத்த பா.ம.க-வினர், `அதிகமாக உழைத்தது நாங்கள்தான். அதனால் சமமாகப் பிரிக்க முடியாது. 30% தருகிறோம்' என்று கூறியிருக்கிறார்கள்.

அதற்கு, `சமமாக பிரிக்கவில்லை என்றால் நடப்பதே வேறு' என்று தே.மு.தி.க தரப்பில் பேசியதால் அங்கு வாக்குவாதம் முற்றியது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் இரு தரப்பினரும் சட்டை கிழியும் அளவுக்கு சரமாரியாக தாக்கிக் கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.