Published:Updated:

வாக்குச்சாவடிக்குள் நுழைந்து சிசிடிவி கேமராவைத் திருடிய மர்மக் கும்பல்! - வேலூர் பரபரப்பு

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. தங்களின் எம்.பி-யைத் தேர்ந்தெடுப்பதில் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

மர்ம நபர்கள் புகுந்த வாக்குச்சாவடி
மர்ம நபர்கள் புகுந்த வாக்குச்சாவடி

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலின்போது, பணப் பட்டுவாடா புகாரில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் மட்டும் நிறுத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், வேலூருக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. 

ஏ.சி.சண்முகம்
ஏ.சி.சண்முகம்

மொத்தம் 28 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். அ.தி.மு.க கூட்டணியில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் இருவரும் களத்தில் நிற்கும் பிரதான வேட்பாளர்கள். 

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், தினகரனின் அ.ம.மு.க ஆகிய கட்சிகள் தங்களின் வேட்பாளர்களைக் களமிறக்கவில்லை. நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி களமிறக்கப்பட்டுள்ளார். 

துரைமுருகன் - மகன் கதிர் ஆனந்த்
துரைமுருகன் - மகன் கதிர் ஆனந்த்

எனினும், அ.தி.மு.க-தி.மு.க இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. வழக்கம்போல் தொகுதி முழுவதும் வீடு வீடாக `ப’ வைட்டமின் கொடுத்து வாக்காளர்களைக் கவனித்திருக்கிறார்கள். தொகுதி முழுக்க பிரசாரமும் `அனல்’ பறந்தது.

நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரமும் ஓய்ந்த நிலையில், வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. மொத்தம் 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பதற்றமான 179 மையங்களில் துணை ராணுவப் படையினரோடு கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்

காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிகிறது. வாக்கு எண்ணிக்கை 9-ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் வேலூர் எம்.பி யார்? என்பது தெரிந்துவிடும். மக்கள் நாளை எடுக்கப் போகும் முடிவுதான் அ.தி.மு.க, தி.மு.க வேட்பாளர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிறது.

இந்த நிலையில், வாக்குப்பதிவு நடைபெறும் குடியாத்தம் காந்தி நகரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே இருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கேமராவை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய வாக்குச்சாவடி மையம்
மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய வாக்குச்சாவடி மையம்

கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 29, 30, 32 எண் கொண்ட மூன்று வாக்குச்சாவடிகள் இந்தப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. நள்ளிரவு புகுந்த கும்பல், கேமராவை திருடிக்கொண்டு பள்ளியில் இருந்த கம்ப்யூட்டர்களையும் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள். இதுதொடர்பாக, போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.