
குஜராத் பா.ஜ.க-வின் பழங்குடியினப் பிரிவின் தலைவர் ஹர்ஷத் வாசவாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால், கட்சியிலிருந்து விலகி சுயேச்சையாகப் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருக்கிறார்
சூடுபிடித்திருக்கும் குஜராத் தேர்தல் களத்தில், பா.ஜ.க-வுக்கு எதிராக, காங்கிரஸும் ஆம் ஆத்மியும் பிரசாரம் மேற்கொண்டிருக்கின்றன. மறுபுறமோ, சொந்தக் கட்சியினரே பா.ஜ.க-வுக்கு எதிராகக் களமிறங்கியிருப்பது, தாமரைக் கட்சிக்குத் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. என்ன பிரச்னை?
பா.ஜ.க வேட்பாளர் பட்டியல்தான் பிரச்னைக்கு மூல காரணம். அந்தப் பட்டியலில், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், இந்நாள் எம்.எல்.ஏ-க்கள் என பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்களின் பெயர்கள் இடம்பெறாததால் கட்சிக்குள் கலகம் வெடித்திருக்கிறது. ஐந்து அமைச்சர்கள் உட்பட 38 எம்.எல்.ஏ-க்களுக்கு மறுவாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த சில எம்.எல்.ஏ-க்கள் கட்சியிலிருந்து விலகி, சுயேச்சையாக பா.ஜ.க-வையே எதிர்த்து நிற்கத் துணிந்துவிட்டனர். `இத்தனை காலம் கட்சிக்காகவும் குஜராத்துக்காகவும் உழைத்த எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸிலிருந்து தாவியவர்களுக்கும், நேற்று கட்சியில் இணைந்தவர்களுக்கும் வாய்ப்பு வழங்கியிருப்பது எந்த வகையில் நியாயம்?’ என்று கொந்தளிக்கின்றனர் அதிருப்தியாளர்கள்.

அமைச்சர்கள் பிரிஜேஷ் மெர்ஜா, ராஜேந்திர திரிவேதி, பிரதீப் பர்மார், அரவிந்த் ரையானி, ஆர்.சி.மக்வானா, சபாநாயகர் நிமாபென் ஆச்சார்யா, முன்னாள் முதல்வரும், இந்நாள் எம்.எல்.ஏ-வுமான விஜய் ரூபானி ஆகியோர் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள். ஏற்கெனவே 2021 செப்டம்பரில், முதல்வர் விஜய் ரூபானி உட்பட மொத்த அமைச்சரவையையும் மாற்றியமைத்தது கட்சி மேலிடம். அப்போது உருவான புகைச்சல் இப்போது அடுத்தகட்டத்துக்குப் போயிருக்கிறது.
குஜராத் பா.ஜ.க-வின் பழங்குடியினப் பிரிவின் தலைவர் ஹர்ஷத் வாசவாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால், கட்சியிலிருந்து விலகி சுயேச்சையாகப் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருக்கிறார். குஜராத்தில் 27 தொகுதிகள் பழங்குடியினருக்கானவை. எப்போதும் காங்கிரஸ் கோலோச்சும் இந்தத் தொகுதிகளில், இந்த முறை சாதித்துவிட வேண்டுமென்ற எண்ணத்திலிருந்த பா.ஜ.க-வுக்கு வாசவாவின் விலகல் பேரிடியாக அமைந்திருக்கிறது.
வதோதரா மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளில் ஒன்பது தொகுதிகளை கையில் வைத்திருக்கிறது பா.ஜ.க. ஆனால், அந்த மாவட்ட அரசியலில் முக்கியத் தலைவர்களாக இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ-க்களான தினேஷ் படேல், சதீஷ் படேல், ஆறு முறை எம்.எல்.ஏ-வான மது ஸ்ரீவஸ்தவ் ஆகியோர் சீட் கிடைக்காத வருத்தத்தில் கட்சியிலிருந்து விலகியிருப்பது பா.ஜ.க-வுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. மற்றொரு எம்.எல்.ஏ-வான கேசரி சொலான்கி, ஆம் ஆத்மியில் இணைந்துவிட்டார். இப்படியாக, கட்சியிலிருந்து முக்கியத் தலைவர்கள் கழன்றுகொள்ள, பதறியடித்து மத்திய இணையமைச்சர் ஹர்ஷ் சங்கவியை சமாதானப் புறாவாகக் குஜராத்துக்கு அனுப்பியிருக்கிறது மேலிடம். ஆனால், அவரைப் பார்க்க எந்தத் தலைவரும் தயாராக இல்லை. ``பா.ஜ.க ஒரு குடும்பம். அதிருப்தியிலிருப்பவர்களை வரும் நாள்களில் நிச்சயம் சமாதானப்படுத்துவோம்’’ என்று சங்கவி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

``கால் நூற்றாண்டுக்கு மேலாக ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க-மீது மாநிலம் முழுவதும் அதிருப்தி அலை வீசுகிறது. எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடுகளை வைத்துத் தயார்செய்யப்பட்ட ரிப்போர்ட் கார்டின் அடிப்படையில்தான் பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. காங்கிரஸ் வலுவாக இருக்கும் இடங்களில், அங்கிருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். பா.ஜ.க-வை எதிர்த்து பா.ஜ.க-வினரே சுயேச்சையாகப் போட்டியிடுவதால் அந்தக் கட்சியின் வாக்குகள் நிச்சயம் சிதறும்’’ என்கின்றனர் குஜராத் அரசியல் நோக்கர்கள்.
குஜராத் பா.ஜ.க-வில் வெடித்திருக்கும் கலகம், தேர்தலில் எதிரொலிக்குமா என்பது டிசம்பர் 8-ல் தெரிந்துவிடும்!