Published:Updated:

வேலூர் தேர்தல்: யார் எவ்வளவு செலவு செய்வீர்கள்? மா.செ-க்களிடம் பேப்பரை நீட்டிய தி.மு.க.

``எல்லோரும் ஒழுங்காகப் பணியாற்ற வேண்டும். யார் எவ்வளவு செலவு செய்ய முடியும் என்று நீங்கள் எனக்குச் சொல்லிவிடுங்கள்” என்று சொல்லியதும், மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் அடங்கிய ஒரு பேப்பரை அனைவரிடமும் கொடுத்தனர்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில், அந்தத் தொகுதியிலும் வெற்றியைப் பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் தி.மு.க உள்ளது. அதேநேரம், 37 தொகுதிகளில் கோட்டைவிட்டதுபோல் இந்தத் தொகுதியைக் கோட்டைவிட்டுவிடக் கூடாது என அ.தி.மு.க-வும் முயன்று வருவதால், தி.மு.க-வின் தேர்தல் வியூகம் வேகமெடுத்துள்ளது.

மாவட்டச் செயலாளர்கள்.
மாவட்டச் செயலாளர்கள்.

அண்ணா அறிவாலயத்தில்தான் தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இதுவரை நடைபெற்று வந்தது. நீண்டகாலத்துக்குப் பிறகு தி.மு.க-வின் இளைஞர் அணி அலுவலகமான அன்பகத்தில், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் கடந்த திங்கள் அன்று தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இது என்று ஏற்கெனவே மாவட்டச் செயலாளர்களுக்குச் சொல்லப்பட்டதால், அதுகுறித்த விஷயங்களே இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கடந்த 8 வருடங்களாக தி.மு.க ஆளும்கட்சியாக இல்லை. மத்தியிலும் அந்தக் கட்சிக்கு எந்தப் பதவியும் கிடைக்கவில்லை. இதனால், தி.மு.க நிர்வாகிகள் பலரும் பணநெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறார்கள். நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கே கடைசிக்கட்டத்தில் பல வேட்பாளர்கள் பணமில்லாமல் தவித்த கதையும் நடந்தது. அந்த நேரத்தில், தி.மு.க தலைமையிலிருந்து ஒவ்வொரு தொகுதிக்கும் பணம் அனுப்பி நிலைமையைச் சமாளித்தனர்.

இந்த நிலையில், அடுத்த மாதம் 5-ம் தேதி வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரே ஒரு தொகுதி என்பதால் ஆளும்கட்சி கரன்சியைத் தண்ணீராய்ச் செலவும் செய்யும், அதை ஈடுகட்ட தி.மு.க-வும் செலவுசெய்ய வேண்டிய நெருக்கடி உள்ளது. இந்த நிலையில், இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பணம் குறித்தே பிரதானமாகப் பேசப்பட்டுள்ளது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இதுகுறித்து தி.மு.க மாவட்டச் செயலாளர் ஒருவர் நம்மிடம், ``இந்தக் கூட்டத்தில் தலைவர் பேசினார். அதைத் தாண்டி முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, ஐ. பெரியசாமி ஆகியோர் பேசினார்கள். இந்தக் கூட்டத்தில் தேர்தல் செலவுகள் குறித்தே பேசப்பட்டது. `பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் தங்களுக்கு ஒதுக்கப்படும் பகுதியில் முழுவீச்சில் பணியாற்ற வேண்டும். ஆளும்கட்சியினர் பணம் கொடுப்பதை முடிந்த அளவு தடுத்துவிட்டாலே, வெற்றியைப் பெற்றுவிடலாம்.

கட்சியிலும் பணம் இல்லை. எனவே, மாவட்டச் செயலாளர்கள் அவர்களது மாவட்ட நிர்வாகிகளுக்கான செலவுகளை அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும். கடைசிக்கட்டத்தில் கட்சியிலிருந்து செலவுகளைப் பார்த்துக்கொள்ளலாம்' என்று தலைவர் கருத்து சொல்ல, மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் அமைதி மட்டுமே நிலவியது. அதேபோல், மாவட்டச் செயலாளர்களும் தங்களது நிலையை மறைமுகமாக தலைவரிடம் எடுத்துச் சொன்னார்கள். ஆளும்கட்சி முழு அதிகாரத்தோடு, பணபலத்தையும் சேர்த்தே இந்தத் தேர்தலில் பயன்படுத்தும். அதற்கு ஈடுகொடுக்க நாமும் தயாராக இருக்க வேண்டும். ஆனால், கண்டிப்பாக வெற்றி நமக்குத்தான் என்றும் சிலர் உற்சாகப்படுத்தியுள்ளார்கள்.

ஸ்டாலின தேர்தல் பிரசாரம்
ஸ்டாலின தேர்தல் பிரசாரம்

அதற்குத் தலைவர், `எல்லோரும் ஒழுங்காகப் பணியாற்ற வேண்டும். யார் எவ்வளவு செலவு செய்ய முடியும் என்று நீங்கள் எனக்குச் சொல்லிவிடுங்கள்' என்று சொன்னதும், மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் அடங்கிய ஒரு பேப்பரை அனைவரிடமும் கொடுத்தனர். ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் எவ்வளவு செலவு செய்யமுடியும் என்பதை அந்தப் பேப்பரில் எழுதிக்கொடுக்கச் சொன்னதும், வாய் பேச்சில் தப்பித்துக்கொள்ள நினைத்த மாவட்டச் செயலாளர்களுக்கு இது கொஞ்சம் கிலியை ஏற்படுத்தியது. இருந்தாலும், பலரும் ஒரு தொகையைக் குறித்துக் கொடுத்தனர். மேலும், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் மூன்று நாள்கள் தொகுதி முழுவதும் தலைவர் பிரசாரம் செய்யத் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் தெரிகிறது.

இறுதியாக துரைமுருகன் பேச்சு கொஞ்சம் உருக்கமாக இருந்தது. `என் மகனைக் களத்தில் இறக்கியுள்ளேன் என்று நினைக்காமல் தி.மு.க வேட்பாளர் வெற்றிபெற வேண்டும் என்று நீங்கள் எல்லாம் பணியாற்ற வேண்டும். பணம் இல்லாமல் நெருக்கடியில் நான் இருக்கிறேன். ரெய்டு நடந்த கதை எல்லாம் உங்களுக்குத் தெரியும். அதனால் என் நிலையை நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள். நான் தலைவரை மட்டுமே நம்புகிறேன். அவர் பார்த்துக்கொள்வார். வேட்பாளரை வெற்றி பெறவைக்க வேண்டிய பொறுப்பு அவரின் பொறுப்பு' என்று திமுக தலைவரின் தலையில் பொறுப்பைப் போட்டார்.

துரைமுருகன்
துரைமுருகன்

இதைக் கேட்டு, கூட்ட அரங்கில், `வெற்றி.. வெற்றி' என்று முழங்கியவர்கள் அரங்கைவிட்டு வெளியே வந்தவுடன், `எவ்வளவுதான் செலவு செய்ய முடியும்? துரைமுருகனிடம் இல்லாததா நம்மிடம் இருக்கப்போகிறது. இதை தலைவரிடம் நாம் எப்படி எடுத்துச்சொல்ல முடியும்' என்று புலம்பியுள்ளார்கள்.

உண்மையில் துரைமுருகனிடம் பணமிருந்தாலும் எடுக்க முடியாத நிலையில் இருக்கிறார். முதல்முறையாகத் தனது வாரிசைத் தேர்தல் களத்தில் நிறுத்தியுள்ளோம். அதில், வெற்றிபெறாமல் போனால் தனது வாரிசின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமே என்ற கவலையும் அவரிடம் உள்ளது.

தேர்தலை நிறுத்தாமல் இருந்திருந்தால், தி.மு.க கூட்டணி அலையில் தன் மகனும் கரைசேர்ந்திருப்பார். ஆனால், இப்போது இடைத்தேர்தல் போன்று இந்தத் தேர்தல் நடைபெறப் போகிறது. ஆளும்கட்சி அசுரபலத்தையும் காட்டும் இந்த நிலையில், வெற்றி என்பது எளிதல்ல என்ற கவலை துரைமுருகனிடம் இருக்கிறது. அதனாலேதான் நேரடியாகச் சொல்ல வேண்டிய செய்தியை தலைவரை வைத்துச் சொல்லவைத்துள்ளார் என்றார், மிகத் தெளிவாக.

வைரமுத்து புத்தக வெளியீடு
வைரமுத்து புத்தக வெளியீடு

கூட்டம் முடிந்த பிறகு தனி அறையில் ஸ்டாலினுடன் சில மூத்த நிர்வாகிகள் மட்டும் ஆலோசனை நடத்தியுள்ளார்கள். அப்போது, ``வைகோவுடன் நீங்கள் மேடை ஏறுவதை குறைத்துக்கொள்ளுங்கள். வைரமுத்து விழாவில் அவர் பேச்சுக்குப் பிறகு நீங்கள் பேசினால், அது பெரிதாக எடுபடாமல் போகிறது” என்று பட்டும்படாமல் சொல்லியுள்ளார்கள்.

எதற்காக இந்தக் கருத்தை ஸ்டாலின் காதில் போட்டார்கள் என்பதுதான் இப்போது தி.மு.க முக்கிய நிர்வாகிகளிடம் பேச்சாக உள்ளது.