Published:Updated:

குஜராத்தில் பா.ஜ.க... இமாச்சலில் காங்கிரஸ்... வெற்றியைச் சாத்தியப்படுத்தியது எப்படி?

மோடி
பிரீமியம் ஸ்டோரி
News
மோடி

வெற்றியைச் சாத்தியப்படுத்தியது எப்படி?

நடந்து முடிந்த இரண்டு மாநிலத் தேர்தல்களில், ஆளுக்கு ஒன்றாக ஜெயித்திருக்கின்றன பா.ஜ.க-வும் காங்கிரஸும். அதிகம் கவனிக்கப்பட்ட குஜராத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது பா.ஜ.க. இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சிக் கொடியேற்றிருக்கிறது காங்கிரஸ் கட்சி. இரண்டு கட்சிகளும் வெற்றிகளைச் சாத்தியமாக்கியது எப்படி?

குஜராத்தில் வீசிய மோடி அலை!

பா.ஜ.க-வின் இரு பெரும் தூண்களான மோடி, அமித் ஷாவின் சொந்த மாநிலம் குஜராத். இங்கு மொத்தமுள்ள 182 தொகுதிகளில், 156 தொகுதிகளைப் பெற்று வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்திருக்கிறது பா.ஜ.க. இதுவரை நடந்த குஜராத் சட்டமன்றத் தேர்தல்களில், இத்தனை தொகுதிகளை எந்தக் கட்சியும் வென்றதில்லை. 27 ஆண்டுக்கால பா.ஜ.க ஆட்சியில், வேலைவாய்ப்பின்மை, மோசமான சுகாதாரக் கட்டமைப்பு, பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளின் மோசமான நிலை, சுமாரான கல்வித்தரம், பரவலான ஊழல் என மக்களை நேரடியாக பாதிக்கும் பல்வேறு பிரச்னைகள் இருந்து வருகின்றன. இவையெல்லாம் குஜராத் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும், மோடியின் பிம்பம் அவற்றை மறக்கடிக்கச் செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

குஜராத்தில் பா.ஜ.க... இமாச்சலில் காங்கிரஸ்... வெற்றியைச் சாத்தியப்படுத்தியது எப்படி?

கிட்டத்தட்ட 30 பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோக்கள் என குஜராத் முழுக்க சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார் மோடி. `உலக அளவில் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்திருக்கும் பிரதமர் மோடி ஒரு குஜராத்தி. இது ஒவ்வொரு குஜராத்திக்கும் பெருமை’ என்று மோடியை முன்வைத்தே பா.ஜ.க-வினர் வாக்கு சேகரித்தனர். டிசம்பர் 1-ம் தேதி சுமார் ஐந்து மணி நேரம், காரில் நின்றபடி கையசைத்துக்கொண்டே 10 லட்சத்துக்கும் அதிகமானோரை மோடி சந்தித்தது பா.ஜ.க-வுக்குப் பெரும் சாதகமாக மாறியது. அமித் ஷாவும் தன் பங்குக்கு மதம் சார்ந்த விஷயங்கள், பாதுகாப்பு சார்ந்த விஷயங்களைப் பேசி வாக்கு சேகரித்தார். இழுபறி நிலை கண்டறியப்பட்ட தொகுதிகளில், புதியவர்களுக்கு வாய்ப்பளித்தது பா.ஜ.க. தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க-வின் இந்தத் திட்டம் நல்ல பலனளித்திருக்கிறது. கடந்த தேர்தலில் 49.05% வாக்கு சதவிகிதம் பெற்றிருந்த பா.ஜ.க., இந்த முறை 52.5% சதவிகித வாக்குகளை அறுவடை செய்திருக்கிறது. `பண பலமும் அதிகாரமும் பா.ஜ.க-வின் மாபெரும் வெற்றியைச் சாத்தியப்படுத்தியிருக்கின்றன’ என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

குஜராத்தில் பா.ஜ.க... இமாச்சலில் காங்கிரஸ்... வெற்றியைச் சாத்தியப்படுத்தியது எப்படி?

தேசியக்கட்சி ஆகிவிட்ட ஆம் ஆத்மி!

காங்கிரஸைப் பொறுத்தவரை, கட்சியின் முகமான ராகுல் காந்தியே குஜராத்தில் ஒரு நாள் மட்டும்தான் பிரசாரம் செய்தார். குஜராத் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஜக்தீஷ் தாகூரைத் தவிர, கட்சி மேலிடம் உட்பட எவருமே தீவிர பிரசாரங்களை மேற்கொள்ளவில்லை. கடந்த முறை 77 தொகுதிகளில் வென்றிருந்த காங்கிரஸுக்கு இந்த முறை கிடைத்தோ 17 தொகுதிகள் மட்டுமே. வலுவான எதிர்க்கட்சியாகச் செயல்படாததும், காங்கிரஸின் வாக்குகளை ஆம் ஆத்மி பிரித்ததுமே அந்தக் கட்சியின் படுதோல்விக்குக் காரணமாக இருக்கின்றன.

தேர்தலுக்கு முன்பு, ‘150 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வெல்லும்’ என்றார் அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆனால், ஐந்து தொகுதிகளில் மட்டுமே வென்றிருக்கிறது ஆம் ஆத்மி. சுமார் 12.9% வாக்குகளை அந்தக் கட்சி பெற்றிருக்கிறது. கடந்த முறை 41.4% வாக்குகளைப் பெற்றிருந்த காங்கிரஸின் வாக்குவங்கியை, இந்த முறை 27.3% ஆகக் குறைத்ததில் ஆம் ஆத்மிக்கு பெரும் பங்குண்டு. அதே நேரம், இந்தத் தேர்தல் மூலம் தேசியக்கட்சி அங்கீகாரம் பெற்றிருக்கிறது ஆம் ஆத்மி. டெல்லி, பஞ்சாப், கோவா, குஜராத் என நான்கு மாநிலங்களில் ஆறு சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருப்பதால் இந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

குஜராத்தில் பா.ஜ.க... இமாச்சலில் காங்கிரஸ்... வெற்றியைச் சாத்தியப்படுத்தியது எப்படி?

இமாச்சலைக் கைப்பற்றிய காங்கிரஸ்!

இமாச்சலில் ஆளும் பா.ஜ.க-வை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது காங்கிரஸ் கட்சி. அங்கு ஆறு முறை முதலமைச்சராக இருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரபத்ர சிங், கடந்த ஆண்டு காலமானார். பின்னர், அவரின் மனைவி பிரதீபா சிங்கை மாநிலத் தலைவராக்கியது கட்சி மேலிடம். இதனால், கட்சிக்குள் புகைச்சல்கள் ஏற்பட்டாலும், அதை வெகு விரைவிலேயே சரிசெய்தார் பிரதீபா. தேர்தலையொட்டி பா.ஜ.க-விலிருந்து சில தலைவர்கள் காங்கிரஸுக்குத் தாவினர். பிரியங்கா காந்தியும், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேந்திர பாகேலும் இமாச்சலில் தீவிர பிரசாரங்கள் மேற்கொண்டனர். இதுபோக, வாக்குறுதிகளையும் வாரி வழங்கி தனது ஆதரவைப் பெருக்கிக்கொண்டது காங்கிரஸ்.

ஆப்பிள் பேக் செய்யப்படும் அட்டைப்பெட்டிக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பு, ஆப்பிள் உற்பத்திச் செலவு அதிகரிப்பு உள்ளிட்டவை இமாச்சல் ஆப்பிள் விவசாயிகளை கோபமூட்டின. மேலும் கொரோனாவால், இமாச்சலின் பிரதான தொழிலான சுற்றுலாத்துறையும் இரண்டாண்டுக் காலம் முடங்கியது. 10 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலையிழந்தும், ‘அவர்களுக்கு எந்தவொரு நிதி உதவியையும் அப்போது ஆட்சிசெய்த பா.ஜ.க அரசு செய்யவில்லை’ என்ற குற்றச்சாட்டுகளும் கிளம்பின. இந்த அதீத அதிருப்தியைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட காங்கிரஸ், இமாச்சலில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 40 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது. இந்தியா முழுவதும் பல சறுக்கல்களைச் சந்தித்துவரும் காங்கிரஸுக்கு, இந்த வெற்றி புத்துணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!