Published:Updated:

கோவா தேர்தல் கள நிலவரம்! - சவாலில் பா.ஜ.க... தெம்பில் காங்கிரஸ்... சிதறடிக்கும் ஆம் ஆத்மி...

ராகுல்காந்தி
பிரீமியம் ஸ்டோரி
ராகுல்காந்தி

கோவா மாநிலத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் 50 சதவிகித எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறிவிட்டார்கள்.

கோவா தேர்தல் கள நிலவரம்! - சவாலில் பா.ஜ.க... தெம்பில் காங்கிரஸ்... சிதறடிக்கும் ஆம் ஆத்மி...

கோவா மாநிலத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் 50 சதவிகித எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறிவிட்டார்கள்.

Published:Updated:
ராகுல்காந்தி
பிரீமியம் ஸ்டோரி
ராகுல்காந்தி

உலகளாவிய சுற்றுலாப்பயணிகளின் சொர்க்க பூமியான கோவா மாநிலத்தில், பிப்ரவரி 14-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. மேற்குக் கடற்கரையிலுள்ள இந்த மாநிலத்தின் அரசியல், எப்போதுமே நிலையற்றதாக இருக்கும் சூழலில், இந்தத் தேர்தலில் மக்கள் என்ன முடிவெடுக்கப்போகிறார்கள் என்பதே அரசியல் கட்சிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது!

கோவா தேர்தல் கள நிலவரம்! - சவாலில் பா.ஜ.க... தெம்பில் காங்கிரஸ்... சிதறடிக்கும் ஆம் ஆத்மி...

கோட்டைவிட்ட காங்கிரஸ்... பறித்துக்கொண்ட பா.ஜ.க!

40 உறுப்பினர்களைக்கொண்ட கோவா சட்டமன்றத்துக்கு, கடந்த 2017-ல் நடந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் வெற்றிபெற்றது. பா.ஜ.க 13 இடங்களிலும், மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி, கோவா ஃபார்வர்ட் கட்சி தலா மூன்று இடங்களிலும், சுயேச்சைகள் மூன்று இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் ஓர் இடத்திலும் வெற்றிபெற்றிருந்தன. ஆனால், 13 இடங்களை மட்டுமே கைப்பற்றிய பா.ஜ.க., துரிதமாகச் செயல்பட்டு, சில சுயேச்சைகள் மற்றும் உள்ளூர் கட்சிகளின் துணையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் பிரதாப் ராணேயின் மகன் விஷ்வஜீத் ராணே பா.ஜ.க-வுக்குத் தாவினார். அப்போது தொடங்கிய கட்சித்தாவல் கடந்த ஐந்து வருடங்களாகவே தொடர்ந்து நீடிக்கிறது.

கோவா தேர்தல் கள நிலவரம்! - சவாலில் பா.ஜ.க... தெம்பில் காங்கிரஸ்... சிதறடிக்கும் ஆம் ஆத்மி...

கோவா மாநிலத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் 50 சதவிகித எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறிவிட்டார்கள். 17 எம்.எல்.ஏ-க்களுடன் வலிமையாக இருந்த காங்கிரஸ் கட்சி, மாநிலத்தின் முக்கியத் தலைவர்கள் பலரையும் பா.ஜ.க-விடம் கோட்டைவிட்டு, தற்போது வெறும் இரண்டு எம்.எல்.ஏ-க்களை மட்டுமே வைத்திருக்கிறது. அத்துடன், பா.ஜ.க ஆட்சியமைக்க உதவியாக இருந்த மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியின் இரண்டு எம்.எல்.ஏ-க்களையும் பா.ஜ.க பறித்துக்கொண்டது.

சட்டமன்றத் தேர்தலில் இம்முறை தங்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என காங்கிரஸ் கட்சி நம்புகிறது. அதேசமயம், கோவா மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வளர்த்தால், எதிர்காலத்தில் பிரதமராகும் வாய்ப்புக்கு உதவும் என்று மம்தா பானர்ஜியிடம் அவரது அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருப்பதால், மம்தா பானர்ஜி எதிர்காலக் கனவுகளுடன் கோவாவில் களமிறங்கியிருக்கிறார். கோவா காங்கிரஸ் தலைவர் லூசினோ பெலைரோ உள்ளிட்ட சிலரை திரிணாமுல் காங்கிரஸுக்கு இழுத்த மம்தா, சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவரை காங்கிரஸ் கட்சி கண்டுகொள்ளாததால், அவரை நம்பிவந்த தலைவர்கள் பலரும் வெளியேறிவிட்டார்கள். அதனால் மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியுடன் ஒட்டிக்கொண்டு தேர்தலைச் சந்திக்கிறார்.

கோவா மாநிலத்தில் இம்முறை காங்கிரஸ், கோவா ஃபார்வர்ட் கட்சி, பா.ஜ.க., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி, ஆம் ஆத்மி என்று பெரிய படையே தேர்தல் களத்தில் நிற்கிறது. முக்கியத் தலைவர்கள் பலரும் வெற்றியைக் கைப்பற்ற வியூகம் அமைத்துச் செயல்பட்டுவருகிறார்கள்.

காங்கிரஸ் மீது அனுதாபம்... சவாலைச் சந்திக்கும் பா.ஜ.க!

கோவா மாநில அரசியல் விமர்சகர் பிரபாகர் டிம்ப்ளேவிடம் பேசினோம். ‘‘கோவா மாநிலத்தில் இம்முறை புதிதாக ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகள் களமிறங்கியிருக்கின்றன. அவர்களுக்கு மக்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கும் என்பது தெளிவாகவில்லை. கோவாவில் 66 சதவிகிதம் இந்துக்கள் இருந்தாலும், 25 சதவிகிதம் உள்ள கிறிஸ்தவர்களே வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்.எல்.ஏ-க்களை ஆளுங்கட்சி இழுத்திருப்பது தொடர்பாக, காங்கிரஸ் மீது மக்களிடம் அனுதாபம் இருக்கிறது. அதை அவர்கள் அறுவடை செய்யும் முயற்சியில் இருக்கிறார்கள்.

இம்முறை பா.ஜ.க-வுக்கு வெற்றி எளிதாகக் கிடைத்துவிடாது. கடுமையான சவாலைச் சந்திக்க வேண்டியிருக்கும். கடந்த சில ஆண்டுகளில் அக்கட்சி கொண்டுவந்த சில திட்டங்களும்கூட மக்களை ஆத்திரமடையவைத்திருக்கின்றன. குறிப்பாக, மெலவுலி என்ற கிராமத்தில் ஐஐடி அமைத்தால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என ஆதிவாசி மக்கள் எதிர்க்கிறார்கள். இது தேர்தலில் எதிரொலிக்கும். தவிர, பா.ஜ.க-வுக்குள் முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சருக்கு இடையே நடக்கும் கோஷ்டிப்பூசலும் தொண்டர்களைச் சோர்வடைய வைத்திருக்கிறது. முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகனுக்கு பா.ஜ.க சீட் கொடுக்காமல் புறக்கணித்திருப்பதும், கட்சியினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதையெல்லாம் சமாளிக்கவேண்டிய பொறுப்பு பா.ஜ.க-வுக்கு இருக்கிறது’’ என்றார்.

கோவா தேர்தல் கள நிலவரம்! - சவாலில் பா.ஜ.க... தெம்பில் காங்கிரஸ்... சிதறடிக்கும் ஆம் ஆத்மி...

உற்சாகத்தில் ஆம் ஆத்மி!

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் சரிவைப் பயன்படுத்திக் காலூன்றியதுபோல, கோவா மாநிலத்திலும் வேரூன்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். அதற்காக கோவாவில் தங்கியிருந்து பிரசாரம் செய்கிறார். தங்கள் கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற்றால், வேறு கட்சிக்குத் தாவ மாட்டார்கள் என்பதே அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரத்தின் ஹைலைட். அவர் அறிவித்த திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. கோவா மாநிலத்தில் பெரும்பான்மையாக இருக்கும் பண்டாரி சமுதாயத்தைச் சேர்ந்த அமித் பாலேகர், முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது ஆம் ஆத்மி கட்சிக்கு சாதகமாக அமையும் என்று கருதப்படுவதால், அக்கட்சியினர் உற்சாகமாக இருக்கிறார்கள்.

இதற்கிடையே, கடந்த முறைபோல இம்முறையும் தங்கள் எம்.எல்.ஏ-க்கள் விலைபோய்விடக் கூடாது என்பதில் காங்கிரஸ் கவனம் செலுத்துகிறது. அதனால், காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரும் வேறு கட்சிக்குத் தாவ மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள வைக்கப்பட்டிருக்கிறார்கள். தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று கோவா ஃபார்வர்ட் கட்சியும், மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியும்கூட அறிவித்துள்ளன.

எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது!

சிறிய மாநிலமான கோவாவில், அரசியல் கட்சிகளைத் தாண்டி தனிமனிதர்களுக்கான செல்வாக்குதான் அதிகம். அந்த வகையில், தேர்தலையொட்டி நடந்த கட்சி மாறும் படலங்களால், காங்கிரஸ் கட்சி ஓரளவு பலம்பெற்றிருக்கிறது. அதேநேரத்தில் அதிருப்தி அலையைச் சமாளிக்க முடியாத பா.ஜ.க., நலத் திட்டங்கள், புதிய வாக்குறுதிகள் மூலம் தப்பிக்க முயன்றுகொண்டிருக்கிறது. கடந்த தேர்தலைப் போலவே இந்த முறையும் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்பதையே கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. ஒருவேளை காங்கிரஸ், அதிக எண்ணிக்கையிலான இடங்களைக் கைப்பற்றும் பட்சத்தில், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியால் கோவாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைய வாய்ப்பிருக்கிறது. ஆனால், காங்கிரஸின் வாக்குகளைச் சிதறடிக்கும் சக்தியாக ஆம் ஆத்மி களத்திலிருப்பதால், காட்சிகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.

கொண்டாட்டத்துக்குப் பேர்போன கோவா மாநிலத்தில், ஆட்சியைக் கைப்பற்ற அரசியல் கட்சிகளுக்கிடையே பல்முனை யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது. முடிவெடுக்கவேண்டிய மக்களோ அனைத்தையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் மௌனத்துக்குப் பின்னால் என்ன இருக்கிறதோ?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism