
எளிமையாகச் சொல்வதென்றால் இந்திய தேர்தல் வரலாறு என்பது ‘டி.என்.சேஷனுக்கு முன் - டி.என்.சேஷனுக்குப் பின்’ என்று பார்க்கப்பட வேண்டும். டி.என்.சேஷனுக்கு முன்பாக, இந்தியத் தேர்தல் ஆணையம் இருந்த நிலையும், அவரால் நடந்த மாற்றங்களும் அப்படிப்பட்டவை. நவம்பர் 10ஆம் தேதி மரணமடைந்தார் சேஷன்.
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள திருநெல்லைதான் சேஷனின் பூர்வீகம். பாலக்காட்டில் உள்ள அரசு விக்டோரியா கல்லூரியிலும், பிறகு சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும் படித்தார். இயற்பியல் படித்த சேஷன் சிறிது காலம் கிறிஸ்தவக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். அப்போது அவருக்கு 19 வயது. மாதச் சம்பளம் ரூ.180. எனவே, வேறு பணிக்குச் செல்வதென்று முடிவுசெய்தார். 1953-ம் ஆண்டு காவல்துறை அதிகாரிக்கான தேர்வில் வெற்றிபெற்றார். ஆனால், அதில் அவர் சேரவில்லை. காரணம், “காவல்துறையில் சேர்ந்தால் எப்போதும் குற்றவாளிகளையே கவனித்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கும். என் இதயம் இறுகிப்போய்விடும்” என்று பிற்காலத்தில் சேஷன் குறிப்பிட்டார்.
சிவில் சர்வீஸ் தேர்வெழுதி அதில் வெற்றிபெற்று, பல அரசுப்பணிகளில் இருந்த சேஷன், எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் மெட்ராஸ் போக்குவரத்து இயக்குநராகவும் இருந்தார். மெட்ராஸ் போக்குவரத்தில் 3,000 பேருந்துகள் இயங்கின, 40,000 ஊழியர்கள் பணியாற்றினர். ஒருமுறை, ‘பேருந்து இன்ஜினைப் பற்றித் தெரியாத நீங்கள் எப்படி இத்தனை ஆயிரம் ஊழியர்களின் பிரச்னைகளைப் புரிந்துகொள்ளப் போகிறீர்கள்?’ என்று சேஷனைப் பார்த்து ஒரு தொழிலாளி கேட்டிருக்கிறார். அதை சவாலாக ஏற்றுக்கொண்ட சேஷன், பேருந்தை இயக்குவதற்குக் கற்றுக்கொண்டார். ஒரு முறை பேருந்தை நிறுத்தி ஓட்டுநரை இறங்கச் சொல்லிவிட்டு, அந்தப் பேருந்தை 80 கி.மீ தூரம் சேஷன் ஓட்டிச்சென்றுள்ளார். பணியில் அந்த அளவுக்கு ஈடுபாடும் ஆர்வமும் நேர்மையும் கொண்ட சேஷன், தமிழக ஆட்சியாளர்களுடன் அடிக்கடி உரசிக்கொண்டார். மத்திய அரசுப் பணியை அவர் தேடிச்சென்றது அதனால்தான்.

1989-ம் ஆண்டு ராஜீவ் காந்தியின் ஆட்சியில் திட்டக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட டி.என்.சேஷன், 1990-ம் ஆண்டு காங்கிரஸ் ஆதரவுடன் சந்திரசேகர் பிரதமராக ஆனபோது தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். தேர்தல் ஆணையத்துக்கு இருந்த அதிகாரத்தை மக்கள் புரிந்துகொண்டது, சேஷனின் பதவிக்காலத்தில்தான். வாக்காளர் அடையாள அட்டை முறையைக் கொண்டு வந்ததும் அவர்தான்.
‘எலெக்ஷன்’ என்றாலே சேஷனின் பெயர் நினைவுக்கு வருவது, அவர் உழைப்புக்கான அடையாளம்.